வரலாற்றில் தீவிரவாதிகளும் சரி போராளிகளும் சரி உருவாகிக்கொண்டேதான் இருக்கிறார்கள்.
இருப்பார்கள்!
இதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.
ஆனாலும் இவர்களுக்கிடையே பெரிய வித்தியாசம் இருக்கிறது.
இப்போது ஐ.எஸ். கட்டவிழ்த்துள்ள வன்முறைகளைப் பார்த்தால் இதன் தன்மை நன்றாகவே புரியும்.
ஈராக்கில் உள்நாட்டுப் போர்.
அரசுக்கும், இஸ்லாமிக் ஸ்டேட் ஒப் ஈராக் என்ற அமைப்புக்கும் இடையே நடந்து வருகிறது.
ஈராக் அதிபர் ஜலால் தலபானி, ஷியா முஸ்லிம் பிரிவைச் சேர்ந்தவர். எதிர்த்துப் போராடும் கலவரக்காரர்களோ, சுன்னி முஸ்லிம் பிரிவைச் சேர்ந்தவர்கள்.
ஏன் இந்தப் போர்..?
அந்நாட்டு அரசு இஸ்லாம் சட்ட மரபை மீறி செயல்படுவதாக செய்தி…!
இப்போது ஐ.எஸ். தீவிரவாதிகள் பிடியில் உள்ள திக்ரித் நகருக்குள் ஈராக் இராணுவம் நுழைந்து முன்னேறி வருகிறது.
ஈராக்கில் திக்ரித்தில் இராணுவம் இடையேயான போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. முன்னேறிவரும் இராணுவத்திற்கு தீவிரவாதிகள் எதிராக குளோரின் வாயுவை ஆயுதமாக பயன்படுத்துகின்றனர் என்று கூறப்படுகிறது.
ஈராக்கில் ஐ.எஸ். வசம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் வீழ்ந்து விட்ட, முன்னாள் அதிபர் சதாமின் சொந்த நகரமான திக்ரித்தை மீட்கும் முழு முயற்சியில் இராணுவம் இறங்கி உள்ளது.
இருதரப்பு இடையே கடும் போர் நடைபெற்று வருகிறது.
ஈராக்கிலும், சிரியாவிலும் ஐ.எஸ். தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். ஈராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை கைப்பற்றி உள்ள ஐ.எஸ். தனிநாடு உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர்.
தொடர்ந்து நாசவேலைகளிலும் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களை குறி வைத்து அமெரிக்கா போர் விமானங்கள் மூலமாக வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது.
ஐ.எஸ். மீது குறிப்பிட்ட அளவுக்கு தரைவழி தாக்குதல் நடத்தவும் படைகள் தயார் படுத்தப்பட்டு உள்ளன. ஈராக் நகரில் முக்கிய நகரங்கள் ஐ.எஸ். பிடியில் உள்ளது. ஐ.எஸ்.க்கு எதிராக ஈராக் படை, அமெரிக்க இராணுவ உதவியுடன் போர் புரிந்து வருகிறது. ஈராக் படை அந்நாட்டின் மக்கள் அதிகமாக வசிக்கும், திக்ரித் நகருக்குள் நுழைந்துள்ளது.
ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக, கடந்த 10 நாட்களாக போரிட்டு நகருக்குள் ஈராக் படை நுழைந்து உள்ளது. அங்கு இருதரப்பிற்கும் இடையே போர் நடைபெற்று வருகிறது.
ஈராக் இராணுவம், துணை பாதுகாப்புப் படை உதவியுடன் முன்னேறி வருகிறது.
ஏற்கனவே அமெரிக்கா தலைமையிலான உலக நாடுகளின் படை தீவிரவாதிகளிடம், இருந்து ஒருசில நகரங்களை திரும்ப மீட்டது. திக்ரித் நகரையும் மீட்க ஈராக் இராணுவம் போராடி வருகிறது. இது மிகப்பெரிய அடியாகும். இதற்கிடையே ஈராக் இராணுவத்தை குறிவைத்து கார் வெடிகுண்டு தாக்குதலும் நடத்தி உள்ளனர்.
உலகின் மிகப்பெரிய பயங்கர இயக்கமாக உருவெடுத்துள்ள ஐ.எஸ். அதன் கொடூரத் தாக்குதல்களால் சர்வதேச நாடுகளுக்குப் பெரும் அச்சம்
அல்கொய்தா, தலிபான், லஸ்கர் இ தொய்பா போன்ற இயக்கங்களைவிட பணபலத்திலும்சரி, படைபலத்திலும்சரி மிக வலுவானதாக உருவெடுத்துள்ளது.
இதுவரை பார்க்காத அதிக பண பலத்தைக் கொண்டுள்ள இயக்கமும் இதுதான்.
ஈராக்கிலும், சிரியாவிலும் பல்வேறு எண்ணெய் வளங்களைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஐ.எஸ்., எண்ணெய் விற்பனை மூலம் ஒரு நாளைக்கு ஒரு மில்லியன் முதல் 2 மில்லியன் டொலர்கள் வரை சம்பாதிக்கிறதாம்.
