13ஆவது திருத்தச்சட்டத்தை இந்தியாவே எமக்கு அளித்திருக்கின்றது. அதில் குறைபாடுகள் காணப்படும் பட்சத்தில் அதனை திருத்தியமைத்து முழுமையாக நடைமுறைப்படுத்தவேண்டிய தார்மீகப் பொறுப்பும் அவர்களுக்கு உள்ளது.
அதனை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் வலியுறுத்தவுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஜனாதிபதி மைத்திரிபால தமிழ் மக்களின் மனதை புண்படுத்தும் வகையில் எந்தவிதமான கருத்துக்களையும் வெளிப்படுத்தவில்லை எனக் குறிப்பிட்ட, அவர் காணாமல்போனவர்கள் தொடர்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கருத்துக்கள் மனவேதனையை ஏற்படுத்தியிருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பிலுள்ள முதலமைச்சரின் இல்லத்தில் சமகால நிலைமைகள் தொடர்பாக வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அச்செவ்வியின் முழு வடிவம் வருமாறு,
கேள்வி:- இந்தியப் பிரமர் நரேந்திரமோடி இந்த வாரத்தில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதுடன் வடமாகாணத்திற்கு வருகைதரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவருடைய சந்திப்பின்போது எவ்வாறான விடயங்களை முன்வைக்கவுள்ளீர்கள்?
பதில்:– இந்தியப்பிரதமர் நரேந்திரமோடி வடமாகாணத்திற்கு வருவதாக கூறப்படுகின்றது. நாங்கள் வடமாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தியிருக்கின்றோம்.
அகவே நாமும் எமது மக்களும் எதிர்நோக்கும் பிரச்சினைகளை, குறைபாடுகளை அவரின் கவனத்திற்குச் கொண்டு செல்வோம். குறிப்பாக 13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு கோருவோம்.
காரணம் 13ஆவது திருத்தச்சட்டத்தை இந்தியாவே எமக்கு அளித்திருக்கின்றது. ஆகேவே அதில் குறைபாடுகள் காணப்படும் பட்சத்தில் அதனை திருத்தியமைத்து முழுமையாக நடைமுறைப்படுத்தவேண்டிய தார்மீகப் பொறுப்பும் அவர்களுக்கு உள்ளது. எனவே அது தொடர்பிலான விடயங்கள் தொடர்பில் நாம் விரிவாக பேசுவோம்.
கேள்வி:- வடமாகாணசபை சுயாதீனமாக இயங்குவதற்கு முன்னர் காணப்பட்ட ஆளுநர், பிரதம செயலாளர் போன்றவர்கள் தடைகளை ஏற்படுத்துவதாக பகிரங்கமாக குற்றம் சாட்டியிருந்தீர்கள்.
ஆட்சிமாற்றத்தின் பின்னர் தற்போதைய நிலமைகள் எவ்வாறுள்ளன? நிருவாகத்தை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கான ஏது நிலைகள் காணப்படுகின்றனவா?
பதில்:– தற்போது இருக்கும் நிலைமையானது வரவேற்கத்தக்கது. கடந்த சனிக்கிழமை கூட நான் முல்லைத்தீவுக்குச் சென்றபோது தற்போதைய ஆளநருடன் இணைந்தே சென்றிருந்தேன்.
ஆரம்பத்தில் எமக்கு காணப்பட்ட அதிகாரங்களை முன்னாள் ஆளுநர் தனது கைகளில் எடுத்துச் செயற்பட்டார். ஆனால் தற்போதைய ஆளுநர் எமது செயற்பாடுகளுக்கு பக்கத்துணையாக காணப்படுவதுடன் எந்தவிதமான தலையீடுகளையும் மேற்கொள்ளதிருக்கின்றார்.
அந்தவகையில் உறவு சுமூகமாக அமைந்துள்ளது. இருப்பினும் எந்தளவிற்கு எமக்கான முழுமையான அதிகாரப்பகிர்வு கிடைக்கும். எந்தளவுக்கு முழுமை அடையப்போகின்றோம் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டியுள்ளது.
கேள்வி:- அண்மையில் வடக்கு விஜயம் செய்த புதிய ஜனாதிபதி மைத்திரிபாலவுடனான சந்திப்பு ஆக்கபூர்வமாக காணப்பட்டதா?
பதில்:- ஆம். அவருடனான சந்திப்பு மிகவும் ஆக்கபூர்வமாக அமைந்தது. எந்தவொரு தருணத்திலும் தமிழ் மக்களின் மனதை நோகடிக்கும் வகையில் எந்தவொரு சொல்லையும் அவர் கூறவில்லை.
