60 கோடி ரூபா மதிப்புள்ள போதைப்பொருளுடனும் துப்பாக்கிகளுடனும் இந்திய எல்லைக்குள் நுழைய முனைந்த 2 பாகிஸ்தான் ஊடுருவல்காரர்களை இந்திய இராணுவம் சுட்டுக் கொன்றுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
அமிர்தசரஸில் பாகிஸ்தான் எல்லையில் இந்திய இராணுவவீரர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பாகிஸ்தான் பகுதியில் இருந்து இரண்டு பேர் இந்தியாவிற்குள் ஊடுருவ முயற்சி செய்துள்ளனர்.
அப்போது இராணுவ வீரர்கள் அவர்களுக்கு திரும்பி சென்றுவிடுங்கள் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், ஊடுருவல்காரர்கள் தொடர்ந்து இந்தியாவை நோக்கி உள்ளே வந்துள்ளனர்.
அப்போது ஊடுருவல்காரர்கள் இராணுவ வீரர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இராணுவம் நடத்திய பதில் தாக்குதலில் இரண்டு ஊடுருவல்காரர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
அவர்களிடம் இருந்து 60 கோடி ரூபா மதிப்புள்ள போதைப்பொருள் மற்றும் 2 ஏ.கே. 47 ரக துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இவர்களுக்கு இந்தியாவில் யாருடன் தொடர்பு உள்ளது என்பது தொடர்பாக இராணுவம் விசாரணை களை மேற்கொண்டுள்ளது.