இலங்கையில் நடைபெற்ற இனவழிப்பு குறித்து சர்வதேச விசாரணை நடைபெறவேண்டும் என்ற தீர்மானம் வடக்கு மாகாண சபையில் எதிர்ப்பேதுமின்றி நிறைவேற்றப்பட்டபோது –

நாட்டில் நல்லிணக்கம் ஏற்படுவதற்கு உண்மைகள் கண்டறியப்படுவது அவசியம், எனவே உண்மைகளைக் கண்டறியும் அத்தகைய விசாரணைக்கான தீர்மானம் வரவேற்கத் தக்க நடவடிக்கையே என்ற அடுத்த நாள் அறிக்கை வெளியிட்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், இப்போது அத்தகைய தீர்மானத்தை நிறைவேற்றும் நடவடிக்கை தனக்கோ சம்பந்தன் ஐயாவுக்கோ தெரியாமல் நடந்த விடயம் என்று உண்மையை ஒப்புக்கொண்டிருக்கின்றார்.

“இப்போது இனவழிப்புத் தொடர்பான தீர்மானம் குறித்து குறைகூறும் சுமந்திரன், அந்தத் தீர்மானம் வடக்கு மாகாண சபையில் எதிர்ப்பேதுமின்றியே நிறைவேற்றப்பட்டவுடன், விழுந்தடித்துக்கொண்டு வரவேற்றமை ஏன்?

சம்பந்தர், மாவை ஆகியோரும் கூட அப்படித்தானா ‘விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை’ என்ற மாதிரி அந்தத் தீர்மானத்தை வரவேற்று அறிக்கை விட்டார்களா?” – இப்படி பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

அண்மையில் கனடாவுக்கு சென்றிருந்த சுமந்திரன் எம்.பி. அங்கு இவ்விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடல் ஒன்றில் கூறியவை வருமாறு:-

கேள்வி : வெளிநாடுகளில் புலம்பெயர் தமிழர்கள் அதிதீவிரமான நிலைப்பாட்டை எடுப்பது சில சிக்கல்களைக் கொண்டு வரும் என்று கூறியிருந்தீர்கள். சம்பந்தன் ஐயாவினால் வடக்கு முதலமைச்சர் பதவிக்குக் கொண்டுவரப்பட்டவர் விக்னேஸ்வரன்.

அவர் யுத்தகாலத்தில் இடம்பெற்றவை இனப்படுகொலை என்ற தீர்மானத்தை மாகாண சபையில் கொண்டு வந்திருக்கிறார். அப்படியென்றால் அது, ஒரு புறம் சம்பந்தன் ஐயா தாம் அரசுடன் இணைங்கிச் செயற்பட, மறுபுறம் அதே அரசுக்கு அழுத்தம கொடுக்கும் – ஓர் இரட்டை அணுகுமுறைத் தந்திரமா? நான் அத்தகைய ஏற்பாடாக இது இருக்குமோ என்று யோசிக்கிறேன்.

சுமந்திரன் :- அது அப்படியல்ல. அது எங்களுக்குத் தெரியாமல் நடந்த விடயம். அந்தத் தீர்மனம் எனக்கோ, சம்பந்தன் ஐயாவுக்கோ, மாவை அண்ணனுக்கோ தெரியாமல் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கேள்வி :– இது அவசர அவசரமாக நிறைவேற்றப்பட்டது என நினைக்கின்றீர்களா?

சுமந்திரன்:- இல்லை. இது விடயத்தில் முதலமைச்சருக்கும் கடும் அழுத்தம் இருந்தது. இந்தப் பிரரேரணையை முதலமைச்சர்தான் இதற்கு முன்னர் ஐந்து தடவைகள் இடைநிறுத்தித் தடுத்துவைத்திருந்தவர். இதைச் செய்யவேண்டாம் என்று தடுத்தவர்.

