சென்னை: நடிகை ஸ்ருதி ஹாஸனை எந்தப் புதுப் படத்திலும் ஒப்பந்தம் செய்யக்கூடாது என ஹைதராபாத் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை மற்றும் ஹைதராபாதில் இயங்கிவரும் பிவிபி நிறுவனம் புதிதாகத் தயாரிக்கும் தமிழ், தெலுங்கு இருமொழிப் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார் ஸ்ருதி ஹாஸன்.

இந்தப் படத்தில் நாகார்ஜூன் மற்றும் கார்த்தி நாயகர்களாக நடிக்கின்றனர். வம்சி இயக்குகிறார். இந்தப் படத்திலிருந்து விலகுவதாக நேற்று முன்தினம் திடீரென அறிவித்திருந்தார் ஸ்ருதி ஹாஸன்.

பாதிப் படம் முடிந்த நிலையில் தன்னிடம் தேதிகள் இல்லை எனவே நடிக்க முடியாது என இமெயிலில் தகவல் அனுப்பிவிட்டாராம் ஸ்ருதி.

உடனே ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தில் ஸ்ருதி மீது சிவில் மற்றும் கிரிமினல் வழக்குத் தொடர்ந்தது பிவிபி நிறுவனம்.

இதுகுறித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவில், “ஸ்ருதிஹாஸன் எங்கள் நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி அவரிடம் கால்ஷீட் பெற்றோம்.

இப்போது பாதிப் படம் முடிந்த நிலையில், தன்னால் இந்தப் படத்தில் நடிக்க முடியாது என ஒரு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்.

இதனால் எங்களுக்கு மற்ற நடிகர்களிடம் வாங்கிய ஒப்பந்த தேதிகளும் வீணாகிவிட்டது. இவருடைய இந்த செயலால் எங்களுடைய பணம் இழப்பு மட்டுமில்லாமல், எங்கள் நிறுவனத்திற்கு உண்டான நன்மதிப்பும் இழக்கப்பட்டுள்ளது.

ஸ்ருதிஹாஸன் செயலால் எங்களுக்கு பலகோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. நேரமும் வீணாகிவிட்டது. மேலும் மற்ற நடிகர்களிடம் வாங்கிய தேதிகளை மாற்ற வேண்டிய கட்டாயம் உருவாகிவிட்டதால், அந்த நடிகர்களுக்கு எங்கள் நிறுவனத்தின் மீதான நல்லெண்ணமும், மரியாதையும் இழக்கப்பட்டுள்ளது.

அவருடைய இந்த நடவடிக்கை மீண்டும் தொடரக்கூடாது என்பதற்காகவும் மற்றும் எங்கள்நிறுவனத்தின் பங்குதாரர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதாலும் ஸ்ருதி மீது சிவில் மற்றும் கிரிமினல் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்,” என்று கூறியிருந்தது பிவிபி நிறுவனம்.

இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, மறு உத்தரவு வரும் வரை ஸ்ருதி ஹாஸன் புதுப் படங்களில் ஒப்பந்தமாகக் கூடாது; அவரை எந்த நிறுவனம் ஒப்பந்தம் செய்யவும் கூடாது என்றும், இந்த கிரிமினல் குற்றத்துக்காக அவரை போலீசார் விசாரிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

இந்த விவகாரம் குறித்து ஸ்ருதி ஹாஸனிடம் போலீசார் விசாரணை மேற்கொள்ளவிருக்கின்றனர்.

Share.
Leave A Reply