அண்மையில் கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கடற்புலி பிரிவின் தலைவி என்ற குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட முருகேசு பகீரதி எனும் பெண்ணை பிணையின் கீழ் விடுதலை செய்யுமாறு கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

pakeeratyபகீரதி முருகேசு

பிரான்சில் வசித்துவரும் பகீரதி, ஒரு பத்து ஆண்டுகாலம் கடற்புலிகள் பிரிவின் தலைவியாக செயலாற்றியவர் என நீதிமன்றத்தில் பயங்கரவாத தடுப்பு பிரிவின் அதிகாரிகள் கூறியிருந்தனர்.

வெளிநாடுகளில் உள்ள விடுதலைப் புலி முன்னாள் தலைவர்கள், அங்கிருந்தபடி புலிகள் இயக்கத்தை மீண்டும் கட்டியெழுப்ப முயல்கின்றனர் எனவும் அந்த அதிகாரிகள் குற்றஞ்சாட்டினர்.

இது சம்பந்தமாக பொலிசார் விசாரணைகளை செய்துமுடிக்கும்வரை இவரை பிணையில் விடலாமேயொழிய விடுதலை செய்யக்கூடாது என சட்டமா அதிபர் தரப்பில் நீதிமன்றத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

நீதிமன்ற விசாரணையின் முடிவில் பகீரதியை இரண்டு லட்சம் ரூபாய்க்கு சரீர பிணையில் வெளீயில் விட நீதிமன்றம் அனுமதியளித்தது.

ஆனால் பகீரதி வெளிநாடு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை எதிர்வரும் 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிமன்றம், அதன்போது விசாரணையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் பற்றி பொலிசார் தகவல் தர வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

பிரதிவாதி தரப்பில் சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி. தவராஜா ஆஜராகியிருந்தார்.

Share.
Leave A Reply