காணாமல் போனவர்களை கண்டுபிடித்துத் தருமாறு கோரி திருகோணமலை ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக இன்று (03) காலை ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் சிவில் அமைப்புக்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இவ் ஆர்ப்பாட்டத்தில் 300ற்கும் மேற்பட்ட காணாமல் போனவர்களின் உறவினர்கள் பங்கெடுத்தனர்.
கடந்த அரசாங்கம் தமது பிரச்சினைக்கு தீர்வு வழங்கவில்லை என்றும் புதிய அரசாங்கமாவது பிரச்சினைக்கு தீர்வு வழங்கும் என நம்புவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டம் சுமார் 3 மணித்தியாலங்கள் நீடித்தது. ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர்களான ஜனார்த்தன், நாகேஸ்வரன் ஆகியோரும் திருகோணமலை நகர சபைத் தலைவர் கே.செல்வராசாவும் கலந்து கொண்டனர்.
இதேவேளை, காணாமல் போனவர்கள் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் 2015ம் ஆண்டுக்கான முதல் அமர்வு திருகோணமலை குச்சவெளி பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
மேலும் காணாமல் போன தமது உறவுகளை மீட்டுத் தருமாறு கோரி குச்சவெளி பிரதேச செயலகத்திற்கு முன்னால் சிலர் அமைதிப் போராட்டம் நடத்தினர்.
தமது உறவுகளின் புகைப்படங்கள் மற்றும் சுலோகங்களை கையில் ஏந்தியவாறு வாயை கறுப்புத் துணியால் கட்டிக் கொண்டு மக்கள் அமைதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.