ஒரு நாட்டில் கிட்டத்தட்ட பாதிப்பேர் உயிருக்குப் பயந்து வெளிநாடுகளுக்கு ஓடினால் எப்படி இருக்கும்?
அதுதான் சிரியாவில் நடக்கிறது.
வட மேற்கில் பாகிஸ்தான். அதற்கு மேற்காக ஆப்கானிஸ்தான். மேலும் மேலும் மேற்கில் சென்றால் ஈரான், பாரேன், ஈராக்.
இவற்றைத் தாண்டினால் சிரியா.
மத்தியதரைக் கடலின் கிழக்கு ஓரமாக அமைந்துள்ளது சிரியா.
சிரியாவின் தலைநகரம் டமாஸ்கஸ். சரித்திரத்தில் அழுத்தமான பதிவு பெற்ற நகரம் அது.
உலகில் தொடர்ந்து மக்கள் வசித்து வரும் தொன்மையான சில நகரங்களில் ஒன்று.
கடந்த ஒரு வருடமாகவே சிரியாவில் போர். உக்கிரமான யுத்தம். எந்த வெளிநாட்டுடனும் அல்ல. உள்ளுக்குள்ளேயே நடந்து உயிர்களைக் காவு வாங்கும் புரட்சி, அடக்குமுறை.
உயிரைக் காப்பாற்றிக் கொள்ள மக்கள் கிராமத்தை விட்டு கிராமம், நகரத்தை விட்டு நகரம் என்று இடம் பெயரத் தொடங்கி இப்போது நாட்டின் எல்லைகளைக் கடக்க வேண்டிய கட்டாயம்.
நோய்வாய்ப்பட்டவர்களின் நிலை இன்னும் படுமோசம். ஓடவும் முடியாது, உள்நாட்டில் மருத்துவ வசதிகளும் கிடையாது.
தரையில் நடக்கும் பயங்கரம் போதாதென்று வான்வெளித் தாக்குதல் வேறு. குண்டு வீசுவது அமெரிக்கா.
அவர்கள் இலக்கு ஐ.எஸ்.தீவிரவாதிகளின் கூடாரங்கள். ஆனால் சுற்றுப்புறத்தில் இருக்கும் பொது மக்களுக்கு பாதிப்பு இருக்காதா என்ன? இருக்கத்தானே செய்யும்… ஆனால் அதற்கு ஒன்றும் செய்ய முடியாது என்பார்கள்.
என்னதான் செய்வது?
சிரியாவின் எல்லையில் குர்து இனத்தவரைக் குறிவைத்து ஐ.எஸ்.தாக்குதல் நடத்த, அமெரிக்க அணியின் வான்வெளித் தாக்குதல் மேலும் மேலும் தீவிரமடைகிறது.
21 தாக்குதல்கள், இருபுறமும் நடந்துள்ளன. தீவிரவாதிகளின் தரப்புக்கு பலத்த சேதம். ஆனால் வெறியில் அவர்கள் மேலும் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்துகிறார்கள்.
இப்படி உள்நாட்டு அவதிகளால் தடுமாறும் மக்களால் ‘‘அரசாங்கமே, எங்களைக் காப்பாற்று’’ என்று கேட்க முடியவில்லை.
என்ன காரணம்?
ஒருவேளை பலவீனமான அரசாங்கம் கைகட்டிக் கொண்டிருக்கிறதா? இல்லை தன் பங்குக்கு அதுவும் மக்களை வாட்டி வதைக்கிறது!
கடந்த ஒரே வருடத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் சிரியாவின் உள்நாட்டுக் கலவரத்தில் இறந்திருக்கிறார்கள்.
முப்பது இலட்சம் பேர் அண்டை நாடுகளுக்கு ஓடிவிட்டார்கள்.
என்னதான் நடக்கிறது சிரியாவில்?
ஒரு பக்கம் சிரியா அரசு, மறுபக்கம் ஐ.எஸ்.தீவிரவாத அமைப்பு.
இரண்டும் கடுமையாக மோதிக் கொள்ள, இப்போதைக்கு சிரியா நாட்டில் சுமார் 40 சதவீதம் பேர்தான் அரசின் கட்டுப்பாட்டில்!
ஐ.நா. சபையின் உண்மை அறியும் குழு ஒன்று சிரியாவுக்குச் சென்றது. அவர்கள் மீதும் தாக்குதல். ‘‘சந்தேகமில்லாமல் சிரியாவில் உள்நாட்டுப் போர் நடக்கிறது’’ என்று யாருக்கும் சந்தேகமில்லாத ஒரு விஷயத்தை அறிக்கையாக வெளியிட்டது ஐ.நா.
‘‘ஆமாம். துருக்கி நாட்டு ஜெட் விமானம் ஒன்றை நாங்கள்தான் சுட்டோம். இப்போது அதற்கு என்னவாம்?’’ என்று தன் குற்றத்தைக் கூசாமல் ஒத்துக்கொண்டிருக்கிறது சிரியா அரசு.