இது தவிர, பல நாடுகளைச் சேர்ந்த அந்த இயக்கத்தின் அனுதாபிகளின் நன்கொடை மூலமும் நிதி நிலைமையை வளப்படுத்துகிறது.
அல்கொய்தாவிலிருந்து பிரிந்த இயக்கம்தான் ஐ.எஸ்.
சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்துக்கு எதிராக 2011 முதல் உள்நாட்டுப் போரில் ஈடுபட்டு வந்த ஐ.எஸ்., 2014 ஜூனில் தங்களது தாக்குதலை ஈராக்கின் வடக்கு, மேற்குப்புற பகுதிகளில் தீவிரப்படுத்தி, இப்போது பெரும்பாலான பகுதிகளை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
சிரியா, துருக்கி எல்லையில் குர்திஸ் பிராந்தியத்தில் உள்ள சிரியாவின் மிகப்பெரிய நகரங்களுள் ஒன்றான கொபானி இப்போது ஐ.எஸ். இன் முழுக் கட்டுப்பாட்டில் உள்ளது.
அரசுப் படைகளுக்கு ஆதரவாகச் செயல்படுவோரை கூட்டம் கூட்டமாகப் பிடித்துவைத்துக் கொல்லும் இந்த இயக்கத்தின் கொடூர பாணி சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த இயக்கத்தின் தாக்குதல் முறையால் ஈர்க்கப்பட்டு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இளைஞர்கள் தாங்களாகவே முன்வந்து ஐ.எஸ். இல் சேர்ந்து வருவதுதான் பேரதிர்ச்சி.
ஈராக், சிரியாவில் மொத்தம் 20,000 முதல் 31,500 பேர் ஐ.எஸ். படையில் செயற்பட்டுக் கொண்டிருப்பதாக அமெரிக்காவின் மத்திய புலனாய்வு ஏஜென்சி தெரிவித்துள்ளது.
இவர்களில் 80 நாடுகளைச் சேர்ந்த 15,000 பேரும் அடக்கம்.
ஈராக்கில் சதாம் உசேன் வீழ்ச்சிக்குப் பிறகு நேரடி இராணுவ நடவடிக்கையில் ஈடுபடாமல் ஒதுங்கியிருந்த அமெரிக்கா, ஐ.எஸ்.இன் எழுச்சியைப் பார்த்து தனது முடிவை மாற்றிக்கொண்டது.
ஐ.எஸ். இயக்கத்தின் ஆதிக்கம் மத்திய கிழக்கு முழுவதும் வலுவடையாமல் தடுக்கும் பொருட்டு கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் முதல் விமானத் தாக்குதலில் அமெரிக்கா ஈடுபட்டு வருகிறது.
ஐ.எஸ்.க்கு எதிரான சர்வதேச கூட்டணியையும் செப்டெம்பர் 10இல் அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவித்தார்.
இந்தக் கூட்டணியில் பிரிட்டன், கனடா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் உட்பட 60 நாடுகள் இடம்பெற்றுள்ளன. இருப்பினும், நேரடி இராணுவ நடவடிக்கையில் சவூதி அரேபியா, பிரிட்டன், கனடா உள்ளிட்ட சில நாடுகளே ஈடுபட்டிருக்கின்றன.
பிற நாடுகள் போர் உபகரணங்கள், தொழில்நுட்ப உதவிகள் போன்றவற்றைச் செய்து வருகின்றன.
இருப்பினும், ஐ.எஸ்.க்கு எதிரான இத்தாக்குதல் நடவடிக்கையில் இதுவரை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படவில்லை.
ஐ.எஸ். ஒரு பக்கம், அதற்கு எதிராக சிரியாவின் இராணுவம், குர்திஸ் படை ஒரு பக்கம் என நாள்தோறும் நடக்கும் சண்டையில் படைவீரர்கள், பயங்கரவாதிகள் இறப்பைவிட, அப்பாவி பொதுமக்களின் இழப்புதான் அதிகமாக உள்ளது.
2011 மார்ச் முதல் 2014 ஏப்ரல் வரையிலான காலகட்டத்தில் சிரியாவில் உள்நாட்டுப் போரால் 1,91,000 பேர் பலியாகியுள்ளதாக ஐ.நா.வின் மனித உரிமைகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இவர்களில் 8000 பேர் குழந்தைகள்.
இது தவிர, சிரியாவிலும், ஈராக்கிலும் இலட்சக்கணக்கானோர் வீடிழந்து, உடைமைகளை இழந்து உள்நாட்டிலேயே அகதிகளாகத் தவிக்கின்றனர்.
80 நாடுகளைச் சேர்ந்த பயங்கரவாதிகள், 60 நாடுகளைச் சேர்ந்த அரசுப் படைகளுக்கு இடையே சிரியாவிலும், ஈராக்கிலும் நடக்கும் சண்டையை உள்நாட்டுப் போர் என்பதைவிட ஓர் உலகப் போர் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும்.
(தொடரும்…)
-எஸ்.ஜே.பிரசாத்