நோயாளர் காவு கட்டிலில் நேற்றிரவு வெலிக்கடைச் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட விமல் வீரவன்சவின் மனைவி சசி வீரவன்ச இன்று காலை சாதாரணமான முறையில் நீதிமன்றத்துக்கு நடந்து வந்து அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.
இராஜதந்திரக் கடவுச்சீட்டில் போலியான தகவல்களை வழங்கிய குற்றச்சாட்டில், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணைகளைத் தவிர்ப்பதற்காக மாலபேயில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தார் சசி வீரவன்ச.
மருத்துவமனையில் அவரைக் கைது செய்த குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள், சட்ட மருத்துவ அதிகாரியின் ஆலோசனைக்கமைய அங்கேயே தொடர்ந்து தங்கியிருக்க அனுமதித்தனர்.
எனினும், மருத்துவமனைக்கு சென்ற நீதிவான், அவரை வெலிக்கடைச் சிறைச்சாலை மருத்துவமனைக்கு மாற்ற நேற்று உத்தரவிட்டார்.
இதையடுத்து, நேற்றிரவு அவர் வெலிக்கடைச் சிறைச்சாலை மருத்துவமனைக்கு க்கு நோயாளர் காவு கட்டிலில் படுத்த படுக்கையாக கொண்டு செல்லப்பட்டார்.
எனினும், இன்று காலை அவர், சிறை அதிகாரிகளால் கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.
அப்போது அவர் மிகச்சாதாரணமாக சிறைச்சாலை வாகனத்தில் இருந்து இறங்கி நடந்து வந்தது, செய்தியாளர்களையும், நீதிமன்றத்தில் இருந்த பொதுமக்கள், அதிகாரிகளையும், ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
நீதிவான் முன் நிறுத்தப்பட்ட சசி வீரவன்சவை மார்ச் 4 ம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து அவர், வெலிக்கடைச் சிறைக்கு மீண்டும் கொண்டு செல்லப்பட்டார்.
இன்று வீரவன்சவைப் பார்க்க நீதிமன்றத்துக்கு விமல் வீரவன்ச தனது மகளுடன் வந்திருந்தார்.