“மழை ஓய்ந்தாலும் தூவானம் விட்டபாடில்லை” என்ற நிலைமையே இன்று வடக்கில் உருவாகியுள்ளது.
அதாவது, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் வடக்கு முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்குமிடையில் தோன்றியுள்ள “ஊடல்” ஊடகங்களுக்கு அப்பால் தமிழ் மக்கள் மத்தியிலும் பரவலாகப் பேசப்பட்டு வருகின்றது.
இந்த நிலைமை ஆரோக்கியமற்றதோர் சூழ்நிலைக்கே வழிவகுக்கும் என்பது பொதுவான அபிப்பிராயம்.
கடந்த ஆட்சியில் ஆளுநர் சந்திரசிறி, முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்குப் பெரும் தடைக்கல்லாக இருந்தார். அதேபோன்றே பிரதம செயலாளரும் இருந்தார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ இவர்களை வைத்தே வடமாகாண சபையை செல்லாக்காசாக மாற்றி அமைத்திருந்தார்.
இது தமிழ் மக்கள் மத்தியில் பெரும் எரிச்சலையும் ஆத்திரத்தையும் ஊட்டியிருந்தது. இருந்தும் நேரம் வரும் வரை அவர்கள் காத்திருந்தனர். இறுதியில் வெற்றியும் கண்டனர்.
இவ்வாறாக ஒரு முட்டுக்கட்டை நீங்கியது என்று தமிழ் மக்கள் அமைதி கொண்டுள்ள நிலையில், மீண்டும் பிரதமருக்கும், முதலமைச்சருக்குமிடையே உருவாகியுள்ள “பனிப்போர்” எங்கே மீண்டும் நெருக்கடிகளை தோற்றுவித்துவிடுமோ என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
முதலமைச்சர் விக்னேஸ்வரன் வட க்கில் இடம்பெற்றது இனப்படுகொலை என்ற தீர்மானத்தை ஏகமனதாக நிறைவேற்றியிருந்தார்.
இந்த விவகாரம் அரசியல் அரங்கில் பெரும் சர்ச்சையை ஏற் படுத்தியிருந்தது. புதிய அரசாங்கம் பதவிக்கு வந்துள்ள நிலையில் இத்தகைய தீர்மானம் அவசியமா? என்ற கேள்விகளை பலரும் எழுப்பியிருந்தனர்.
அதேவேளை, இழுத்தடிக்கப்பட்டு வரும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் மற்றும் சர்வதேசத்தின் அணுகுமுறைகள் என்பன வடமாகாண சபையில் இத்தகைய பிரேரணையின் அவசியத்தையும் எடுத்துக் கூறுவதாகவே இருந்தன.
இந்தப் பின்னணியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சற்றுக் கடுப்பாக தனது கருத்துக்களை வெளிப்படுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
அதாவது, தமிழகத்தின் தந்தி தொலைக்காட்சிக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வழங்கிய பேட்டியில், “விக்னேஸ்வரன் ஒரு பொய்காரர்.
வடக்கில் இனப்படுகொலை நடந்துள்ளது என அவர் தெரிவித்திருப்பது வெறும் பொறுப்பற்ற கருத்து. இதனை அவர் வாபஸ் பெற வேண்டும் அவருடன் பேச நான் தயாராக இல்லை என தெரிவித்திருந்தார்.
அத்துடன் பிரபாகரனின் புகழாசை காரணமாக தமிழ் மக்கள் அழிவுகளை சந்தித்தனர் எனவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார்.
மேலும் தான் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யும் போது முதலமைச்சரை சந்திக்கும் நோக்கமில்லை” எனவும் கூறியிருந்தார்.
அதுமாத்திரமன்றி, நல்லாட்சி மிக்க அரசாங்கத்துடன் விளையாட வேண்டாம். இதுவே இனவாதிகளுக்கான எனது இறுதி எச்சரிக்கை என்றும் கூறியிருந்தார் ரணில்.
இது தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் கருத்து வெளியிடுகையில், உண்மை வெளிப்படுத்தப்பட வேண்டும் எனக் கோரியமை ஒருபோதும் இனவாதமாக முடியாது.
உண்மையை முதலில் அறிந்தால் தான் நல்லெண்ணம் பிறக்கும் என்று குறிப்பிட்டிருந்தார். இந்தப் பின்னணியிலேயே இருவருக்குமிடையில் சொற்போர் மூண்டதுடன் ஒருவரோடு ஒருவர் முரண்படும் நிலைமை தோன்றியுள்ளது.
இதேவேளை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் வடக்கு முதல்வர் விக்னேஸ்வரனுக்குமிடையில் ஏற்பட்டிருந்த இந்த முறுகல் நிலை ஜனாதிபதியின் வடக்கு விஜயத்தின் பின்னரும் முடிவுக்கு வரா மல் தொடர்வது கவலைக்குரியதாகும்.
கடந்த வெள்ளி முதல் ஞாயிறு வரை மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டு யாழ். பயணித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அங்கு கூட்டமைப்பு எம்.பிக்கள் உட்பட பல்வேறு தரப்பினரை சந்தித்திருந்த போதிலும் முதலமைச்சருடனான சந்திப்பை புறக்கணித்திருந்தார்.
பிரதமரின் மூன்று நாள் வடக்கு விஜயத்தில் பல்வேறு தரப்பினருடன் சந்திப்புக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருந்த போதி லும் முதல்வருடனான சந்திப்புக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை. சந்திப்பு, நிகழ்ச்சி நிரலிலும் உள்ளடக்கப்படவில்லை.
