விடுதலைப் புலிகள் போரில் தோற்கடிக்கப்பட்டு ஆறு வருடங்கள் நிறைவடையவுள்ளபோதிலும், இலங்கையில் விடுதலைப் புலிகளை வைத்து அரசியல் நடத்தும் போக்கு மட்டும் இன்னமும் மாறவில்லை.
மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் காலத்தில் இந்த நிலை முன்னர் இருந்தது. ஆனால், அதற்கு தாமும் விதிவிலக்கானவர்கள் அல்ல, சற்றும் சளைத்தவர்கள் அல்ல என்று இப்போதைய அரசாங்கமும் விடுதலைப் புலிகள் விவகாரத்தை வைத்து அரசியல் நடத்த ஆரம்பித்திருக்கிறது.
தற்போதைய அரசாங்கம், தாமும் விடுதலைப் புலிகளுக்கு எதிரானவர்கள் என்பதை பெரும்பான்மையின மக்களிடத்தில் வலிந்து கூற முற்படுவதாகவே சந்தேகம் தோன்றியிருக்கிறது.
அண்மையில் ஐரோப்பிய ஒன்றிய கவுன்சிலில் உள்ள 28 நாடுகளும் அங்கம் வகிக்கும், உயர்மட்ட கொள்கைகளை தீர்மானிக்கும் சபையில், விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை தொடர்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதனை வைத்தே, இப்போதைய அரசாங்கம் பெரியளவிலான பிரசார ஆதாயத்தை தேட ஆரம்பித்துள்ளது.
2006ஆம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியம் கொண்டுவந்திருந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடை, கடந்த 2014ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம், ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தினால் நீக்கப்பட்டது.
இந்த தடை விதிக்கப்பட்ட முறை தவறானது என்ற அடிப்படையில், ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்திருந்தது.
இந்த தீர்ப்புக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட மனு இன்னமும் மீளாய்வு செய்யப்பட்டுவரும் நிலையிலேயே, ஐரோப்பிய ஒன்றியம் இந்த முடிவை எடுத்திருக்கிறது.
உண்மையில், ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை நீக்கி, விடுத்த உத்தரவும் சரி, இப்போது, அந்த தடையை நீடித்து ஐரோப்பிய ஒன்றிய கவுன்சில் எடுத்துள்ள முடிவும் சரி பெரியதொரு விவகாரம் என்று கருதுவதற்கில்லை.
ஏனென்றால், இவை இரண்டுமே காலம் கடந்த செயற்பாடுகள் என்றே கூறவேண்டும். இதற்கான விளக்கம், இந்தப் பத்தியின் இன்னொரு பகுதியில் தரப்படும்.
ஆனால், இலங்கையின் இப்போதைய அரசாங்கமோ, இந்த தடை விவகாரத்தை வைத்து நன்றாகவே அரசியல் செய்யப் பார்க்கிறது.
விடுதலைப் புலிகள் மீதான தடையை நீடிக்க ஐரோப்பிய ஒன்றிய கவுன்சில் முடிவெடுத்தமை குறித்து, ஐரோப்பிய ஒன்றியம் எந்தத் தகவலையும் வெளியிடவில்லை. இலங்கை அரசாங்கம்தான் அதனை முந்திக்கொண்டு வெளிச்சத்துக்கு கொண்டுவந்தது.
பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பெரேரா, இதனை ஊடகங்களிடம் தெரிவித்து, இந்த தடை நீடிப்பு இலங்கை அரசாங்கத்தின் மிகப்பெரிய இராஜதந்திர வெற்றி என்றும் குறிப்பிட்டிருந்தார்.
அரசாங்கத்தின் இந்த வெற்றி பெருமிதத்தை பெரும்பாலான ஊடகங்கள் அவ்வளவாக கண்டுகொள்ளவில்லை. சாதாரணமாக ஒரு செய்தியுடன் நிறுத்திக்கொண்டன.
