ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை தொடர்கிறது…
குமார்: என் மனுதாரர் (ஜெயலலிதா) 16 வயதில் இருந்தே 200 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார். அறுபது, அறுபத்தைந்துகளில் முன்னணி நடிகையாக இருந்து அதிகமான வருமானங்கள் சம்பாதித்தார். அதையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை.
நீதிபதி: (பவானிசிங்கிடம்) 91 க்கு முன்பு குற்றவாளிகளின் வருமானம் எவ்வளவு?
பவானிசிங்: தெரியவில்லை.
நீதிபதி: (சிரித்துக்கொண்டே) சீனியரான பவானிசிங்குக்கு நிச்சயம் இது தெரியும் அறுபதுகளில் நடிகைகளின் சம்பளம் எவ்வளவு?
பவானிசிங்: (சிரித்துக்கொண்டே) தெரியவில்லை.
தொடர்ந்து பவானிசிங்கிடம் நீதிபதி குமாரசாமி சராமரியாக கேள்விகளைக் கேட்டார். அதற்கு பவானிசிங் பதில் சொல்லாமல் விழித்துக்கொண்டிருந்ததைப் பார்த்து நீதிபதி அதிருப்தி அடைந்தார்.
நீதிபதி: வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்குவிப்பு சதவிகிதம் எவ்வளவு?
பவானிசிங்: தெரியவில்லை. (மராடியிடம் கேட்டு 714% என்றார்)
நீதிபதி: 714% எப்படி வந்தது?
பவானிசிங்: தெரியவில்லை. (அன்பழகன் வழக்கறிஞர் சரவணன் பதிலளித்தார். வருமானத்திற்கு அதிகமான சொத்து வகுத்தல் வருமானம் பெருக்கல் 100 = 714% வரும். சிறப்பு நீதிமன்றம் வழங்கிய இறுதி தீர்ப்பில் 540% கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.)
நீதிபதி: எத்தனை எதிர் தரப்பு சாட்சிகளை விசாரித்தீர்கள்?
பவானிசிங்: (தயங்குகிறார். மராடியைக் கேட்டு…) 99 பேர்
நீதிபதி: அவர்களின் சாட்சியங்களை ஏன் ஏற்றுக்கொள்ளவில்லை?
பவானிசிங்: (மௌனம்)
குமார்: சிறப்பு நீதிமன்ற நீதிபதி சிறு வரியில் சொல்லி இருக்கிறார். அந்த சாட்சியங்கள் குற்றவாளிகளுக்கு வேண்டப்பட்டவர்களாம். ஆனால், எப்படி வேண்டப்பட்டவர்கள் என்று சொல்லவில்லை. இந்த சாட்சியங்கள் அனைத்தையும் வருமானவரித் துறை ஏற்றுக்கொண்டிருக்கிறது.
நீதிபதி: (பவானிசிங்கைப் பார்த்து) சிறப்பு நீதிமன்றத் தீர்ப்பை படித்துவிட்டீர்களா?
பவானிசிங்: படித்துவிட்டேன்.
நிதிபதி: பிறகு ஏன் பதில் சொல்ல மறுக்கிறீர்கள்.
பவானிசிங்: (மௌனம்)
பேராசிரியர் அன்பழகன் மீது கடும் கண்டனம்!
திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் தரப்பு வழக்கறிஞர் சரவணனின் வாதத்தில் இருந்து…
சரவணன்: உச்சநீதிமன்ற ஆணையில், அரசு வழக்கறிஞரை கர்நாடக அரசும், கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியும் கலந்து ஆலோசித்து நியமிக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறது.
ஆனால், கர்நாடக அரசு இவ்வழக்கின் அரசு வழக்கறிஞரை நியமிக்கவில்லை. அதனால், பவானிசிங் இந்த வழக்கில் ஆஜராவது உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது.
நீதிபதி: அந்த உச்சநீதிமன்ற உத்தரவைக் காண்பியுங்கள்?
சரவணன்: (உச்சநீதிமன்ற உத்தரவைக் காண்பிக்கிறார்.)
நீதிபதி: நீங்கள் கர்நாடக அரசுக்கு கோரிக்கை வையுங்கள். அல்லது, வழக்கு போடுங்கள். என்னிடம் ஏன் வந்திருக்கிறீர்கள்.
என்னை உச்சநீதிமன்றம் 3 மாதத்தில் விசாரித்து வழக்கை முடிக்கச் சொல்லி இருக்கிறது. நீதிமன்ற நேரத்தை வீணாக்காதீர்கள். (பவானிசிங்கை பார்த்து) உங்களை நியமித்தது யார்?
பவானிசிங்: தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை நியமித்திருக்கிறது.
