18 அக்டோபர் 2014 அன்று ஜெயலலிதா, பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து வெளியே வந்து ஐந்து மாதங்கள் முடிந்து விட்டன. இந்த ஐந்து மாதங்களில் ஒரே ஒரு முறை கூட ஜெயலலிதா, தனது போயஸ் தோட்டத்து இல்லத்திலிருந்து வெளியேறவில்லை.

ஐந்து மாதங்களாக, ஒருவர் தன் வீட்டிலிருந்து எந்தக் காரணத்துக்காகவும் வெளியேறாமல் ஒரே இடத்தில், நான்கு சுவர்களுக்குள் இருக்கிறார் என்றால் ஒன்று அவர் படுத்த படுக்கையாக இருக்க வேண்டும்.

அல்லது கடும் மனவியாதியால் பீடிக்கப்பட்டிருக்க வேண்டும். அல்லது சிறையில் இருக்க வேண்டும். இதில் ஜெயலலிதா எந்த பிரிவில் சேருவார் என்று தெரியவில்லை.

சிறைக்கு செல்லும் முன்பாக ஜெயலலிதா எப்போதும் கட்சிக்காரர்களுடன் அளவளாவிக்கொண்டு இருந்தார் என்பது பொருளல்ல. அப்போதும் அவர் தனிமை விரும்பிதான்.

ஆனால், சிறை சென்று வந்த பிறகு, அவர் சசிகலா மற்றும் ஒரு சில உயர் உயர் அதிகாரிகளைத் தவிர்த்து, வேறு யாரையும் சந்திப்பதில்லை என்பதுதான் விசித்திரமான உண்மை.

திமுக தலைவர் கருணாநிதி இந்த வயதிலும் காலை அனைத்து பத்திரிக்கைகளையும் படித்து, அதில் உள்ளவற்றை மேற்கோள் காட்டி அறிக்கை விடுவது, கட்சியினரை சந்தித்து விஷயங்களை கேட்டறிவது, குடும்ப பஞ்சாயத்துகளை தீர்த்து வைப்பது, புதிதாக வந்துள்ள புத்தகங்களை படிப்பது என்று எல்லாவற்றையும் தாண்டி, தனது முகநூலில் எத்தனை லைக்குகள் என்பது வரை தவறாமல் செய்கிறார்.

ஆனால் ஜெயலலிதா ? ஐந்து மாதங்கள் தொடர்ந்து வெளியுலகுக்கே வராமல், வெயிலையே பார்க்காமல் வீட்டினுள்ளேயே அடைந்து கிடக்கும் ஒரு மனிதனின் மனநிலையை எண்ணிப் பாருங்கள்.

கட்சியினரைக் கேட்டால், தான் விடுதலை என்ற செய்தியைக் கேட்ட பிறகுதான் ஜெயலலிதா போயஸ் தோட்டத்தை விட்டு வெளியே வருவார் என்று கூறுகின்றனர்.

ஆனால் விடுதலை இல்லை என்றாலும் அவர் போயஸ் தோட்டத்தை விட்டு வெளியே வந்தே தீர வேண்டும்.

தண்டனை உறுதி செய்யப்பட்டால், ஜெயலலிதா மீண்டும் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட வேண்டும். அதற்காக போயஸ் தோட்டத்திலிருந்து வெளியேறித்தானே ஆக வேண்டும் ?

ஆனால் ஜெயலலிதா சிறை சென்றது முதல், தமிழகத்தில் நடக்கும் அவலங்கள் சொல்லி மாளாது. கிட்டத்தட்ட பகல் கொள்ளையாகவே தினந்தோறும் நடைபெற்று வருகிறது.

உடன்குடி டெண்டர் ரத்து செய்யப்பட்டது கிட்டத்தட்ட பஞ்சமாபாதக செயல். தமிழகத்தின் மின் பற்றாக்குறை எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை சவுக்கு தொடர்ந்து கூறி வருகிறது.

கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தின் மின் தேவை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கும். இந்த நிலையில், உடன்குடி மின் திட்டத்தை அடுத்த ஐந்தாண்டுகளுக்கு தள்ளிப்போகும் நிலையில் எந்தக் காரணமும் இன்றி, உடன்குடி மின் திட்டத்துக்கான டெண்டரை ரத்து செய்துள்ளது தமிழக அரசு.

natham_viswanathan_2234097fnatham_viswanathan
தற்போது ஒரு பெருந்தொகையை லஞ்சமாக பெற்றுக் கொண்டு, நத்தம் விஸ்வநாதனும், தலைமைச் செயலாளர் ஞானதேசிகனும் சேர்ந்து அடானி மின் உற்பத்தியாளருடன், 1000 மெகாவாட் சூரிய ஒளி மின் திட்டத்துக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் தருவாயில் உள்ளனர் என்று தகவல்கள் வந்துள்ளன.

