முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ, முன்னாள் கடற்படைத் தளபதி எட்மிரல் சோமதிலக்க தசநாயக்க ஆகியோர் நாட்டிலிருந்து வெளியேறுவதை தடுப்பதற்கு காலி நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

அவன்காட் தனியார் பாதுகாப்பு நிறுவனம் தொடர்பில் முன்னெடுக்கப்படுகின்ற விசாரணைகள் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்ததை அடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அவன்காட் தனியார் நிறுவனம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணை தொடர்பில் காலி நீதவான் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்பிக்கப்பட்ட போது அந்த நிறுவனத்தின்  பணிப்பாளர் சபை உறுப்பினரான கித்சிறி மஞ்சுல குமாரவின் கடவுச் சீட்டு முடக்கப்பட்டது.

அவன்காட் நிறுவனத்தின் ஆலோசகராக முன்னாள் கடற்படைத் தளபதி செயற்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் இன்று அறிவித்துள்ளது.

இதனைத் தவிர அவன்காட் நிறுவனத்தின் தலைவர் மேஜர் நிஷ்சங்க சேனாதிபதி வௌிநாடு செல்வதற்கு அனுமதி பெறுவதற்காக இன்று கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜராகவிருந்தார்.

இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சு,சட்ட மாஅதிபருக்கு அனுப்பியுள்ள கடித்தை நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறு நீதவான்  குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அறிவித்தார்.

இதனைத் தவிர அவன்காட் நிறுவனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்களான மேஜர் ஜெனரல் கே.பி.எகொடவெல மற்றும் மேஜர் விஜேகோன் பண்டார ஆகியோரின் வெளிநாட்டுப் பயணங்களை தடுக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

இன்றைய (09-03-2014) இலங்கை செய்திகள்

Share.
Leave A Reply