சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகனான லெப்.யோசித ராஜபக்ச, குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் இன்று விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவுக்கு சகோதரர் நாமல் ராஜபக்சவுடன் சென்ற யோசித ராஜபக்சவிடம், காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இன்று காலை 8.40 மணி தொடக்கம், 10.40 மணி வரை சுமார் இரண்டு மணித்தியாலங்கள் இந்த விசாரணை இடம்பெற்றது.
கடந்த ஜனவரி 13ம் நாள் நாரஹேன்பிட்டியவில் உள்ள பொருளாதார நிலையத்தில் இலகுரக விமானம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பாகவே இந்த விசாரணை நடத்தப்பட்டது.
இந்த விமானத்தை தன்னிடம் யோசித ராஜபக்ச வாங்கியதாக, சிங்களத் திரைப்பட தயாரிப்பாளர் சந்திரன் ரட்ணம் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து விசாரணைக்காக லெப்.யோசித ராஜபக்சவை இன்று கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு வருமாறு சிறிலங்கா கடற்படைத் தளபதி ஊடாக, அழைப்பாணை அனுப்ப்ப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.