புதுடெல்லி: முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன், கலாநிதி மாறன், அவரின் மனைவி காவேரி கலாநிதி உள்ளிட்டவர்களுக்கு சொந்தமான ரூ.742.54 கோடி அளவிலான சொத்துகளை மத்திய அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
தயாநிதி மாறன் தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்தபோது, ஏர்செல் நிறுவனத்துக்கு ஸ்பெக்ட்ரம் உரிமத்தை நிறுத்தி வைத்து, தொழிலதிபர் சிவசங்கரனை நிர்பந்தம் செய்து ஏர்செல் பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் கம்யூனி கேஷன்ஸ் நிறுவனத்துக்கு விற்கச் செய்ததாகவும்,
அதன் மூலம் மேக்சிஸ் நிறுவனத்திலிருந்து வேறொரு நிறுவனம் மூலம் மாறன் சகோதரர்களுக்குச் சொந்தமான சன் நெட்வொர்க் குழுமத்தில் முதலீடு என்ற வகையில் ஆதாயம் அடைந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
மாறன் சகோதரர்கள் மீது, ரூ.742 கோடி சட்ட விரோத பணப் பரிவர்த்தனை செய்ததாக (கருப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றுதல் தடைச் சட்டம்) சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. அதில் ஒரு பகுதியாக மேக்சிஸ் நிறுவனம், சன்நெட்வொர்க் குழுமத்தில் ரூ.629 கோடி முதலீடு செய்ததாகக் குற்றம்சாட்டியது.
இந்நிலையில், ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் ரூ.1,700 கோடி மோசடி செய்ததாக குற்றம்சாட்டி அதற்கு விளக்கம் கோரி அமலாக்கப்பிரிவு நோட்டீஸ் அனுப்பியது. இந்த வழக்கு தொடர்பாக கடந்த டிசம்பர் முதல் வாரத்தில் தயாநிதி மாறனிடம் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
அதையடுத்து, தயாநிதி மாறன், கலாநிதி மாறனுக்கு சொந்தமான ரூ.742 கோடி சொத்துகளை முடக்கி அமலாக்கப் பிரிவு அறிவித்துள்ளது. முடக்கப்பட்டுள்ள சொத்துக்களின் விவரம்:
* தயாநிதி மாறன் உள்ளிட்டோரின் வைப்பு நிதி ரூ.7.46 கோடி
* சன் டைரக்ட் டிவி நிறுவனம் வைப்பு நிதி ரூ.31.34 கோடி
* சௌத் ஏசியா எஃப்எம் ரூ.6.19 கோடி
* சௌத் ஏசியா எஃப்எம் பரஸ்பர நிதி ரூ.15.14 கோடி
* கலாநிதி மாறன் வைப்பு நிதி ரூ.100 கோடி
* கலாநிதி மாறனின் பரஸ்பர நிதி ரூ.2.78 கோடி
* காவேரி கலாநிதி பரஸ்பர நிதி ரூ.1.30 கோடி
* காவேரி கலாநிதியின் வைப்பு நிதி ரூ.1.78 கோடி
* கல் கம்யூனிகேஷன் நிறுவனம் ரூ.171.55 கோடி
* சன் டிவிக்கு சொந்தமான நிலம், கட்டடம் ரூ.266 கோடி
* சன் டைரக்ட் டிவியில் கலாநிதி மாறனின் பங்குகள் மதிப்பு ரூ.139 கோடி