கொகிமா: நாகாலாந்தில், பாலியல் குற்றங்களுக்கு எதிராக ஒன்று திரண்ட சுமார் 5 ஆயிரம் பொதுமக்கள், சிறையில் இருந்த பலாத்கார குற்றவாளியை அடித்து உதைத்து வெளியே தூக்கிச் சென்றனர்.
அவனை நிர்வாணப்படுத்தி, தரதரவென இழுத்து சென்று நடு ரோட்டில் அடித்துக் கொன்றனர். டெல்லி மாணவி நிர்பயா கொலையில் முக்கிய குற்றவாளி, சிறையில் இருந்து அளித்த பேட்டியுடன் வெளியான ‘இந்தியாவின் மகள்’ ஆவண படத்தை மத்திய அரசு தடை செய்துள்ள நிலையில் நடந்துள்ள இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கொந்தளிப்பு: வங்க தேசத்தை சேர்ந்தவர் சையது பரித் கான் (35). கார் டீலராக இருந்த இவர், நாகாலாந்தில் சட்டவிரோதமாக குடியேறினார் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், திமாப்பூர் மாவட்டத்தில், நாகாலந்தின் பூர்வீக குடியினை சேர்ந்த பெண்ணை, அவர் கடந்த மாதம் 23ம் தேதி கடத்திச் சென்றார். அன்றைய தினமும், மறுநாளும், அந்தப் பெண்ணை பரித் கான் பலமுறை பலாத்காரம் செய்துள்ளார்.
இதனால், நாகாலாந்தின் பூர்வீக குடிமக்கள் கொந்தளித்தனர். கடும் நெருக்கடியை தொடர்ந்து, கடந்த மாதம் 25ம் தேதி போலீசார் பரித் கானை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இதையடுத்து, அவர் திமாப்பூரில் மத்திய சிறையில் அடைக்கப்பட்டான். கைது நடவடிக்கைகளால் சமாதானம் அடையாத நாகா பழங்குடியின மக்கள், தங்களது இனத்தவர்களை ஒன்று திரட்டினர்.
குற்றாவாளியை எங்களிடம் ஒப்படையுங்கள். நாங்கள் அவனுக்கு தண்டனை கொடுத்துக் கொள்கிறோம் என்று வலியுறுத்தி, கடந்த புதனன்று, திமாப்பூரில் போராட்டத்தை நடத்தினர்.
இதனால், வியாழன்று வன்முறையில் இறங்க திட்டமிட்ட பொதுமக்கள், சுமார் 5 ஆயிரம் பேரை திரட்டி பேரணியை நடத்தினர். ஆவேசம் நிறைந்த மக்கள் வெள்ளத்தை கண்டு காவல்துறை கலங்கிப் போனது.
சிறையில் இருந்து: திமாப்பூர் ஜெயிலை, பேரணி நெருங்கி வந்தபோது, சிறைக்குள் சென்ற சில இளைஞர்கள், பரித் கானை குண்டுக்கட்டாக வெளியே தூக்கி வந்தனர். சரமாரியாக அடித்தனர்; தெருவில் இழுத்து சென்றனர்.
கூட்டத்தினர் பலரும் அவனை கடுமையாக தாக்கினர். பரித்கான் அணிந்திருந்த சட்டை பேன்ட்டை கழற்றிய பொதுமக்கள், அவனை நிர்வாணப் படுத்தினர்.
அதை தொடர்ந்து, அடித்தபடி ஊர்வலமாக கொண்டு சென்றனர். திமாப்பூர் நகரில் முக்கிய பகுதியில் அவனை தூக்கிலிடுவது என்று திட்டமிட்டனர். ஆனால், அதற்குள் அவர் உயிர் பிரிந்து விட்டது.
துப்பாக்கிச் சூடு: எல்லாம் முடிந்த பின்னர் இறுதியாக அங்கு வந்த அதிரடிப் படையினர், துப்பாக்கியால் வானை நோக்கி சுடத் தொடங்கினர்.
வன்முறையை கட்டுப்படுத்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில், 20க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இதில் இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 4 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அப்போது நடந்த வன்முறையில் பஸ்கள் உட்பட பத்து வாகனங்கள் தீவைத்து கொளுத்தப்பட்டன; கற்களால் நொறுக்கப்பட்டன. திமாப்பூர் மாவட்டத்தில் 144 தடை உத்தரவும் அமல்படுத்தப்பட்டு, துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
மத்திய அரசு அதிர்ச்சி: நாகாலாந்தில் நடந்ததை போன்று, நாடு முழுவதும் பாலியல் பலாத்காரத்துக்கு எதிராக மக்கள் கொந்தளித்தால் என்னவாகுமோ என்ற அச்சத்தில் மத்திய அரசு இருப்பதாக கூறப்படுகிறது.
இதனால், நாகாலாந்தில் என்ன நடந்தது? ஏன் நடந்தது என்பது குறித்து எந்த தகவலும் விடுபட்டுப் போகாமல் விளக்கம் அளிக்குமாறு, மாநில அரசை உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
கலெக்டர், எஸ்.பி. சஸ்பெண்ட்
இந்த சம்பவம் குறித்து முதல்வர் டி.ஆர். ஜிலான்ங் தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அப்போது பணியில் அலட்சியமாக இருந்ததாக மாவட்ட ஆட்சியர், மாவட்ட போலீஸ் எஸ்.பி., சிறையின் தலைமை அதிகாரி ஆகியோரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிடப்பட்டது.
9 நாட்களில் நிறைவேற்றப்பட்ட தண்டனை
நாகாலாந்து பெண்ணை, பிப்ரவரி 23, 24 ஆகிய இரு தினங்களாக பரித் கான் பாலியல் பலாத்காரம் செய்தான். இதனால் கொந்தளித்துப் போன மக்கள், வெகுண்டு எழுந்து, வன்முறையை பிரயோகித்தனர்.
சம்பவம் நடந்து 9 நாட்களே ஆன நிலையில், அவனை அடித்து துவைத்து கொன்று விட்டனர். இதனை பல்வேறு தரப்பினரும் கண்டித்து வருகிறார்கள்.
டெல்லி மாணவி பாலியல் பலாத்கார சம்பவம் கடந்த 2012, டிசம்பர் 16 அன்று நடந்தது. இந்த வழக்கில் குற்றவாளிகளான 6 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அவர்களில் ஒருவன் சிறையிலேயே தற்கொலை செய்து கொண்டான். மீதம் 5 பேர் சிறையில் இருக்கிறார்கள். இந்த சம்பவம் நடந்தது, 2 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், அவர்களை விரைவில் தூக்கிலிட வேண்டும் என்கிற கோரிக்கையும் வலுத்து வருகிறது.
நாடு முழுவதும், பாலியல் பலாத்காரம் தொடர்பாக ஒரு லட்சத்துக்கு அதிகமான வழக்குகள் நிலுவையில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.