




மீனவர் பிரச்சினையை மனிதாபிமான முறையில் அணுக வேண்டும், 13ஐ அமுல்படுத்த வேண்டும்: மோடி
இலங்கை இந்திய மீனவர் பிரச்சினையை மனிதாபிமான அடிப்படையில் அணுக வேண்டும் என தெரிவித்த இந்திய பிரதர் நரேந்திர மோடி திருகோணமலையில் பெற்றோலிய உப மையத்தை அமைப்பதற்கான உதவிகளை செய்வதற்கு இந்தியா தயார் எனவும் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தி நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, சீஷல்ஸ், மொரீஷியஸ், இலங்கை ஆகிய இந்திய பெருங்கடல் நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
மொரீஷியஸில் தனது பயணத்தை முடித்துக் கொண்ட பிரதமர் மோடி இன்று அதிகாலை 5.25 மணிக்கு இலங்கையை வந்தடைந்தார். அவரை இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வரவேற்றார்.
ராஜீவ் காந்தி
கடந்த 1987ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்ட பிறகு, இலங்கைக்கு இந்திய பிரதமர் ஒருவர் விஜயம் மேற்கொள்வது இதுவே முதல்முறையாகும்.
4 ஒப்பந்தங்கள் கைசாத்து
இலங்கை வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு செங்கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இந்திய–இலங்கை உறவு குறித்து பிரதமர் மோடி முக்கியமான பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டார்.
வீசா நிடிப்பு, சுங்கத்துறை உள்பட 4 ஒப்பந்தங்கள் தொடர்பாக இந்தியா – இலங்கை இடையே கையெழுத்தானது.
இங்கு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி,
வீசா காலம்
இலங்கை ஜனாதிபதியாக பதவியேற்ற மைத்திரிபால சிறிசேன இந்தியாவிற்கு முதல் பயணம் செய்து எங்களை பெருமைபடுத்திவிட்டார்.
இருநாடுகள் இடையேயான வர்த்தக உறவுகள் மேம்படுத்தப்படும். எதிர்வரும் ஏப்ரல் மாதம் 14ஆம் திகதி முதல் இலங்கைக்கு சுற்றுலா பயணம் செல்பவர்களின் வீசா காலத்தை நீடிக்க உள்ளோம்.
புதுடெல்லியில் இருந்து கொழும்புக்கு நேரடி விமான சேவையை எயார் இந்தியா விரைவில் தொடங்கும். நாங்கள் இந்த ஆண்டு இறுதியில் இந்தியா- இலங்கை திருவிழாவை கொண்டாட ஏற்பாடு செய்து உள்ளோம்.
சுற்றுலா
சுற்றுலாவை மேம்படுத்த இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவோம். இலங்கையில் இராமாயணம் தொடர்பான இடங்களிலும், இந்தியாவில் புத்த மதம் தொடர்பான இடங்களிலும் சுற்றுலாவை அபவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
மீனவர் பிரச்சினை
மீனவர் பிரச்சினையை மனிதாபிமான அடிப்படையில் அணுக வேண்டும். இப் பிரச்சனை தொடர்பாக அரசு உதவியுடன் இருநாட்டு பிரநிதிகளும் பேச்சுவார்த்தையை தொடர வேண்டும்.
13 வது சட்டம்
இலங்கையில் 13 வது சட்ட திருத்தத்தை முழுமையாகவும், விரைவாகவும் செயல்படுத்துவது நல்லிணக்கத்தை ஏற்படுத்தும்.
இலங்கையில் தமிழர்கள் உள்பட அனைத்து தரப்பினருக்கும் சமமான வாழ்வுரிமையை உருவாக்க இந்தியா உதவும். பெட்ரோலிய பொருட்களின் மையமாக திருகோணமலையை மாற்ற இந்தியா உதவி செய்யும்.