இதைத் தொடர்ந்து துருக்கி தன் ஆதரவை சிரியாவில் உள்ள புரட்சியாளர்களுக்கு அளிக்கத் தொடங்கிவிட்டது வேறுவிஷயம்.
ஐ.நா.வின் சிறப்பு தூதராக அதன் முன்னாள் பொதுச் செயலாளர் கொபி அனான் நியமிக்கப்பட்டார். சிரியாவுக்கு ஒரே ஒரு விஜயம்.
அவ்வளவுதான்.
தன் தூதர் பதவியை ராஜினாமா செய்து விட்டார் அவர். தன் அமைதி திட்டத்தை இடது சுண்டு விரலால் தீண்டக் கூட சிரியா தயாராகவில்லை என்பதால் எழுந்த கோபம் அவருக்கு.
சிரியாவின் வடக்குப் பகுதியில் தலையை நுழைத்தது ‘ஐ.எஸ். ஒட்டகம்’ இன்று சிரியாவின் பெரும்பகுதி அதன் பிடியில். சில வருடங்களுக்கு முன் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் புரிந்த அநியாயங்களையும் தாண்டிச் செயல்படுகிறது ஐ.எஸ்..
ஐ.எஸ். ஏன் சிரியாவைத் தேர்ந்தெடுக்க வேண்டும்? அது ஒரு தனிக்கதை.
சிரியாவின் பிரச்சினையை சரியாகப் புரிந்து கொள்ள ஐ.எஸ். அமைப்பு குறித்து அறிவது அவசியம். அந்த அமைப்பு குறித்து அறிந்து கொள்ள முஸ்லிம்களின் இரு பிரிவுகள் குறித்துப் புரிந்து கொள்வது அவசியம்.
அதை பிறகுப் பார்ப்போம்.
இப்போதைய முக்கியப் பிரச்சினை…. ஈராக்கில் சிறுபான்மையினர் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
ஈராக்கில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மதச் சிறுபான்மையினரை ஐ.எஸ். தீவிரவாதிகள் மரணவாயிலில் நிற்கவைத்துள்ளனர்.
அவர்கள் சிறுபான்மையினரை குறிவைத்திருக்கிறார்கள் என்பது தெட்டத் தெளிவாகத் தெரிகிறது. ஐ.எஸ்.ஸிடம் சிக்கியவர்களில் பெரும்பாலானவர்கள் யஜீது என்ற சிறுபான்மைக் குழுவைச் சேர்ந்தவர்கள்.
ஆதிகாலம்தொட்டே இவர்கள் ஈராக்கில் வாழ்ந்துவருகின்றனர்.
ஈராக்கின் வடமேற்குப் பகுதியில் உள்ள சிஞ்சார் மலைப் பகுதிக்குப் பெரும்பாலானவர்கள் தப்பி ஓடிவிட்ட னர். முன்னதாக ஐ.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்கள் அவர்களைக் கொல்வதற்காகச் சுற்றிவளைத்தனர். அந்த 40,000 பேரில் பெரும்பாலானவர்கள் பெண்கள், குழந்தைகள் என்று ஐ.நா. தெரிவிக்கிறது.
அவர்கள் இப்போது மலையின் 9 வெவ்வேறு இடங்களில் குடும்பங்களுடன் தங்கியுள்ளனர். நோவாவின் பேழை, ஊழிக்காலத்தின் இறுதியில் ஒதுங்கிய மலை இதுதான் என்று உள்ளூர் மக்கள் கூறுகின்றனர்.
பைபிளில் வரும் இந்தக் கதை அனைவரும் அறிந்ததே.
யஜீதுகளை (Yazidis) ஐ.எஸ். பயங்கரவாதிகள் மிகவும் கொடூரமாக வெட்டிக் கொலை செய்த புகைப் படங்கள் சமீபத்தில் வெளியாகி, பார்ப்பவர்களின் நெஞ்சங்களையெல்லாம் பதறவைத்தன. சுமார் 500 பேர் கொல்லப்பட்டனர், அவர்களில் 40 பேர் சிறுவர், சிறுமியர்.
சுமார் 1,30,000 யஜீதுகள் (Yazidis) ஈராக்கின் குர்திஸ்தான் பகுதியில் உள்ள தோஹுக் நகருக்கும் இர்பில் நகருக்கும் ஓடிவிட்டனர்.
இவை ஈராக்கின் வடக்குப் பகுதியில் உள்ளன.
ஈராக்கின் எல்லாப் பகுதிகளிலும் ஐ.எஸ். பயங்கரவாதிகள், கிறிஸ்தவர்களையும் முஸ்லிம்கள் அல்லாத பிற மதத்தவரையும் குறிவைத்துக் கொல்கின்றனர். கிறிஸ்தவர்கள் அதிக எண்ணிக்கையில் வசித்த நகரம் இப்போது வெறிச்சோடியிருக்கிறது.
ஐ.எஸ்.ஸுக்கு அஞ்சி அவர்கள் ஏற்கனவே அந்த ஊரைக் காலிசெய்துவிட்டு ஓடிவிட்டனர்.