ஏற்கனவே தமிழகத்தில் சூரிய ஒளி மின் உற்பத்தியாளர்களை, கதற வைத்து, தமிழகத்தை விட்டே விரட்டிய கதைகளை சவுக்கு தளத்தில் படித்திருப்பீர்கள்.

சிறு மின் உற்பத்தியாளர்களை விரட்டி விட்டு, தற்போது, பெரும் தொகையை லஞ்சமாக தரத் தயாராக உள்ள அடானிக்கு பட்டுக் கம்பளம் விரித்துள்ளது தமிழக அரசு.

தனியார் மின் கொள்முதல் உள்ளிட்ட, தமிழகத்தின் மின் திட்டங்களில் மட்டும் மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மற்றும் தலைமைச் செயலாளர் ஞானதேசிகன் ஆகியோர் இது வரை 6000 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாகவும், இந்த வசூலில், அதிமுக முன்னாள் அமைச்சர் மதுசூதனனின் நெருங்கிய உறவினரான ஜேபி என்கிற ஜெயபிரகாஷ் என்பவருக்கும் பெரும் தொடர்பு இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

இப்படி வசூல் செய்த பெரும் தொகைகளை, ஞானதேசிகன் தனது மருமகன் மூலமாக முதலீடு செய்வதாகவும், நத்தம் விஸ்வநாதன் தன் மகன் அமர் மூலமாக முதலீடு செய்வதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

இந்த வசூல் வேட்டைகளெல்லாம் ஜெயலலிதாவின் ஆசியுடனே நடக்கின்றன என்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை.

இந்த அமைச்சர்களும் அதிகாரிகளும் இப்படித் துணிச்சலாக கொள்ளையடிப்பதன் பின்னணி என்ன என்பது பலருக்கு வியப்பாக இருக்கும். ஜெயலலிதா விடுதலை ஆனால், அவருக்கு வசூல் செய்து குவித்தவர்களை கைவிட மாட்டார். விரைவில் தேர்தல் நடத்துவார்.

அப்போது தேர்தல் நிதி என்று மீண்டும் ஒரு வசூல் வேட்டையில் இறங்கலாம். தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் தற்போது இருக்கும் நிலையில், தேர்தல் நடந்தால், மீண்டும் அமோக பெரும்பான்மையுடன் வெல்லலாம் என்ற மனநிலையில் உள்ளனர்.

ஒரு வேளை ஜெயலலிதா தண்டிக்கப்பட்டால் ? அப்போதும் என்ன பிரச்சினை.. ? ஜெயலலிதா விடுதலை ஆக வேண்டி காவடி எடுத்து, தீச்சட்டி தூக்கிக் கொண்டே, கொள்ளையை தொடரலாம்.

அரசியல்வாதிகள் இப்படி கொள்ளையடிப்பதைக் கூட காலங்காலமாக நடப்பதுதானே என்று ஒரு வகையில் பார்க்கலாம். ஆனால், அதிகாரிகளாக ஒரு காலத்தில் இருந்த ஓய்வு பெற்றவர்கள் தற்போது நடத்தும் அயோக்கியத்தனங்களை பார்க்க நெஞ்சு பொறுக்குதில்லை.

சமீபத்தில், டெல்லி காவல்துறையினர், அரசு ரகசியங்களை களவாடினார்கள் என்ற குற்றச்சாட்டில் எண்ணை நிறுவனங்களைச் சேர்ந்த ஒரு சில நிர்வாகிகளையும், அரசு ஊழியர்களையும் கைது செய்துள்ளனர். இவர்கள் மீது அலுவல் ரகசியச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தலைமைச் செயலாளராக இருந்து ஓய்வு பெற்ற, ஷீலா பாலகிருஷ்ணன் ஆலோசகர் என்ற பெயரில், தமிழக அரசின் அனைத்துக் கோப்புகளையும் பார்வையிடுகிறார்.
Tamil-Daily-News-Paper_54199945927ஷீலா பாலகிருஷ்ணன்

தற்போது தலைமைச் செயலகத்தில் என்ன நடக்கிறது தெரியுமா ?
தலைமைச் செயலக விதிகளின்படி, முதலமைச்சர் முடிவெடுக்கும் கோப்புகள் இருக்கின்றன தெரியுமா ?

அந்தக் கோப்புகளில் முதலமைச்சர் என்ன முடிவெடுக்க வேண்டுமோ, அவரை வழிநடத்தும் வகையில் ஒரு தனித் தாளில் ஷீலா பாலகிருஷ்ணன் தயாரித்து, அதை அலுவலக கோப்பின் மீது வைத்து போயஸ் தோட்டத்துக்கு அனுப்புகிறார்.