அதற்கு மாறாக நண்பர் ரணில் விக்கிரமசிங்கவின் செயற்பாடு அமைந்திருக்கின்றது. முதலில் தன்னுடைய மருமகனை வடக்கிற்கு அனுப்பினர். அவர் இரணுவ முகாம்களை அகற்றப்போவதில்லை எனக் கூறினார்.
அதன் பின்னர் காணமல்போனோர் விடயத்தில் தற்போது ரணில் விக்கிரமசிங்க பதிவு செய்யப்பட்டவர்களைத்தவிர எவருமே முகாம்களில் இல்லை.
விடுதலைப்புலிகளே கொலை செய்திருக்க வேண்டும் என தமிழ் மக்களின் மனத்தை நோகடிக்கும் வகையில் கருத்துக்களை வௌிப்படத்தியிருக்கின்றார்.
காணாமல் போனவர்கள் தொடர்ச்சியாக தமது உறவுகளை கேட்டு கதறிக்கொண்டிருக்கின்றார்கள். அனைவருக்கும் முன்னிலையிலேயே பலர் கையளிக்கப்பட்டுள்ளாகள். அதற்கான பல சாட்சியங்கள் காணப்படுகின்றன.
அவ்வாறிக்கையில் அதுபோன்ற சம்பவங்கள் எதுவுமே நடைபெறவில்லை. புலிகளே கொலை செய்திருக்கவேண்டும் எனக் கூறியிருப்பதானது மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியிருக்கின்றது. மேலும் அவருக்குரிய பதிலை விரைவில் வழங்குவேன்.
கேள்வி:– வடமாகாண சபையில் இனப்படுகொலை தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை மத்திய அரசாங்கத்தினுள்ளும், தென்னிலங்கையிலும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கின்றது? அத்துடன் இனவாத அரசியலை முன்னெடுப்பதற்கும் ஏதுநிலைகளை உருவாக்கியுள்ளதாகவும் கூறப்படுகின்றதே?
பதில்:- இனவாதத்தை முன்னெடுப்பார்கள் என்பதற்காக நாம் உண்மையை கூறாமல் இருக்கமுடியாது. நாம் பிரேரணையில் கூறப்பட்டுள்ள அத்தனை விடயங்களும் உண்மையானவை.
அதில் எந்தவொறு மாற்றமோ, பொய்மையோ இல்லை. ஏனெனில் வௌிநாட்டு ஸ்தாபனங்கள் தாங்களாக நபர்களிடமிருந்து சாட்சியங்களிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் பிரகாரம் தயாரித்த அறிக்கையிலிருந்தே பிரேரணையில் உள்ளடக்கப்பட்ட விடயங்கள் காணப்டுகின்றன.
இதுவரைகாலமும் தமிழர்களுக்கு ஏற்பட்டிருக்கின்ற பிரச்சினைகளால், கஷ்டங்களால் எமது வாழ்க்கை எந்தவிதமான சூழலுக்கு வந்துள்ளது என்பதற்கான சகல விபரங்களையும் உள்ளடக்கி இந்த பிரேரணையை நாம் நிறைவேற்றிருயிருகின்றோம்.
நல்லிணக்கத்தை உண்மையிலேயே ஏற்படுத்த விரும்புகின்றார்கள் என்றால் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு முன்னதாக எமக்குள் காணப்படும் முரண்பாடுகளை அறிந்துகொள்வது அவசியம். எமக்கு என்ன நடந்தது என்பதை அவர்கள் தெரிந்து கொள்ளவேண்டும்.
ஆகவே எமக்கு நடந்த விடங்களை சிங்கள மக்களுக்கும், வௌிநாட்வர்களுக்கும் அறிவிப்பதற்கான நடவடிக்கையே அதுவாகும்.
குறிப்பாக இப்பிரேரணை மிகமுக்கினமான ஆவணமாகும். அந்த ஆவணத்தை அவர்கள் புரிந்து கொள்வேண்டும். அந்த ஆவனமில்லாது நாம் நல்லெண்ணத்தை ஏற்படுத்த முடியாது.
அந்த ஆவணத்தில் கூறப்பட்ட தன் பிரகாரம் சில விடயங்கள் நடைபெற்றிருக்கின்றன. அதனை அவர்கள் ஏற்றுக்கொள்வார்களாயின் நல்லிணக்கத்தை நோக்கிய அடுத்த கட்டத்திற்குச் செல்லமுடியும். இருதரப்புமே எதனையுமே மேற்கொள்ளாது நல்லிணக்கம் பற்றி பேசுவதில் அர்த்தமில்லை.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் அவ்வாறான விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன.