நீதிபதி: (சரவணனிடம்) நீங்கள் அரசு வழக்கறிஞரை நியமிக்கப்போகிறீர்களா? ஏன் அரசியலைப் புகுத்துகிறீர்கள்? உங்கள் மனுதாரர் யார்?
சரவணன்: அன்பழகன்
நீதிபதி: அவர் எங்கே? அவரை ஆஜராகச் சொல்லுங்கள்.
சரவணன்: அவர் 92 வயதுடைய முதியவர். அவர் கோர்ட்டுக்கு வர முடியாது. கோர்ட்டும் விதிவிலக்கு அளித்திருக்கிறது. அவரின் சார்பாக நான் ஆஜராகி இருக்கிறேன். பவானிசிங்கை நீக்க வேண்டும். அதற்கான மனுவை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
நீதிபதி: (கோபத்துடன்) தேவையில்லாமல் மனு அளிக்க இது அரசியல் மேடை கிடையாது. என்னுடைய பணிக்கு இடையூறு செய்ததாக சி.ஆர்.பி.சி.345 ஐ பயன்படுத்த நேரிடும். நீங்கள் ரிட் மனு தாக்கல் செய்யுங்கள்.
சரவணன்: ஏற்கெனவே ரீட் மனு தாக்கல் செய்திருக்கிறோம். நாளை விசாரணைக்கு வர இருக்கிறது.
(இதையடுத்து காரசாரமான இந்த விவாதம் நிறைவு பெற்றது.)
நீதிபதி: அந்த மனுவின் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறேன்.
விறுவிறு விசாரணைகள் தொடரும்…
‘மேல்முறையீடு செய்ய ஜெயலலிதாவிடம் பணம் இல்லையா?’ (ஜெ. வழக்கு விசாரணை – 4)
திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் தாக்கல் செய்த ரிட் மனு நீதிபதி அப்துல் நசீர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அன்பழகன் சார்பாக நாகேஷ் வாதிட்டார்.
நாகேஷ்: 2004-ல் அன்பழகன் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவினால் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு பெங்களூருக்கு மாற்றப்பட்டது.
அப்போது உச்சநீதிமன்றம், அரசு வழக்கறிஞரை கர்நாடக அரசும், கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியும் ஆலோசித்து நியமிக்க வேண்டும் என்றது.
அதன்படி அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா நியமிக்கப்பட்டார். அவர் இந்த வழக்கில் இருந்து விலகியதை அடுத்து, பவானிசிங் நியமிக்கப்பட்டார்.
இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டதோடு, இவரது பதவி காலம் நிறைவு பெற்றது. ஆனால், இந்த மனுவின் மேல்முறையீட்டில் பவானிசிங் ஆஜராகி இருக்கிறார்.
இது உச்சநீதிமன்ற உத்தரவுக்கு முரணானது. அரசு வழக்கறிஞரை தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை நியமித்திருப்பதாகச் சொல்கிறார்.
தமிழகத்தில் குற்றவாளிகள் சார்ந்துள்ள அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற கட்சிதான் ஆட்சி செய்து வருகிறது. அவர்கள்தான் பவானிசிங்கை நியமித்து இருக்கிறார்கள். அரசு வழக்கறிஞரை நியமிக்கும் அதிகாரம் தமிழக அரசுக்கு கிடையாது.
நீதிபதி அப்துல் நசீர்: இதை அந்த நீதிமன்றத்திலேயே மனு அளித்து சொல்லலாமே.
நாகேஷ்: அந்த நீதிமன்றத்தில் சொன்னோம். அவர் ரிட் மனு தாக்கல் செய்ய சொன்னதால்தான் ரிட் மனு போட்டோம்.
அரசு வழக்கறிஞர் பவானிசிங் குற்றவாளிகளுக்கு சாதகமாக நடந்துகொண்டதால் அவரை சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்ஹா பலமுறை கண்டித்ததோடு, அபராதமும் விதித்திருக்கிறார்.
குற்றவாளிகள் சிறையில் இருந்தபோது எழுத்துபூர்வமாக ஜாமீன் கொடுக்கக் கூடாது என்று சொல்லிவிட்டு, வாதிடும்போது ‘ஜாமீன் கொடுக்கலாம். எனக்கு ஆட்சேபனை இல்லை’ என்றார். இதைக் கேட்டு நீதிபதி கண்டித்தும் இருக்கிறார். அவர் இந்த வழக்கை நேர்மையாக நடத்துவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இல்லை.
இதை கேட்ட நீதிபதி அப்துல் நசீர், “இந்த வழக்கின் மீது பதிலளிக்க 14 ஆம் தேதி ஆஜராக கர்நாடக அரசு தலைமை செயலாளருக்கும், சட்டத்துறை செயலாளருக்கும், தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை இயக்குநருக்கும், பவானிசிங்கிற்கும் நோட்டீஸ் அனுப்பப்படுகிறது” என்று உத்தரவிட்டார்.
kumar
குமாருக்கு நீதிபதி அறிவுரை
ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் குமார் இவ்வழக்கின் ஆரம்ப காலகட்ட விவரங்களை நீதிபதி குமாரசாமிக்கு விளக்கி வாதிட்டார்.
