உத்தரகாண்ட்: ஆமிர் கான், ஷாருக் கான், சல்மான் கான் ஆகியோர் நடித்த திரைப்படங்களை இந்துக்கள் பார்க்கக் கூடாது என பா.ஜ.க.வை சேர்ந்த பெண் சாமியார் சாத்வி ப்ராச்சி பேசியிருப்பதற்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பெண் சாமியார் சாத்வி ப்ராச்சி ஆமிர் கான், ஷாருக் கான் மற்றும் சல்மான் கான் ஆகியோர் நடிக்கும் திரைப்படங்கள் இந்து பெண்களை இஸ்லாமியர்கள் காதலித்து திருமணம் செய்வதை ஊக்கவிக்கும் வகையில் இருப்பதாக குற்றம் சாட்டினார்.
எனவே அவர்களது திரைப்படங்களை இந்துக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
சாத்வி ப்ராச்சி
கட்சிப் பணிகளில் இருந்து ராகுல் விடுப்பு எடுத்து இருப்பதை கடுமையாக விமர்சித்த அந்த பெண் சாமியார் ராகுல் காந்தி இந்திய பெண்ணை திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
பெண் சாமியாரின் இந்த பேச்சுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஆனால் பெண் சாமியாரின் பேச்சை நியாயப்படுத்தும் வகையில் மத்திய அமைச்சர் முக்தர் அபாஸ் நக்வி விளக்கம் அளித்துள்ளார்.
நாட்டில் எத்தனையோ சம்பவங்கள் நடப்பதாக கூறியுள்ள அவர் எதை ஏற்க வேண்டும், எதை ஏற்க கூடாது என மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே ஒவ்வொரு இந்துப் பெண்ணும் நான்கு குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என பெண் சாமியார் கூறிய கருத்தால் சர்ச்சை வெடித்த நிலையில் மீண்டும் அவர் சர்ச்சையில் சிக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.