28ஆண்டுக்குப் பின்னர், இந்தியப் பிரதமர் ஒருவரின் இலங்கைக்கான அரசுமுறைப் பயணம், இந்தியாவைப் பொறுத்தவரையில் மிகநேர்த்தியாகவே நடந்து முடிந்திருக்கிறது.
இந்தப் பயணத்தின் போது, இந்தியத் தரப்பினால் வழக்கத்துக்கு மாறான பாதுகாப்பு முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
அதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. முதலாவது காரணம், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு இருக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தல்.
மோடிக்கு இஸ்லாமிய தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் நீண்டகாலமாகவே இருந்து வந்திருக்கிறது.
அண்மைக்காலத்தில் அவருக்கு நேரடியான அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன.
எனவே, இலங்கைப் பயணத்தில் அவரது பாதுகாப்பில் இந்தியா முக்கிய கவனம் செலுத்தியது.
இரண்டாவது காரணம், கடைசியான 1987ஆம் ஆண்டு இலங்கைக்கு அரசுமுறைப் பயணத்தை மேற்கொண்டிருந்த இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்திக்கு, கொழும்பில் அளிக்கப்பட்ட கடற்படையினரின் அணிவகுப்பு மரியாதையின் போது, அவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல்.
அந்தச் சம்பவத்துக்குப் பின்னர் முதல் முறையாக இந்தியப் பிரதமர் ஒருவர், 28 ஆண்டுகள் கழித்து இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார்.
ராஜீவ்காந்தி இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் தலையீடு செய்ததால் தான், அவரைத் தாக்கியதாக, முன்னாள் கடற்படைச் சிப்பாயும், தற்போது நுகேகொடையில் வர்த்தக நிலையம் ஒன்றை நடத்தி வருபவருமான, ரோகண விஜிதமுனி, மோடியின் வருகையின் போது, இந்திய ஊடகங்களுக்கு குறிப்பிட்டிருந்தார்.
அப்போதைய சூழ்நிலைக்கும், நரேந்திர மோடியின் வருகை நிகழ்ந்த இப்போதைய சூழ்நிலைக்கும் வித்தியாசம் இருந்திருந்தாலும், மீண்டும் ஒருமுறை தனது பிரதமரின் பாதுகாப்பில் அலட்சியமாக இருக்கவோ, சமரசம் செய்து கொள்ளவோ இந்தியா தயாராக இருக்கவில்லை.
இந்த இரண்டு காரணங்களாலும், மோடியின் இலங்கைப் பயணத்தின் போது, உச்சக்கட்ட பாதுகாப்பு அளிக்கப்பட்டது.
அது சில வேளைகளில், இலங்கைப் படையினரது பாதுகாப்பு இறைமை எல்லைகளையும் தாண்டியதாகவும் இருந்திருந்தது.
இந்தியப் பாதுகாப்பு அதிகாரிகளின் மேலாதிக்கத்தை அவரது கொழும்பு, அநுராதபுர, தலைமன்னார், யாழ்ப்பாணப் பயணங்களின் போது, தெளிவாகவே உணர முடிந்தது.
அதேவேளை, நரேந்திர மோடி கடந்த 10 ஆம் திகதி சீஷெல்ஸுக்கு பயணத்தை ஆரம்பிக்க முன்னதாகவே, இந்தியா தனது இரண்டு விமானம் தாங்கிப் போர்க்கப்பல்கள், ஏழு போர்க்கப்பல்களைக் கொண்டு, இந்தியப் பெருங்கடலில் ஒரு பாதுகாப்பு வலயத்தை உருவாக்கியிருந்தது.
போர் விமானங்கள், ஏவுகணைகள், கண்காணிப்பு விமானங்கள், ரேடார்கள் என்று இந்தியா தன்னிடமுள்ள அனைத்து நவீன பாதுகாப்பு வசதிகளையும், இதற்காக பயன்படுத்தியது.
இலங்கைக்கு அப்பாலுள்ள கடற்பகுதியில், இந்திய நீர்மூழ்கிகளும், ரோந்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.
கொச்சியில் உள்ள இந்தியக் கடற்படைத் தளத்திலிருந்து, செயற்படுத்தப்படும் வகை யில், இந்த வெளிப்புறப் பாதுகாப்பு வலயம் உருவாக்கப்பட்டிருந்தது.
அதேவேளை, மோடியுடன் நிழல் போலத் தொடரும் இன்னொரு பாதுகாப்பு வலயமும் இந்திய பாதுகாப்புப் பிரிவினரால் உருவாக்கப்பட்டது.
கொழும்புக்கு வெளியே மோடியின் பயணங்களுக்கு இந்திய விமானங்களே முழுமையாகப் பயன்படுத்தப்பட்டன.
பாதுகாப்புக் காரணங்களுக்காக, இலங்கை விமானப்படையின் விமானங்கள் எவையும் பயன்படுத்தப்படவில்லை.
அண்மைக்காலங்களில், இலங்கைக்குள், இவ்வாறான பயணங்களுக்கு வெளிநாட்டு விமானங்கள் பயன்படுத்தப்பட்ட முதல் சந்தர்ப்பமாக இதனைக் குறிப்பிடலாம்.