குமார்: 1996 ஆம் ஆண்டு சுப்ரமணியசாமி சென்னை மாவட்ட செஷன்ஸ் கோர்ட்டில் புகார் மனு அளித்தார்.
இந்தப் புகார் மனுவை விசாரித்த நீதிபதி ராமமூர்த்தி, இந்திய தண்டனை சட்டம் 202-ன் படி விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையின் ஏ.டி.ஜி.பி-யாக இருந்த லத்திகா சரணை விசாரிக்க ஆணையிட்டார்.
அதன்படி லத்திகாசரண் 300 பேரிடம் விசாரணை நடத்தினார். இந்த விசாரணை நடந்துகொண்டிருக்கும்போதே அன்றைய ஆளுங்கட்சிக்கு வேண்டப்பட்ட ஐ.ஜி-யான வீ.சி.பெருமாளை நியமித்து, என் மனுதாரரை குற்றவாளியாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சாட்சியங்களிடம் விசாரணை செய்யாமலேயே பெருமாளே புகார்தாரராக இருந்து எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தார். சென்னை செஷன்ஸ் கோர்ட் இந்த வழக்கை விசாரிக்க உத்தரவிட்டதே தவறு.
நீதிபதி: இதை எதிர்த்து ஏன் மேல் முறையீடு செய்யவில்லை. உங்கள் மனுதாரரிடம் பணம் இல்லையா? (இதனை சிரித்துக்கொண்டே கேட்டார்)
குமார்: (மௌனம்)
நீதிபதி: தமிழக ஊழல் மற்றும் கண்காணிப்புத் துறை அதிகாரிகள் புலன்விசாரணை செய்ய அனுமதி அளித்தை எதிர்த்து உங்கள் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை விசாரணை நடத்தலாம் என்று கூறி, உங்கள் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது. அந்தத் தீர்ப்பின் நகலை நான் காட்டவா? ஏன் இப்படி உண்மையை மறைத்து சொல்கிறீர்கள். காலையில் இருந்து மாலை வரை நீதிமன்றத்தின் நேரத்தையே வீணாக்கிவிட்டீர்கள்.
புலன்விசாரணை தவறு
குமார்: ஊழல் தடுப்பு போலீஸார் விசாரணையின்போது சட்ட விரோதமாக செயல்பட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் எந்த ஒரு வாக்குமூலத்தையும் பெறாமல் குற்றம்சாட்டப்பட்டவர்கள் வீட்டில் இல்லாதபோது கட்டடங்களைச் சோதனையிட்டனர்.
என் மனுதாரர்கள் மீது குற்றம் சுமத்த வேண்டும் என்ற எண்ணத்துடன் வருமானத்தைக் குறைத்து மதிப்பிட்டும், செலவுகளை மிகைப்படுத்தியும் காட்டியுள்ளனர். என் மனுதாரர்கள் எந்தவிதமான ஊழலிலும் ஈடுபடவில்லை.
நீதிபதி: இதையெல்லாம் சிறப்பு நீதிமன்றத்தில் சொல்லவில்லையா?
குமார்: சென்னை அமர்வு நீதிமன்றத்திலும், பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்திலும் ஒவ்வொன்றையும் எடுத்து கூறினோம். ஆனால், அதை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
குமரேசன் (அன்பழகன் தரப்பு வழக்கறிஞர்): (மிகவும் அழுத்தி) நீதிபதி சிவப்பா முன்னிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு விசாரணைக்கு வந்தபோது, ஜெயலலிதா சார்பில் வழக்கறிஞர் கபில்சிபில் வாதிட்டார். ஆனால், அதை நீதிபதி சிவப்பா ஏற்றுக்கொள்ளவில்லை.
நீதிபதி: (தலையில் கையை வைத்துக்கொண்டு) 1996-ல் நடந்த வழக்கு 2014 -ல் விசாரிக்கப்படுகிறது.
நீதிபதி: (குமாரிடம்) உங்கள் சீனியர்கள் எப்போது வருவார்கள்?
குமார்: திங்கட்கிழமை 12 ஆம் தேதி வருவார்கள்.
நீதிபதி: வழக்கை விரைந்து முடிக்க வேண்டும். அனைவரும் ஒத்துழைப்பு தாருங்கள்.
எஃப்.ஐ.ஆர் முறையாக பதிவு செய்யவில்லை!
