கென்யாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள பல்கலைக்கழகமொன்றிற்குள் நுழைந்து அல்சகாப் தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் 148 மாணவர்கள் கொடூரமான முறையில் சுட்டுக் கொல்லப்பட்ட செய்தியை நிச்சயம் பலரால் வெறும் செய்தியாய் கடந்து போயிருக்க முடியாது.
படித்தவர்களுக்கே மன இறுக்கத்தை உருவாக்கக் கூடிய அந்த சம்பவத்தின் போது, அலமாரியில் மறைந்திருந்த இளம் பெண்ணின் மனதிற்குள், அந்த கொடூர சம்பவம் ஏற்படுத்தியிருக்கும் பாதிப்பு கற்பனை செய்தும் பார்க்க முடியாதது.
6 மணி நேரமாக தீவிரவாதிகள் நடத்திய நரவேட்டையின் போது, இறந்த மாணவர்களின் மரண ஓலங்களைக் கேட்டு அஞ்சிய ‘சிந்தியா செரோடிக்’ என்ற மாணவி நெஞ்சைப் பிளக்கும் பதட்டத்துடன் அங்குள்ள அலமாரியில் மறைந்திருந்தாள், மரண ஓலம் நின்று போனாலும் மனதில் இருந்த பயம் அதிகமாகவே வெளியேற முடியாமல் 2 நாட்கள் அந்த அலமாரிக்குள்ளாகவே தன் உடலை குறுக்கிக் கொண்டாள்.
2 நாட்களுக்குப் பிறகு அலமாரியை விட்டு வெளியே வந்த சிந்தியா, பார்த்த முதல் காட்சியே சுவர்களில் சிதறியிருந்த சக மாணவர்களின் ரத்தம் தான்.
பதறிப் போன அவளின் அலறலைக் கேட்டு ஓடி வந்த கென்ய போலீசாரைக் கூட அல்-கொய்தா தீவிரவாதிகள் என்று பயந்து இன்னும் சத்தம் போட்டு அழுதிருக்கிறாள்.
கிட்டத்தட்ட 50 மணி நேரம் தன் அலமாரியில் உணவும் தண்ணீரும் இன்றி உச்சகட்ட மன வேதனையை அனுபவித்த சிந்தியாவுக்கு குடிப்பதற்கு பால் கொடுத்த ஆசிரியர்கள் அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
சிந்தியா தனது மன அழுத்தத்திலிருந்து மீள கவுன்சிலிங் கொடுக்கப்படவுள்ள நிலையில் 2 நாட்கள் உள்ளே எப்படி இருந்தீர்கள் என்ற கேள்விக்கு, ”எனது கடவுளை பிரார்த்தித்தபடி இருந்தேன்” என்கிறார்.
இந்த தாக்குதலுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் மூவர் கிழக்கு நகரமான கரிஸ்ஸாவில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் ஒருங்கிணைந்து நடக்க உதவியிருந்தவர்கள் என கென்ய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.