பிரித்தானியப் பிரதமர் டேவிட் கெமரொன் யாழ்ப்பாணம் சென்ற போது கூட, இலங்கை விமானப்படையின் விமானம் மற்றும் ஹெலிகொப்டர்களையே பயன்படுத்தியிருந்தார்.
சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் பயணத்துக்குக் கூட, இவ்வாறான தனி விமானங்கள் ஏதும், பீஜிங்கில் இருந்து எடுத்து வரப்பட்டிருக்கவில்லை.
ஐ.நா. பொதுச்செயலர் பான் கீ மூன் 2009ஆம் ஆண்டு இலங்கை வந்திருந்த போதும், வன்னியில் போர் நடந்த பகுதியைச் சுற்றிப் பார்க்க விமானப்படை ஹெலிகொப்டர்களையே பயன்படுத்தியிருந்தார்.
ஆனால், இந்தியாவோ, தனது பிரதமர் கொழும்பு செல்வதற்கு முன்னதாகவே, மூன்று எம்.ஐ 8 ஹெலிகொப்டர்களையும், ஒரு சி-130 இராட்சத விமானத்தையும் அனுப்பிவிட்டது.
1990ஆம் ஆண்டு ஆரம்பத்தில், இலங்கையில் இருந்து இந்தியப் படைகள், வெளியேறிய பின்னர், மோடியின் பயணத்தின் போது, தான் மீண்டும் வடக்கு வான்பரப்பில் இந்திய விமானப்படையின் விமானம் மற்றும் ஹெலிகொப்டர்களின் நடமாட்டத்தை அவதானிக்க முடிந்தது.
கொழும்பில் பாதுகாப்பு அமைச்சின் மைதானத்திலிருந்து அநுராதபுரம் சென்று, அங்கிருந்து தலைமன்னார் சென்று, அங்கிருந்து யாழ்ப்பாணம் செல்லும் வரை, இந்திய விமானப்படையின் ஹெலிகொப்டர்கள் பயன்படுத்தப்பட்டன.
யாழ்ப்பாணத்திலிருந்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கொழும்புக்குத் திரும்புவதற்கு, சி-130 விமானம் பயன்படுத்தப்பட்டது.
சி-130 விமானம் இலங்கை விமானப்படையிடமும் உள்ளது.
ஆனால், இந்திய விமானப்படையின் இந்த விமானம் நவீனமானது, பிந்திய வடிவமைப்பு, மிகப்பெரியது.
பலாலி விமானப்படைத் தளத்தின் ஓடுபாதையில் தரையிறங்கிய மிகப் பெரிய விமானம் என்றால் இதனையே குறிப்பிடலாம்.
அதனால் தான், அது தரையிறங்கியிருந்த போது, எடுக்கப்பட்ட படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட, இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சையத் அக்பருதீன், பலாலி ஓடுபாதையில் மிகப் பெரிய பறவை என்று குறிப்பிட்டிருந்தார்.
மோடியின் யாழ்ப்பாண பயணத்தின் போது, பாதுகாப்புக் கெடுபிடிகள் அதிகமாகவே இருந்தமையை, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கடந்த வாரம் சபை அமர்வில் வருத்தத்துடன் கூறியிருந்தார்.
மோடியை வரவேற்று உரையாற்றுவதற்கே கடைசி நேரத்தில் தான் அனுமதி அளிக்கப்பட்டதாகவும், மாகாணசபை உறுப்பினர்கள் பலரும் பாதுகாப்புக் கெடுபிடிகளால் அசெளகரியங்களை சந்திக்க நேரிட்டதாகவும், மோடிக்கு கொடுப்பதற்காக எடுத்துச் சென்ற பரிசுப் பொருட்களைக் கூட பாதுகாப்பு அதிகாரிகள் அனுமதிக்கவில்லை என்றும் மிகுந்த வருத்தத்துடன் குறிப்பிட்டிருந்தார் சி.வி.விக்னேஸ்வரன்.
கீரிமலையில், மோடியின் யாழ். பயணம் முடிவுறும் கட்டத்தில் அவரை நெருங்கிச் சென்று கைகுலுக்கிய பல்கலைக்கழக மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டு இந்திய அதிகாரிகளால் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
அந்தளவுக்கு பாதுகாப்புக் கெடுபிடிகள் உச்ச நிலையிலேயே இருந்தன.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, யாழ்ப்பாணம் செல்லும் வெளிநாட்டுப் பிரமுகர்கள், தலைவர்கள் வழக்கமாகப் பின்பற்றும் நடைமுறைகளையும் பின்பற்றவில்லை.
யாழ்ப்பாணம் செல்லும் முக்கிய பிரமுகர்கள், நல்லூர் கந்தசுவாமி கோவிலுக்குச் சென்றே வழிபாடு நடத்துவது வழக்கம். ஆனால், மோடி நல்லூருக்குச் செல்லவில்லை.
இலங்கையில் உள்ள ஐந்து ஈச்சரங்களில் ஒன்றான கீரிமலையில் உள்ள நகுலேஸ்வரத்துக்குச் சென்று வழிபாடு செய்திருந்தார்.