இருப்பினும் அது கிடப்பிலேயே உள்ளது. ஆனவே தமிழ்மக்களின் இன்னல்களை எடுத்துக்கூறும் சரித்திர ரீதியான ஆவணமாகும். அதனை இனவாதத்துடன் பார்ப்பதற்கு அப்பால் அதுவொரு சட்ட ரீதியான உருவாக்கப்பட்தொன்றாகும்.
ஆகவே அந்தப்பிரேரணை நிறைவேற்றப்பட்டதால் மீண்டும் இனவாத அரசியல் மேற்கொள்ளப்பட்டு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஆட்சிக்கு வருவார் அல்லது வாக்குகளை மேற்கொள்வார் என நான் கருதவில்லை. வெறுமனே அவையனத்தும் பூச்சாண்டி காட்டும் செயலாகும்.
கேள்வி:– வடமாகாண சபையின் முதலமைச்சர் அபேட்சகராக உங்களின் பெயர் பிரேரிக்கப்பட்டபோது விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை விட நீங்கள் ஆபத்தானவர் என தென்னிலங்கையில் பிரசாரம் செய்யப்பட்டது.
தற்போது பிரேரணை நிறைவேற்றத்தின் பின்னரும் அதேநிலைமை உருவெடுத்துள்ளதே?
பதில்:- நாம் வௌிப்படைத்தன்மையாக எடுத்த சில நடவடிக்கைகளை வைத்து ஆபத்தான நிலை காணப்படுகின்றனது என அவர்கள் கூறுவதற்கு காரணங்களாக அமைந்திருக்கலாம்.
அத்தோடு நாம் வேறு எதனையோ மேற்கொள்ளப்போவதாக எண்ணியிருக்கலாம். அதற்காகவே எம்மை கடந்த வருடம் முழுவதும் செயற்படுவதற்கு வழிவிடாது வைத்திருந்தார்கள்.
எவ்வராறாயினும் நாம் சட்டத்திற்கு உட்பட்டு உண்மைக்கு புறம்பாக இல்லாது எமது நடவடிக்கைளை மேற்கொண்டு வருகின்றோம். எந்த விதத்திலும் நாம் நாட்டைப் பிரிக்கவேண்டும் எனக் கூறவில்லை.
நாட்டைப் பிரிக்காது எமது தனித்துவத்தை பேணக்கூடிய வகையில் ஆகக் கூடிய அதிகாரப்பகிர்வு வழங்கவேண்டும் என்பதே எமது கோரிக்கை. அதனை அடிப்படையாக வைத்தே எமது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றோம். அவ்வாறிருக்கையில் எலும்பற்ற நாக்கால் எவரும் எதனையும் கூறலாம்.
கேள்வி:- இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள், யுத்தக்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்படவேண்டும் என்பதை கூட்டமைப்பும் வடமாகாண சபையும் வலியுறுத்தியுள்ள நிலையில் ஆட்சி மாற்றத்தின் பின்னரும் உள்ளக விசாரணையொன்றே முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற கருத்துக்கள் வலுத்துள்ளனவே?
பதில்:- கடந்த காலச் செயற்பாடுகளின் அடிப்படையில் உள்ளக விசாரணையால் எந்தவிதமான நன்மைகளும் கிடைக்கமாட்டாது என்பதில் எந்தவிதமான மாற்றுக்கருத்துக்களும் இல்லை. முரண்பாடுகளும் இல்லை.
சர்வதேச சமுகம் அது தொடர்பில் நடவடிக்கைளை முன்னெடுக்குமாயின் அது தொடர்பிலான நிபுணர்கள் வரவழைக்கப்படவேண்டும் என்பதை நாம் கோரவேண்டியிருக்கும்.
உள்ளுரில் விசாரணையொன்று முன்னெடுக்கப்படுமாயின் அதனை நெறிப்படுத்துவதற்கு முன்னாள் சர்வதேச நீதிமன்ற நீதிபதி கிறிஸ்தோபர் விரமந்திரியை தவிர வேறு ஒருவரும் இலங்கையில் இல்லை.
ஆனாலும் அவரின் முதுமை தற்போது அப்பணிகளை முன்னெடுப்பதற்கு இடமளிக்குமா என்பது கேள்விக்குறி. அந்நிலையில் அவ்வாறான செயற்பாடுகளை உள்ளக ரீதியில் முன்னெடுப்பதற்கு எவருமே இல்லை.
நீதியானவர்கள் இல்லை. ஏதோவொரு வகையில் பக்கச்சார்பாக நடக்க கூடியவர்களே உள்ளார்கள். எனவே பக்கச்சார்பற்ற விசாரணையொன்றை மேற்கொள்வதற்கு வௌிநாட்டு நிபுணர்களின் உதவி மிகமிக அவசியம்.