இதேவேளை, அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோர் வடக்கிற்கு விஜயம் செய்திருந்தனர்.
இந்த விஜயத்தின் போது முதலமைச்சர் விக்னேஸ்வரன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை வரவேற்றதுடன் அவருடன் சுமுகமான உரையாடலை மேற்கொண்டிருந்தார்.
அதேவேளை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் முதலமைச்சர் விக்னேஸ்வரனும் ஒருவரை ஒருவர் சந்திப்பதை தவிர்த்து கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதேபோன்று எந்த கட்டத்திலும் சம்பிரதாயபூர்வமாகவேனும் கைலாகு கொடுக்கவில்லை. இது தமிழ் ஊடகங்களில் முக்கிய இடத்தை பிடித்திருந்தது.
இதனிடையே, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடந்த வியாழக்கிழமை கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் இது தொடர்பிலும் பிரஸ்தாபிக்கப்பட்டது.
அதாவது, பிரதமரிடம் தங்களின் வடபகுதி விஜயத்தின் போது முதலமைச்சர் விக்னேஸ்வரனை சந்திக்கும் சாத்தியங்கள் உள்ளனவா என்று வினவிய போது, அது தொடர்பில் எந்த விண்ணப்பமும் முன்வைக்கப்படவில்லை என ஒற்றைச் சொல்லில் பதிலளித்திருந்தார்.
இது தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனிடம் வினவிய போது, பிரதமரின் யாழ்.விஜயம் கட்சி சார்பானது. அதேவேளை, நாம் அந்தக் காலகட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப ஏற்கனவே திட்டம் வகுத்திருந்தோம் என்றார்.
இது ஒரு வகையில் ஒருவரை ஒருவர் தவிர்த்துக்கொள்வதற்கான சாக்குப் போக்காவே கருத வேண்டியுள்ளது.
இந்த விதமான போக்குகள் தொடரும் பட்சத்தில் அது முன்னர் இருந்த நிலைக்கு வடமாகாண சபையை கொண்டு நிறுத்துமோ என்ற ஐயப்பாட்டை தோற்றுவிப்பதாக அமைந்துள்ளது.
எவ்வாறிருப்பினும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கூற்றுக்கள் தமிழ் மக்களிடையே கடும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளன.
தமிழ் மக்களை புறக்கணிக்கும் வகையிலும் எடுத்தெறிந்து பேசும் வகையிலும் காணப்படுவதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
கடந்த காலத்தை ஒரு தடவை திரும்பி பார்த்தால் வடக்கு -கிழக்கு மக்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கூற்றுக்கள் குறித்து மிகுந்த விசனம் கொண்டிருந்ததுடன், சர்வதேச ரீதியில் புலிகளை அந்நியப்படுத்தவும் சர்வதேச வலையில் புலிகளை சிக்க வைக்கவும் அவரே காரணமாக இருந்தார் என குற்றச்சாட்டுக் களை முன்வைத்திருந்தனர்.
இந்தப் பின்னணியில் அப்போது நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் பெரும்பாலான வடக்கு கிழக்கு மக்கள் வாக்களிப்பதையும் தவிர்த்திருந்தனர். இது மஹிந்த ராஜபக் ஷ வெற்றிவாகை சூட காரணமாக அமைந்தது.
இருந்த போதிலும் தற்பொழுது ஆட்சி மாற்றத்துக்கு ஒத்துழைப்பு நல்கிய வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் தொடர்ந்தும் தமது நல்லெண்ணத்தை வெளிப்படுத்தும் வகையில் அரசின் முயற்சிகளுக்கு ஆதரவளித்து வருகின்றனர்.
இதனை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் புரிந்து கொண்டு செயற்படுவது புதிதாக தெரிவு செய்யப்பட்டிருக்கும் அரசுக்குப் பெரும் உறுதுணையாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இன்றைய சூழ்நிலையில் தமிழ் மக்களின் ஆதரவு அரசாங்கத்துக்கு அவசியம் என்பதை மறந்து போகக் கூடாது. உண்மையான நல்லிணக்கம், பரஸ்பரம், கருத்துப் பரிமாறல்களிலும், விட்டுக் கொடுப்புகளிலுமே தங்கியுள்ளது. மாறாக ஏட்டிக்கு போட்டியான வகையில் நிலைமைகள் தொடருமானால் அது விரிசல்களையும் மோதல்களையும் முன்நிறுத்துவதாக அமையும்.
வடமாகாண சபையுடன் இணக்கமான செயற்பாட்டை பேண வேண்டிய அவசியம் அரசாங்கத்துக்கும், அதேபோன்று அரசாங்கத்துடன் இணக்கமான சூழ்நிையை பேண வேண்டிய அவசியம் வடமாகாண சபைக்கும் உள்ளது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் முதலமைச்சர் விக்னேஸ்வரனும் பண்பட்ட தலைவர்கள் என்ற வகையில் விட்டுக் கொடுப்புகளுடன் ஒருவருடன் ஒருவர் சமரசமாக தமது அரசியல் பயணத்தை தொடர்வதையே தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
அந்த வகையில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் துயரை துடைக்க இருவரதும் ஒருமுகப்பட்ட நடவடிக்கைகள் அத்தியாவசியமாகும்.
மாறாக, இந்த வகையான போக்குகள் தொடருமானால் அது “ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்” என்ற நிலைமைகளை மிஞ்ச செய்வதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
ஆர்.பி