அந்தக் கோப்புகளை பார்வையிடும் ஜெயலலிதா, முதலமைச்சராக இருந்தபோது எப்படி கையெழுத்திடுவாரோ, அதே போல கையெழுத்திடுகிறார்.

ஜெயலலிதா எடுத்த முடிவுகள், தலைமைச் செயலக கோப்பில் எழுதப்பட்டு, அதில் மிக்சர் முதல்வர் பன்னீர்செல்வம் கையெழுத்திடுகிறார்.

இது ரகசியமாகவெல்லாம் நடப்பதில்லை. தலைமைச் செயலக அதிகாரிகள் பலர் ஜெயலலிதாவின் இந்த தனிக்குறிப்பை பார்த்துள்ளதாக தெரிவிக்கிறார்கள்.

டெல்லி காவல்துறை வழக்கு பதிவு செய்தது போல, ஜெயலலிதா மீதும் பன்னீர் முதல்வர் மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டுமா இல்லையா ?

ஒரு முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பதவியேற்கையில், ரகசிய காப்புப் பிரமாணம் என்ற உறுதிமொழி எடுப்பது எதற்காக ?

அரசு ரகசியங்களை, தேர்ந்தெடுக்கப்பட்டு, பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்பட்டவர்கள் மட்டுமே கையாள வேண்டும் என்பதற்காகத்தானே ? தண்டிக்கப்பட்ட குற்றவாளி கையாள்வதற்காகவா ?

இது மட்டுமல்ல. மாநில உளவுத்துறை சார்பாக முதலமைச்சருக்கு உளவு அறிக்கைகள் தினந்தோறும் அனுப்பப்படும். இந்த உளவு அறிக்கையில், தொலைபேசி ஒட்டுக் கேட்பு அறிக்கைகளும் அடங்கும்.

தொலைபேசி ஒட்டுக் கேட்பு மற்றும் உளவு அறிக்கைகள், அரசு அதிகாரி மற்றும் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்ட அமைச்சர்கள் மட்டுமே கையாள வேண்டியன.

தற்போது இந்த அறிக்கைகளை ஒரு தண்டிக்கப்பட்ட குற்றவாளி பார்வையிடுவது இருக்கட்டும். இந்த அறிக்கைகளை தயாரிப்பது யார் தெரியுமா ? மக்கள் டிஜிபியான ராமானுஜம்.

 ramanajum_2188901hராமானுஜம் டிஜிபியாக நியமிக்கப்பட்ட சர்ச்சையே காவல்துறையில் ஓயாத நிலையில், 62 வயதில் அவரை ஆலோசகராக நியமிக்க வேண்டிய அவசியம் என்ன ?

அப்படியே தண்டிக்கப்பட்ட குற்றவாளி நியமித்தாலும், ஒரு அரசு அதிகாரியாக இருந்த ராமானுஜம் இதை ஏற்றுக் கொள்ளலாமா ?

ஏற்றுக் கொண்டதோடு அல்லாமல், காவல்துறை அதிகாரிகள் பணியாற்றும், டிஜிபி அலுவலகத்திலேயே ஒரு அறையை பெற்றுக் கொண்டு, மன்னார்குடி மாபியாவின் உத்தரவுகளை நிறைவேற்றும் இந்த ராமானுஜத்துக்கும், ஒரு கடைந்தெடுத்த அயோக்கிய அதிகாரிக்கும் என்ன வேறுபாடு ?

ஒரு மோசமான ஊழல் அதிகாரியைக் கூட ஏற்றுக் கொள்ளலாம். அந்த அதிகாரி நான் நேர்மையானவன் என்று சொல்லிக் கொள்ளாமல், வசூல் வேட்டையிலேயே கவனமாக இருக்கிறார். ஆனால் ராமானுஜம், தன்னை ஒரு நேர்மையான அதிகாரியாக கருதிக் கொண்டு, செய்யும் இந்த காரியத்துக்கு பெயர் என்ன ?

இது மட்டுமல்ல. தற்போது டிஜிபியாக ஒரு அதிகாரி நியமிக்கப்பட்டிருந்தாலும், உண்மையான டிஜிபியாக செயல்படுவது மக்கள் டிஜிபி ராமானுஜமே என்கிறார்கள். கூடுதல் எஸ்.பி முதல், ஐஜி வரையிலான நியமனங்கள் அனைத்தும் ராமானுஜம் முடிவின்படியே நடக்கின்றன.

ராமானுஜம் லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநராக இருந்தபோது, ஆவின் மேலாண் இயக்குநராக இருந்தார் அபூர்வா வர்மா ஐஏஎஸ். இந்த அபூர்வா வர்மா மீது, திருப்பதிக்கு ஆவின் நெய் ஏற்றுமதி செய்ததில் நடந்த ஊழல்கள் தொடர்பான இருந்த லஞ்ச ஒழிப்பு விசாரணையில் இருந்து அவரை காப்பாற்றியது ராமானுஜமே.

