விடுதலைப்புலிகளுக்கு வெடிப்பொருட்கள் கடத்திய குற்றத்திற்காக இலங்கை அகதிகள் 3 பேருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
7 ஆண்டுகளுக்கு முன்னர், மதுரை சக்கிமங்கலத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமுக்கு வெளிமாநிலத்தில் இருந்து பயங்கர வெடிகுண்டுகள் தயாரிக்க பயன்படும் இரசாயன திரவம் கொண்டு வரப்பட்டதாகவும், அந்த திரவத்தை மண்டபம் அகதிகள் முகாமுக்கு கொண்டு சென்று பின்னர் படகு மூலம் இலங்கையில் உள்ள விடுதலைப்புலிகளுக்கு அனுப்ப இருந்ததாகவும் கியூ பிரிவு பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் பொலிஸார் சக்கிமங்கலம் அகதிகள் முகாமில் கடந்த 8.4.2008 அன்று சோதனை செய்தனர். அப்போது 250 மில்லி கிராம் இரசாயன திரவத்தை அவர்கள் கைப்பற்றினர்.
இதுதொடர்பாக விசாரணை நடத்தியதில், இரசாயன திரவத்தை இலங்கைக்கு அனுப்பும் முயற்சியில் அகதிகள் கண்ணன் (40), நவநீதகிருஷ்ணன் (38), எட்வெட் ஜெயக்குமார் (38), இலங்கைநாதன் (37) ஆகியோர் தொடர்பு பட்டிருந்தமை உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து அவர்களை பொலிஸார் கைது செய்தனர்.
இந்த வழக்கு மதுரை நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதில் எட்வெட் ஜெயக்குமாரை தவிர மற்றவர்களுக்கு பிணை கிடைத்தது. இதனையடுத்து இவர்களுள் சில நாட்களில் கண்ணன் என்பவர் இலங்கைக்கு தப்பிச் சென்று விட்டார்.
இந்நிலையில் வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், தலைமறைவான கண்ணனை தவிர மற்ற 3 பேருக்கும் தலா 7 ஆண்டு சிறைத்தண்டனையும், தலா 6ஆயிரம் ரூபா அபராதமும் விதித்து நீதிபதி என். வேங்கட வரதன் உத்தரவிட்டுள்ளார்.