மன்னார் எமிழ் நகர் கிராமத்தில் கைவிடப்பட்ட நிலையில் உள்ள வீடு ஒன்றில் இருந்து எரியுண்ட நிலையில் பெண் ஒருவருடைய சடலத்தை நேற்று செவ்வாய்க்கிழமை மதியம் மீட்டுள்ளதாக மன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பெண் மன்னார் சின்னக்கடை பகுதியை வதிவிடமாக கொண்ட செபஸ்தியான் திரேசா(வயது-65) என இவரின் உறவினர்கள் அடையாளம் காட்டியுள்ளனர்.
இவர் எமிழ் நகர் பகுதியில் உறவினர்களுடன் வசித்து வந்த நிலையில் காலையில் வீட்டில் இருந்து வெளியில் சென்றுள்ளார். இவருக்கு ஒரு கால் இயலாத நிலையில் கம்பு ஊன்றியே சென்றுள்ளார்.
வெளியில் சென்ற பெண் வீடு திரும்பாமை குறித்து உறவினர்கள் தேடியுள்ளனர்.
இதன்போது மன்னார் எமிழ் நகர் கிராமத்தில் கைவிடப்பட்ட நிலையில் உள்ள வீடு ஒன்றில் இருந்து எரியுண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
அருகில் மண்ணெண்ணெய்யுடன் போத்தலும் காணப்பட்டது. இது தொடர்பில் உறவினர்கள் உடனடியாக மன்னார் பொலிஸாருக்கு தகவல் வழங்கினர்.
மன்னார் பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை ஆரம்பித்தனர்.
கை விடப்பட்ட வீட்டில் இருந்து சுமார் 50 மீற்றர் தொலைவில் உள்ள கடை ஒன்றில் மண்ணெண்ணெய் மற்றும் தீப்பெட்டி ஆகியவற்றை குறித்த பெண் வேண்டியுள்ளதாக தெரிய வந்து உள்ளது.
பெண் திருமணமாகாதவர் என்பதுடன் ஏற்கனவே தற்கொலைக்கு முயன்றுள்ளதாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.