அப்போது இது தொடர்பாக சவுக்கில் கட்டுரை எழுதியபோது, சவுக்கை திட்டாத அதிகாரிகளே கிடையாது.

ராமானுஜம் போன்ற ஒரு நேர்மையான அதிகாரியைப் பற்றி இப்படியா பழித்துக் கூறுவது என்று. இன்று அந்த அதிகாரிகள் ராமானுஜத்தைப் பற்றி என்ன கூறுவார்கள் என்று தெரியவில்லை.

இந்த காரணத்தினால், தற்போது உள்துறை செயலாளராக இருக்கும் அபூர்வா வர்மாவுக்கும், ராமானுஜத்துக்கும் நெருக்கம் அதிகமாகவே உள்ளது.

கூடுதல் எஸ்.பிக்கு மேற்பட்ட அனைத்து நியமனங்களிலும் முடிவெடுக்க வேண்டியது உள்துறைச் செயலாளர் என்பதனால், அவர் மக்கள் டிஜிபி சொல்வதைக் கேட்பாரா, அல்லது சாதாரண டிஜிபி சொல்வதைக் கேட்பாரா ?

ஓய்வு பெற்ற அதிகாரிகளாக இருக்கும் ஷீலா பாலகிருஷ்ணன் மற்றும் ராமானுஜம் ஒரு புறம் என்றால், தலைமைச் செயலகத்தில் முதல்வரின் செயலாளராக இருக்கும் ஷீலா பிரியா மற்றொரு ஓய்வு பெற்ற அதிகாரி.

முதல்வரின் செயலாளராக இருந்த ஷீலா பிரியா, செப்டம்பர் 27க்குப் பிறகு, கைதியின் செயலாளராக மாறி விட்டார் என்பது அனைவரும் அறிந்ததே.

ஓய்வு பெற்று பணி நீட்டிப்பில் இருக்கும் இவரும், பணியில் உள்ள ஐஏஎஸ் அதிகாரிகளை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறார்.

ஏற்கனவே இவர் மீது போலி சாதிச் சான்றிதழ் கொடுத்து ஐஏஎஸ் ஆனவர் என்று ஒரு குற்றச் சாட்டு உண்டு. இந்த லட்சணத்தில் இவருக்கு பணி நீட்டிப்பு வேறு.

ஜெயலலிதா பதவியேற்ற தினம் முதல் ஐந்தாண்டுகள் பணி நீட்டிப்பில் இருக்கும் மற்றொரு அதிகாரி யார் தெரியுமா ? அவர்தான் வெங்கட்ரமணன்.

இந்த வெங்கட்ரமணனின் பணி என்ன தெரியுமா ? அமைச்சர்கள் செய்யும் வசூல்களின் கணக்கை சரியாக எழுதி வைத்து, ஜெயலலிதாவிடம் ஒப்படைப்பதே. ஒரு வேளை யாராவது ஒரு அமைச்சர் வாராந்திர வசூலை குறைவாக அளித்திருந்தாரென்றால் அவரைப் பற்றி மக்கள் முதல்வரிடம் போட்டுக் கொடுத்து அவர் குடியை கெடுப்பது.

பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டு முதலமைச்சராக உள்ள ஓ பன்னீர்செல்வத்துக்கு எந்த அதிகாரமும் இல்லாமல் ஒரு கைதி எப்படி உண்மையான அதிகாரம் செலுத்துகிறாரோ, அதே போலத்தான், பதவியில் உள்ள அதிகாரிகளுக்கு அதிகாரங்கள் இல்லாமல் முதியோர் இல்லாத்தில் அமர்ந்து, இறந்து போனவர்களின் செய்திகளை செய்தித்தாள்களில் பார்க்க வேண்டிய இந்த அதிகாரிகள் தமிழக அரசில் உண்மையான அதிகாரம் செலுத்துகிறார்கள்.

ஒரு அரசு அதிகாரிக்கு பொருந்தும் நடத்தை விதிகள், ஒழுக்க விதிகள், தண்டனை விதிகள் எதுவுமே இந்த முதியோர் இல்ல அதிகாரிகளுக்கு பொருந்தாது என்பதுதான் சிறப்பு.

இப்படி ஓய்வு பெற்ற அதிகாரிகளை வைத்து, ஒரு ஊமை அரசாங்கத்தைத்தான் ஜெயலலிதா நடத்திக் கொண்டு, கூண்டுக் கிளியாக போயஸ் தோட்டத்தில் அமர்ந்து கொண்டிருக்கிறார்.

அவர் தொடர்ந்து கூண்டுக்கிளியாக இருப்பாரா… அல்லது சிறகொடிந்த கிளியாக மாறுவாரா என்பது, கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமியின் முடிவில் இருக்கிறது.

-சவுக்கு-

Share.
Leave A Reply