கான்பூர்: ஏப்ரல் 1-ம் தேதியான நேற்று உலகம் முழுவதிலும் முட்டாள்கள் தினமாக கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் அங்கித் என்ற வாலிபர் ஒருவர் உத்தர பிரதேச மாநிலத்தில் ரயில் முன் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ரெயில்வே போலீசார் வாலிபரின் பிரேதத்தை மீட்டனர்.
இந்த துயரச் செய்தியை வாலிபரின் பெற்றோரிடம் போலீசார் தெரிவிக்க முயன்றனர். ஆனால் பெற்றோரே இத்தகவலை கேட்டு யாரோ தங்களை ஏப்ரல் ஃபூல் செய்கிறார்கள் என நினைத்து போலீசாரின் இணைப்பை துண்டித்துள்ளனர்.
வாலிபர் அங்கித்தின் பெற்றோர் போலீசாரின் தகவலை நம்ப மறுத்தனர். 2 முறை அழைத்த காவல்துறையினர் தாங்கள் இந்த தினத்திற்காக முட்டாளாக்க நினைக்கவில்லை எனவும், இது உண்மை சம்பவம்’ என்று போலீசார் விளக்கமாக தெரிவித்த பின்னரும் கூட அதை நம்ப மறுத்து அழைபைத் துண்டித்துள்ளனர்.
வேறு வழியின்றி அங்கித்தின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், ஜலவுன் மாவட்டத்தில் உள்ள அவர்களின் வீட்டிற்குச் சென்று அங்கித் இறந்த தகவலை தெரிவித்துள்ளனர்.
இதற்கு பிறகே அவர்களுக்கு உண்மை என தெரிய வந்துள்ளது. மகனின் துயரமான முடிவை எண்ணி அங்கித்தின் பெற்றோர் கதறித் துடித்தனர்.