தமிழக வேளாண் துறை அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, அமைச்சர் பதலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அக்ரி கிருஷ்ணமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிவந்த நிலையில், இன்று அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் பரிந்துரையை ஏற்று, தமிழக ஆளுனர் ரோசைய்யா இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
கிருஷ்ணமூர்த்தி வகித்துவந்த வேளாண்மைத் துறையை தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் வைத்தியலிங்கம் கூடுதலாகக் கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வேளாண் பொறியியல் துறையின் திருநெல்வேலி மாவட்ட செயற்பொறியாளர் கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி ரயிலில் விழுந்து தற்கொலை செய்துகொண்டார்.
இந்தத் தற்கொலைக்கு தமிழக வேளாண் துறை அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்திதான் காரணம் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் முன்னதாகக் குற்றம்சாட்டியிருந்தார்.
வேளாண்துறை ஓட்டுநர் காலி இடங்களுக்கு நேர்மையான முறையில் நியமனங்களை மேற்கொண்டிருந்தார் முத்துக்குமாரசாமி.
ஆனால் வேளாண்துறை அமைச்சரின் உதவியாளர்கள் எனக் கூறிக் கொண்ட சிலர், தாங்கள் பரிந்துரைக்கும் நபர்களுக்கே பணியிடம் வழங்க வேண்டும் அல்லது நீங்கள் பணிவழங்கும் நபர்களிடம் இருந்து பணம்பெற்று தாருங்கள் என்று முத்துக்குமாரசாமிக்கு நெருக்கடி கொடுத்துள்ளனர்.
அமைச்சரின் உதவியாளர்கள் அவரை தொடர்ந்து தொலைபேசியில் அழைத்துத் தொந்தரவு செய்தனர் என்றும் அவர் குற்றம்சாட்டியிருந்தார்.
இதில் மனமுடைந்துதான் அவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் அமைச்சரை பதவி நீக்கம் செய்து விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தது.
இதையடுத்து, நேற்று முன்தினம் அவரது மாவட்டச் செயலாளர் பதவியை பறித்து ஜெயலலிதா உத்தரவிட்டார்.
இது தொடர்பாக இன்று பேட்டியளித்த தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின், அமைச்சரைப் பதவி நீக்கம் செய்து, கைது செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.
அமைச்சரவையிலிருந்து கிருஷ்ணமூர்த்தியை நீக்கியது மட்டும் போதாது; தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப் பதிவுசெய்து விசாரிக்க வேண்டுமென பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.