மெல்போர்ன்: ஆன்லைன் டேட்டிங் இணையதளம் மூலம் ஆள் மாறாட்டம் செய்து ஆஸ்திரேலியப் பெண்ணின் கண்ணைப் பொத்தி உடலுறவு கொண்ட இந்தியாவை சேர்ந்த நபர் 2 ஆண்டுகளுக்கு சமூக சேவை செய்ய வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஒரு குடும்பப் பெண்ணுடன் ஐரோப்பாவின் கக்காசியன் (cacausian) இனத்தை சேர்ந்த ஜேமி என்பவர் ஆன்லைன் டேட்டிங் இணையத்தின் மூலம் அறிமுகமானார்.
அந்தப் பெண்ணுடன் சில மாதங்களாக கடலை போட்டு நட்பை வளர்த்து கொண்ட பின்னர், தன்னுடன் உல்லாசமாக இருக்க வருமாறு ஜேமி அந்தப் பெண்ணை அழைத்தார்.
ஆரம்பத்தில் சிறிது கூச்சம் காட்டிய அந்தப் பெண், ‘எறும்பூர கல்லும் கரையும்’ என்ற முதுமொழிக்கேற்ப, ஜேமியின் காதல் மொழிகளில் மனம் கசிந்துருகி, அவரது ஆசைக்கு பச்சை கொடி காட்டினார்.
இருவரும் பேசி வைத்து கொண்டபடி, ஒருநாள் ஜேமியின் முகவரிக்கு புறப்பட்ட அந்தப் பெண் தனக்கு இணையத்தில் அறிமுகமான செந்நிற தலைமுடியை கொண்ட அந்த ஐரோப்பிய கக்காசியன் வாலிபரை சந்திக்கப் போகும் இன்ப நினைவுகளில் மிதக்க தொடங்கினார்.
வழியில் அந்தப் பெண்ணுக்கு போன் செய்த ஜேமி, என் வீட்டுக்குள் நீ நுழைந்தவுடன் உன் கண்களை மூடிக் கொள்ள வேண்டும்.
அந்த நிலையிலேயே நாம் உல்லாசமாக இருக்க வேண்டும் என நிபந்தனை விதித்தார். அதற்கு அரை மனதாக சம்மதித்த அந்தப் பெண்ணும் தனது உள்ளங்கவர்ந்த கள்வனின் அறைக்குள் நுழைந்தார்.
ஏற்கனவே, கும்மிருட்டாக இருந்த அந்த அறையில் கண்ணை மூடிய நிலையில் இருந்த அந்தப் பெண்ணை தனது விருப்பம் போல் ஜேமி பயன்படுத்திக் கொண்டார்.
‘எல்லாம் முடிந்து’, இருவரும் சேர்ந்தாற்போல் குளியலறைக்குள் நுழைந்தபோது, ’இணையதளத்தில் பார்த்த புகைப்படத்தில் இருந்த உருவமும், சில நிமிடங்களுக்கு முன் தன்னை கட்டிலில் போட்டு புரட்டி எடுத்த உருவமும் வேறு’ என்பதை அறிந்த அந்தப் பெண் திடுக்கிட்டார்.
தனியாக வந்து மாட்டிக் கொண்டோம். இனி, இங்கிருந்து தப்பிக்கும் வரை ஆவேசத்தை கட்டுப்படுத்திக் கொண்டு, புத்திசாலித்தனமாக வெளியே போன பிறகு இவனை ஒரு கை பார்க்கலாம் என முடிவு செய்த அந்தப் பெண், தன்னை வஞ்சித்த அந்த நபரிடம் இருந்து விடுபட்டு வந்த பிறகு இந்த மோசடி குறித்து போலீசில் புகார் அளித்தார்.
இதனையடுத்து, ஜேமி என்ற போலிப் பெயரில் அந்தப் பெண்ணுக்கு காமவலை வீசிய இந்தியரான தீபக் தன்கர்(29) என்பவரை கைது செய்த போலீசார் கோர்ட்டில் அவர் மீது மோசடி மற்றும் கற்பழிப்பு குற்றச்சாட்டின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
2003-ம் ஆண்டு இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு வந்த தீபக் தன்கர் தற்போது அந்நாட்டு குடியுரிமை பெற்றுள்ளார்.
அவருக்கு மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளனர் என்பது வழக்கு விசாரணையின்போது தெரிய வந்தது. இந்த குற்றம் நிகழ்ந்தபோது தனது மனைவியுடன் ஏற்பட்டிருந்த பிரச்சனையும் அவரை இந்தத் தவறை செய்யும்படி தூண்டி விட்டது என தீபக்கின் வக்கீல் வாதாடினார்.
அவர் செய்த குற்றத்துக்கு நிச்சயமாக 5 ஆண்டு சிறை தண்டனை கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், தனது தவறை ஒப்புக் கொண்ட தீபக், தன்னை மன்னிக்குமாறு கோர்ட்டிடம் முறையிட்டதன்பேரில் 2 ஆண்டுகளுக்கு சமூகச் சேவை நிறுவனங்களுடன் இணைந்து சுமார் 200 மணி நேரம் சம்பளம் பெறாமல் பொதுத் தொண்டு ஆற்ற வேண்டும்.
மேலும், மனவளக் கலை பயிற்சி மற்றும் மனநல ஆலோசனை கூட்டங்களில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என நீதிபதி ஜேன் பேட்ரிக் தீர்ப்பளித்தார்.