அபுதாபி: உலகம் முழுவதும் பெட்ரோலிய எரிபொருள் மற்றும் பல்வேறு ரசாயன நச்சு புகைகளால் சுற்றுச்சூழல் மாசுபட்டு வருகிறது என்று உலக சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க, பல்வேறு ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.அத்தகைய ஆராய்ச்சியின் விளைவாக, சூரிய ஒளி மூலம் இயங்கி முதல் சோலார் விமானம் தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடன் தயாரிக்கப்பட்டது.
இந்த விமானத்தின் 72 மீட்டர் நீள இறக்கைகளில் 17 ஆயிரம் சூரிய தகடுகள் பொருத்தப்பட்டு உள்ளன. கிட்டத்தட்ட ஏர்பஸ் ஏ380 விமான வடிவில் இருக்கும் சோலார் விமானத்தில், எடையை குறைப்பதற்காக 2.3 டன் கார்பன் தகடுகள் பொருத்தப்பட்டு உள்ளன.
இந்த சோலார் விமானத்தை எரிபொருள் மூலம் இயக்காமல், முற்றிலும் சூரிய ஒளி மூலம் இயங்கும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளது.
பகல் நேரத்தில் சேமிக்கப்படும் சூரிய ஒளியை வைத்து, இரவு நேரத்திலும் அந்த விமானம் இயங்கும் வகையில் தொழில்நுட்பங்கள் செய்யப்பட்டு உள்ளன.
இத்தகைய சிறப்புமிக்க சோலார் விமானம் இன்று காலை 6.30 மணியளவில் அபுதாபி நகரில் தனது முதல் கட்ட சுற்றுப்பயணத்தை ஓமன் வழியாக பசிபிக் பெருங்கடல் பகுதியில் இருக்கும் நான்ஜிங், சீனா மற்றும் நாடுகளுக்கு 25 நாட்களில் செல்கிறது.
இந்த சூரிய சக்தி மூலம் இயங்கும் சோலார் விமானத்தின் வெற்றியை வைத்து, பூமி வெப்பமயமாவதைத் தடுத்து, எதிர்காலத்தில் பசுமை பூமியாக மாற்றுவதற்கு திட்டமிட்டு இருக்கிறோம் என்று சோலார் இம்பல்ஸ் நிறுவன தலைவர் பிக்கார்ட் கூறினார். இந்த சோலார் விமானம், அடுத்தகட்ட பயணத்தில் இந்தியா வழியாக பல்வேறு ஆசிய நாடுகளுக்கு செல்ல இருப்பதாக விமான நிறுவன வட்டாரம் கூறுகிறது. – See more at: http://tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=71698#sthash.gFRLRZPu.dpuf