கடைசித் தடவையாக அவர் இதை நிறுத்தியபோது, அவருக்கு சபையில் ஒருவரும் ஆதரவு கொடுக்கவில்லை.

ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட அந்தச்சமயத்தில் இத்தகைய நடவடிக்கையை எடுக்கவேண்டாம் என்று தனியாக எழுந்து நின்று வாதிட்டு அவரே தடுத்துநிறுத்தியவர். அப்படி என்றால் தேர்தலுக்குப் பிறகு செய்வீர்களா என்று கேட்கப்பட்டது.

தேர்தலுக்குப் பின்னர் நானே இதை முன்னெடுப்பேன் என்று அங்கு வாக்குறுதி அளித்து அந்த தேர்தல் சமயத்தில் அந்தப் பிரேரணையைத் தடுத்தவர் அவரே. அதனால்தான் அப்படி நடந்தது.

கேள்வி :– அது சிக்கலை உருவாக்கியுள்ளது என்று நினைக்கின்றீர்களா?

சுமந்திரன்:- இல்லை. சிக்கல் உருவாகக்கூடிய சாத்தியக் கூறு ஓரளவு இருந்தது. ஆனால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதனை நாசூக்காகக் கையாண்டார். அது குறித்து ஒரு வார்த்தை கூட அவர் கூறவில்லை. ஓரிடத்திலும் அது பற்றிப் பேசவில்லை.

கேள்வி :- ஆனால் ரணிலினுடைய அணுகுமுறை…?

 

சுமந்திரன் :- ரணிலும் பத்து நாள்களாகப் பேசாமல் இருந்தவர். பிறகு ஏதோ பேசப் புறப்பட்டு, அது இப்போது ஒரு பெரிய பிரச்சினையாக மாறிவந்துள்ளது.

நாங்கள இரண்டு பேருடனுமே (பிரதமர் ரணில், முதலமைச்சர் விக்னேஸ்வரன்) பேசியிருக்கின்றோம். இரண்டு பேரையும் ‘குழந்தைப் பிள்ளைகளைப் போல சண்டை பிடிக்காதையுங்கோ!’ என்று சொல்லியிருக்கிறோம்.

நீங்கள் வளர்ந்தவர்கள் போல செயற்படவேண்டும் என்று நான் கூறியிருக்கிறேன் ரணிலுக்கு. ‘கிண்டர் கார்டன்’ (பாலர் வகுப்பு) சிறுவர்கள் போல இருவரையும் சின்னக் கதிரையில் வைத்துத்தான் விலக்குப் பிடிக்க வேண்டியிருக்கும் என்று நானே ரணிலிடம் கூறியிருக்கிறேன்.

அதற்கு ரணில் “அவர் அப்படிச் சொல்லியிருக்கிறார்…. இப்படிச் சொல்லியிருக்கின்றார்…” என்று பதில் தந்தார். எப்படியென்றாலும் சின்னப் பிள்ளைகள் மாதிரி சண்டை பிடிக்காதையுங்கோ என்று நான் கூறினேன்.

அவருடன்  (முதலமைச்சர் விக்னேஸ்வரனுடன்) நானும் ஐயாவும் (சம்பந்தனும்) பேசியிருக்கின்றோம். அவரும், ரணில் அப்படிச் சொன்னார், இப்படிச்சொன்னார் என்று கூறினார்.

எது, எப்படியென்றாலும் அந்தச் சண்டையை நான் முடிவுக்குக் கொண்டு வரவேண்டும். ஏனென்றால் அது ஓர் அர்த்தம் இல்லாத சண்டையாகப் போய்க்கொண்டிருக்கின்றது.

அவர் இவரைக் குறை கூறுவது, இவர் அவரை ‘பொய்யன்’ என்று சொல்லுவது… இதனால் – இந்தச் சண்டையால் – ஒருவருக்கும் பிரயோசனம் இல்லை. அதை நாங்கள் எப்படியும் நிறைவுக்குக் கொண்டுவருவோம். – என்றார்.

Share.
Leave A Reply