வடஇந்தியாவில் முருக வழிபாடு இல்லை. சிவன் வழிபாட்டுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
அதனால், மோடி நகுலேஸ்வரத்துக்கு முன்னுரிமை கொடுத்திருக்கலாம்.
அல்லது, மோடியின் பயணம் இடம்பெற்ற நேரத்தில், நல்லூர் கந்தசுவாமி ஆலயம் மூடப்பட்டிருக்கும்.
குறிப்பிட்ட நேரத்துக்கு மட்டுமே திறக்கும் வழக்கம் கொண்டது என்பதாலும் மோடிக்காக நல்லைக் கந்தனின் கதவுகள் திறக்காமல் போயிருக்கலாம்.
அதைவிட, நல்லூரில் தரிசனம் செய்ய வேண்டுமானால், மேற்சட்டை அணிந்து செல்ல முடியாது. அதுவும், இந்தியப் பிரதமருக்கு ஒத்துவராத நடைமுறையாக இருந்திருக்கலாம்.
இதனால் தான், கீரிமலை நகுலேஸ்வரத்தை, அவரது வழிபாட்டுக்காக இந்திய அதிகாரிகள் தெரிவு செய்திருக்க வாய்ப்புகள் உள்ளன.
மோடி யாழ்ப்பாணத்திலோ, அநுராதபுரத்திலோ, தலைமன்னாரிலோ, அதிகபட்சமாக, மூன்று மணிநேரத்துக்கு மேலாக தங்கியிருக்கவில்லை.
அதுபோலவே, கொழும்பிலும் தொடர் சந்திப்புகளிலேயே நேரத்தைச் செலவிட்டிருந்தார்.
14ஆம் திகதி அதிகாலையில் கட்டுநாயக்கவில் வந்து தரையிறங்கியதில் இருந்து, 15ஆம் திகதி முன்னிரவில், கடைசியாக மஹிந்த ராஜபக் ஷவை சந்தித்து விட்டு வெளியேறும் வரை அவர் பம்பரமாக சுழன்று கொண்டு தான் இருந்தார்.
ஆனாலும், தொடர்பயணம், தொடர் சந்திப்புகள் என்று எதற்குமே சோர்வைக் காட்டாமல் இருந்தது அவரது சிறப்பியல்பு தான்.
அதுவும், 10ஆம் திகதி சீஷெல்சுக்கு புறப்பட்டது தொடக்கம், 16ஆம் திகதி அதிகாலை 12.30 மணியளவில் புதுடெல்லி விமான நிலையத்துக்கு திரும்பியது வரையில் 41 இற்கும் மேற்பட்ட சந்திப்புகளை மேற்கொண்டிருந்தார்.
எனினும், இந்த ஐந்து நாள் வெளிநாட்டுப் பயணத்தில், இலங்கைக்கான பயணமே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
அதேவேளை, இந்தியா தனது தலைவரின் தேவைக்காக, இலங்கையில் எதையும் செய்யும் நிலையில் இருக்கிறது என்பதையும் கூட நிரூபித்துள்ளது.
இதனிடையே இலங்கையும் இந்தியத் தலைவருக்காக, தனது மரபுகளை மீறத் தயாராக இருக்கிறது என்பதையும் உணர்த்தியிருக்கிறது.
உதாரணத்துக்கு, நரேந்திர மோடியை, வரவேற்க அமைச்சர் ஒருவர் சென்றாலே போதும் என்ற நிலையில், அதிகாலை வேளையில் கூட, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கட்டுநாயக்க விமான நிலையம் சென்றிருந்தது இந்திய அதிகாரிகளை உச்சி குளிர வைத்திருக்கிறது.
அதுபோலவே, வெளிநாட்டுப் பிரமுகர் ஒருவர் வருகை தந்திருந்தால் அவரை தனது இல்லத்தில் அல்லது செயலகத்தில் வரவேற்பது தான் ஜனாதிபதியின் மரபு.
வெளிநாட்டு ஜனாதிபதிகள் முக்கியமான சிலருக்கு விமான நிலையத்தில் வரவேற்பளிக்கச் செல்வதுண்டு.
உதாரணத்துக்கு சீன அதிபரை வரவேற்க, மஹிந்த ராஜகபக் ஷ கட்டுநாயக்க விமான நிலையம் சென்றிருந்தார்.
ஆனால், அநுராதபுரத்தில் நரேந்திர மோடியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வரவேற்கச் சென்றது மரபுகளுக்கு அப்பாற்பட்டது.
ஜனாதிபதி ஒருவர் தமக்குச் சமமான ஜனாதிபதி ஒருவரை வரவேற்கச் செல்வது வேறு. ஆனால், ஜனாதிபதி ஒருவர் பிரதமரை இவ்வாறு வரவேற்றது மரபுகளுக்கு முரணானது.
எனினும் இந்தியா விடயத்தில், இலங்கை ஒத்துப்போக விரும்பியதால் அந்த மரபு மீறல்கள் தேவைக்குரியதொன்றாகி விட் டன.