குமார்: ஐபிசி 17, 18ன்படி ஊழல் வழக்கை முழுமையாக விசாரணை நடத்தி ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர்தான் எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்ய வேண்டும். ஆனால், இந்த வழக்கைப் பொறுத்தவரை ஐ.ஜி பெருமாளே ஸ்டேஷன் இன்சார்ஜாகவும், புகார்தாரராகவும் இருந்து எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்திருப்பது தவறானது.
நீதிபதி: ஐ.ஜி எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்யக் கூடாது என்று எந்த சட்டத்தில் கூறியிருக்கிறது?
குமார்: விசாரணை நடத்திய இன்ஸ்பெக்டர்தான் எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்வது வழக்கம்.
நீதிபதி: சில நேரங்களில் ஐ.ஜி கூட எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்யலாம்.
குமார்: ஹரியனா மாநில முன்னாள் முதல்வர் பஜன்லால் வழக்கில் எஃப்.ஐ.ஆர் முறையாக பதிவுசெய்யப்பட்டதால் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
அதேபோல இந்த வழக்கிலும் முறையாக எஃ.ஐ.ஆர் பதிவு செய்யவில்லை. என் மனுதாரர் ஜெயலலிதா மீது குற்றச்சாட்டு சுமத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தனி கவனத்துடன் செயல்பட்டார்கள்.
ஐபிசி 17, 18-ன்படி ஊழல் வழக்கை விசாரிக்க நியமிக்கப்படும் அதிகாரி எஸ்.பி பதவிக்கு இணையாக இருக்க வேண்டும்.
ஆனால், இந்த வழக்கில் தமிழக அரசால் நியமிக்கப்பட்ட நல்லமநாயுடு தமிழக ஊழல் மற்றும் கண்காணிப்புத் துறையின் டி.எஸ்.பி&யாக இருந்தார். அவரை இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக நியமித்தது தவறு.
நீதிபதி: விசாரணை குழுவில் யாரை சேர்த்துக்கொள்ளுவது என்பது அதிகாரிகளின் சுதந்திரம். அதில் நாம் எப்படி கேள்வி கேட்க முடியும்?
குமார்: விதிமுறை இருக்கும் பொது எப்படி மீறலாம்? மேலும் நல்லமநாயுடு தலைமையிலான விசாரணை குழு அன்றைய ஆளுங்கட்சியின் நிர்பந்ததால் உண்மைக்குப் புறம்பாக விசாரணை மேற்கொண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார்கள்.
அதன் பிறகு நல்லமநாயுடு பணி ஓய்வு பெற்றார். 2006-ல் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மீண்டும் நல்லமநாயுடுஆபீஸர் ஆன் ஸ்பெஷல் டியூட்டி என்ற பதவி உயர்வு கொடுத்து அவரின் கீழ் 1 ஐஜி., 1 எஸ்.பி., 2 டி.எஸ்.பி., 50 இன்ஸ்பெக்டர்கள், 150 போலீஸ்கள் கொண்ட ஒரு பெரும் படையை அமைத்தார்கள்.
தமிழகத்தில் எவ்வளவோ வழக்குகள் இருக்கும்போது இந்த ஒரு வழக்குக்கு இவ்வளவு பெரும் படையை அமைத்ததைப் பார்க்கும்போது அரசியல் பழிவாங்கும் நோக்கத்தில் செயல்பட்டிருப்பது உறுதியாகிறது.
நீதிபதி: அப்போது சட்டசபையில் உங்கள் கட்சி எல்.எல்.ஏ-க்கள் இல்லையா?
குமார்: (யோசித்தார்)
சரவணன் (அன்பழகன் வழக்கறிஞர்): இருந்தார்கள்.
குமார்: ஆமாம். 4 எம்.எல்.ஏ-க்கள் இருந்தார்கள். அப்போது எதிர்க்கட்சி என்று சொல்ல முடியாது.
கர்நாடக மொழிபெயர்ப்புத் துறைக்கு கண்டனம்!
குமார்: நீங்கள் 1996-ல் பதிவு செய்த குற்றசாட்டு ஆவணங்களை தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கச் சொல்லி ஆணையிட்டீர்கள். ஆனால், கர்நாடக மொழிபெயர்ப்புத் துறையில் அதற்கான ஆட்கள் இல்லை என்று ஆவணங்கள் திரும்பி வந்துவிட்டது.
நீதிபதி: மொழிபெயர்ப்புத் துறை இயக்குநருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்க வேண்டுமா? மொழிபெயர்ப்புத் துறையின் இயக்குநர் மாலை 3 மணிக்கு நேரில் ஆஜராகி சரியான விளக்கம் அளிக்க வேண்டும்.
ஆட்கள் இல்லாமல் எதற்காக தனியாக மொழிபெயர்ப்புத் துறை என்று இருக்கிறது. அனைத்து மொழியிலும் உள்ள ஆவணங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்து கொடுப்பது அந்தத் துறையின் பணி.
விறுவிறு வாதங்கள் தொடரும்…