யஜீதுகள் (Yazidis) தாக்கப்படுவதை ஐ.நா.-வின் பாதுகாப்பு கவுன்சில் கடுமையாகக் கண்டித்திருக்கிறது. இதற்குக் காரணமானவர்கள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்களுக்காக நீதியின்முன் நிறுத்தப்பட்டு, கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள் என்று எச்சரித்திருக்கிறது.
உலகில் மொத்தம் 7 லட்சம் யஜீதுகள் (Yazidis) வாழ்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் வடக்கு ஈராக்கில் சிஞ்சார் மலைப் பிரதேசத்திலும் அதைச் சுற்றியுள்ள நகரங்களிலும் வசிக்கின்றனர் என்று ஒரு கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.
வரலாற்றுரீதியாகவே இவர்களை மற்றவர்கள் தவறாகத்தான் புரிந்துகொண்டுள்ளனர். யஜீதுகள் இனரீதியாகப் பார்க்கும்போது குர்துகள்.
(Yazidis பெண்கள்)
மற்றவர்களால் கடுமையாக ஒடுக்கப்பட்டும் படுகொலை செய்யப்பட்டும்கூட இந்த மக்கள் தங்களுடைய மதநம்பிக்கையைவிட மறுக்கின்றனர்.
அத்துடன் வேற்று மதங்களுக்கு மாறவும் மறுக்கின்றனர். எல்லாவற்றையும்விட முக்கியம் இவர்கள் தங்களுடைய மதத்துக்கு மற்றவர்கள் மதம் மாறுவதையும் விரும்புவதுமில்லை, ஆதரிப்பதுமில்லை. அதைவிட முக்கியம், இந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் பிறருடன் திருமண உறவையும் வைத்துக்கொள்வதில்லை.
எனவே, இவர்கள் அழிக்கப்பட்டால் இந்த இனம் கிளைப்பதற்கோ வளர்வதற்கோ வாய்ப்பே இல்லை.
11ஆம் நூற்றாண்டில் உமையத் ஷேக் என்பவர்தான் இதை உருவாக்கினார். இந்த மதமானது யூத மதம், இஸ்லாமிய மதம், கிறிஸ்தவ மதம், நெருப்பைத் தெய்வமாக வழிபடும் ஜொராஸ்டிரிய மதம் ஆகியவற்றிலிருந்து ஒவ்வொரு அம்சத்தையும் எடுத்துக்கொண்டது.
கிறிஸ்தவர்களுக்கு இருப்பதைப் போல இவர்களுக்கு ஞானஸ்நானம் உண்டு. இஸ்லாமியர்களைப் போல விருத்த சேதனம் உண்டு. ஜொராஸ்டிரியர்களைப் போல தீ வழிபாடு உண்டு.
ஆனால், இவர்கள் ஆபிரகாமை ஏற்றுக்கொள்ளாதவர்கள்.
இவர்கள் மாலிக் டவ்வூஸ் என்ற மயில் தேவதையை வழிபடுவதுதான் மற்ற மதத்தினரால் சகித்துக்கொள்ளவே முடியவில்லை. மயில் தேவதையைக் குத்துவிளக்கில் பொறித்து வைத்துக்கொள்வது இவர்கள் வழக்கம்.
உருவ வழிபாடு தடை செய்யப்பட்டிருக்கும்போது, மயில் தேவதை உருவம் எதற்கு என்பதுதான் பெரும்பாலானவர்களின் கேள்வி.
மொத்தம் ஏழு தேவதைகள் என்றும், அதில் தலையாய தேவதை இந்த மாலிக் டவ்வூஸ் என்றும் பிற தேவதைகள் அனைத்தும் அதற்கும் கீழே என்பதுதான் யஜீதுகளின் (Yazidis) நம்பிக்கை.
சாத்தானைக் கடவுள் சபித்து, சொர்க்கத்திலிருந்து பூமிக்கு விரட்டியதாகப் புராணக் கதைகள் உண்டு. 18, 19ஆம் நூற்றாண்டுகளில் ஆட்டோமான் சாம்ராஜ்யத்தின்போதும் யஜீதுகளுக்கு (Yazidis) எதிராக 72 முறை படுகொலைகள் நடந்திருக்கிறது.
இந்நிலையில், எங்களைக் கொல்லாதீர்கள், காப்பாற்றுங்கள் என்று யஜீது இனத்தைச் சேர்ந்த வியான் டாகில் என்ற பெண் உறுப்பினர் ஈராக்கிய நாடாளுமன்றத்தில் கதறி அழுதார்.
ஈராக்கிய அரசும் சர்வதேசச் சமூகமும் தங்களைக் காக்க வேண்டும் என்று யஜீதுகள் வேண்டுகோள் விடுத்தபடி இருக்கின்றனர்.
தொடரும்…
எஸ்.ஜே.பிரசாத்
அடடா அகங்கார அரக்க கைகளில் உலகிங்கே… (எரிந்து கொண்டிருக்கின்றது எண்ணொய் பூமி – (பாகம்-3)