15 சிறுமியை திருமணம் செய்த குற்றச்சாட்டில் வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபரை, தலா 1 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு ஆட்பிணையில் செல்ல யாழ். குருநகர் சிறுவர் நீதிமன்ற நீதவான் பொ.சிவகுமார் திங்கட்கிழமை (30) உத்தரவிட்டதாக வட்டுக்கோட்டை பொலிஸார், செவ்வாய்க்கிழமை (31) தெரிவித்தனர்.
சுழிபுரம் பகுதியில், பாடசாலைக்கு செல்லும் சிறுமி, 23 வயதுடைய இளைஞனுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அவ் இளைஞனையும் சிறுமியையும் வட்டுக்கோட்டை பொலிஸார் கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் கைது செய்திருந்தனர்.
வுனியாவில் இருந்து வந்து சுழிபுரத்தில் தங்கியிருந்து வேலை செய்த 23 வயதுடைய இளைஞன் அதே பகுதியினை சேர்ந்த 15 வயது சிறுமி மீது காதல் கொண்டுள்ளான்.
இச் சம்பவம் தொடர்பில் சிறுமியின் பெற்றோருக்கு தெரியவர, அம் மாணவியின் பெற்றோர் சிறுமி பாடசாலைக்கு செல்வதை இடைநிறுத்தியுள்ளதுடன் அவ் இளைஞனுக்கும் அச் சிறுமிக்கும் மத சடங்கு முறைப்படி கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் திருமணம் செய்துவைத்துள்ளனர்.
குடும்பநல ஆலோசகருக்கு இச்சம்பவம் தெரியவர இது தொடர்பில் குடும்பநல உத்தியோகத்தர் சங்கானை பிரதேசசெயலக நன்னடத்தை உத்தியோகத்தருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
நன்னடத்தை உத்தியோகத்தர் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் சம்பவம் தொடர்பில் முறைப்பாடு பதிவு செய்திருந்தனர். சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை, யாழ். சிறுவர் நீதிமன்றில் இடம்பெற்று வந்தது.
திங்கட்கிழமை(30) சந்தேகநபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி பிணை வழங்குமாறு நீதவானை கோரினார். வழக்கினை விசாரித்த நீதவான் பிணையில் செல்ல அனுமதியளித்தார்.
மேலும், சந்தேகநபர் தொடர்பான வழக்கு விசாரணை, எதிர்வரும் ஜுன் மாதம் 10ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.