குறிப்பாக, சிங்கள ஊடகங்களில் இது ஒரு பெரிய விவகாரமாகவே மாறவில்லை. இது அரசாங்கத்துக்கு கடுமையான ஏமாற்றத்தையும் கடுப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.
கொழும்பில் பின்னர் செய்தியாளர்களிடம், இது குறித்து ஏமாற்றமும் கவலையும் வெளியிட்டிருந்தார் பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பெரேரா.
விடுதலைப் புலிகள் மீது மீண்டும் தடை விதிக்கப்பட்ட விவகாரத்தை, ஊடகங்கள் அவ்வளவாக முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
இப்போது சிங்கள ஊடகங்களுக்கு, முன்னைய அரசாங்கத் தரப்புக்கும் இப்போதைய அரசாங்கத் தரப்புக்கும் சிண்டுமுடியும் செய்திகளும் உட்கட்சிப்பூசல்கள் பற்றிய பரபரப்புகளும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மீள்வருகை பற்றிய செய்திகளுமே அதிகம் முக்கியத்துவம் வாய்ந்ததாக தெரிகின்றன.
அதை விட, ஊழல், மோசடி விசாரணை விவகாரங்களும் இன்னும் பிற அரசியல் கிசுகிசுக்களும் கூட தாராளமாக உலாவருகின்ற நிலையில், கொழும்பில் பெரும்பாலான ஊடகங்களில், ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த தடை விவகாரம் அவ்வளவாக முக்கியத்துவம் பெறாமல் போயிருக்கலாம்.
ஆனாலும், விடுதலைப் புலிகள் விவகாரத்துக்கும் இலங்கை ஊடகங்கள் முக்கியத்துவமளிப்பதை தவிர்த்து விடுகின்றன என்று கருதுவதற்கில்லை.
இதுவொரு மிகப்பெரிய அரசியல் ஆதாயம் மிக்க செய்தியாக அமையும் என்று அரசாங்கத் தரப்பு எதிர்பார்த்திருக்கிறது போலும். அதனால், அவர்களால், இந்த ஏமாற்றத்தை தாங்கிக்கொள்ள முடியவில்லை.
அதை விட, அந்த ஏமாற்றத்தை வெட்கமின்றி வெளிப்படையாக கூறிக்கொள்ளவும் முடிந்திருக்கிறது. எது எவ்வாறாயினும், மீண்டும் விடுதலைப் புலிகளை அரசியலுக்கு கொண்டுவருவதில் இப்போதைய அரசாங்கமும் தனக்குள்ள ஈடுபாட்டை வெளிப்படுத்தியிருக்கிறது.
விடுதலைப் புலிகள் மீதான தடையை ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் நீக்கியபோது, இலங்கையில் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் பதவியிலிருந்தது.
அந்த தடை நீக்கத்தினால், பெரிதாக எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை என்பதை மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் நன்றாகவே அறியும். ஆனாலும், அதை தனது அரசியல் ஆதாயத்துக்காக பயன்படுத்தியிருந்தது முன்னைய அரசாங்கம்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தேர்தலுக்கு தயார்படுத்திக்கொண்டிருந்த அந்த வேளையில், அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவும் அதனை எதிர்கொள்வதற்கான இரகசியத் தயாரிப்புகளில் ஈடுபட்டிருந்தார்.
ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதி தேர்தல் கூட்டணி தொடர்பாக லண்டனில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவை சந்தித்துப்பேச சென்றிருந்தார். அவர் அங்கிருந்து திரும்பிய கையுடன், ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தில் தடை நீக்க அறிவிப்பு வெளியானது.
உடனடியாகவே மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம், இது ரணில் செய்த சூழ்ச்சி என்றும் லண்டனுக்கு சென்ற அவர், புலிகள் மீதான தடையை நீக்குவது குறித்துப் பேச்சு நடத்தியிருந்தார் என்றும் ஊடகங்களில் கடுமையான பிரசாரத்தை மேற்கொண்டது.
ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம், இந்த தீர்ப்பை அறிவித்தது சட்டரீதியான காரணங்களை சுட்டிக்காட்டியே என்றாலும், அது ஓர் அரசியல் ரீதியான முடிவென்று காண்பிக்க முயன்றது மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம்.
இப்படியொரு செயல் நடைமுறைச்சாத்தியமே இல்லை என்று மஹிந்த அரசாங்கம் நன்றாகவே அறிந்திருந்தாலும், விடுதலைப் புலிகளை வைத்து, பெரும்பான்மையின மக்களை எப்படி ஏமாற்றலாம் என்ற வித்தையை நன்றாகவே கற்றுவைத்திருந்த மஹிந்த ராஜபக்ஷ, அதனை ரணிலுக்கு எதிரான பிரசாரமாக்கினார்.
முக்கியமான தருணமொன்றில் இத்தகைய குற்றச்சாட்டு ரணில் மீது சுமத்தப்பட்டபோது, ஐக்கிய தேசியக் கட்சி ஆடிப்போய்விட்டது.
உடனடியாகவே அந்த தடையை மறுபடியும் நீடிக்கவேண்டும் என்று கோரி, ஐரோப்பிய ஒன்றியத்துக்கு கடிதம் எழுதினார் ரணில்.
அதனை நாடாளுமன்றத்தில் வெளியிட்டு, தனக்கும் விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கிய நீதிமன்றத் தீர்ப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று நிரூபிக்கமுயன்றார். அந்த நாடகத்தின் தொடர்ச்சி இப்போது நடந்துகொண்டிருக்கிறது.
ஐரோப்பிய ஒன்றியத்திடம், முன்னர் ரணில் விக்கிரமசிங்க விடுத்த வேண்டுகோளை அடுத்தே, விடுதலைப் புலிகள் மீதான தடை நீடிக்கப்பட்டுள்ளது என்கிறார் பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பெரேரா.
இந்த தடைக்காக பிரசெல்ஸ், லண்டன், புதுடெல்லி, வொஷிங்டன் உள்ளிட்ட தலைநகரங்களில் இலங்கை அரசாங்கம் பேச்சுக்களை நடத்தியதாகவும் இது இலங்கை அரசாங்கத்தின் மிகப்பெரிய இராஜதந்திர வெற்றி என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
அதாவது, விடுதலைப் புலிகளுக்கும் ஐ.தே.க. வுக்கும் இடையில் தொடர்புகள் இருப்பதாக முன்னர் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் கூறிய குற்றச்சாட்டுகளை பொய் என்று நிரூபிக்கவும் தாமும், விடுதலைப் புலிகளுக்கு எதிரானவர்களே என்று காட்டுவதற்கும் இப்போதைய அரசாங்கம் முயற்சிக்கிறது.
தேர்தல் ஒன்று மீண்டும் வரவுள்ள சூழலில், விடுதலைப் புலிகளை வைத்து அரசியல் ஆதாயம் தேடவே கொழும்பு அரசியல் களம் முயற்சிக்கிறது. விடுதலைப் புலிகளின் பெயரை பயன்படுத்தும் பாத்திரங்கள் மாறியுள்ளனவே தவிர, அந்தப் பாத்திரங்களின் அடிப்படை நோக்கம் மாறவில்லை.
விடுதலைப் புலிகளை வைத்து அரசியல் ஆதாயம் தேடும் நோக்கமும் பெரும்பான்மையின மக்களிடத்தில் உள்ள விடுதலைப் புலிகள் எதிர்ப்புணர்வை தமது அரசியல் நலனுக்காக திருப்பிக்கொள்வதிலும் இன்றுவரை நாட்டம் காண்பிக்கப்படுகிறது. இப்போது நடந்திருப்பதும் அது தான்.
விடுதலைப் புலிகள், இலங்கையில் ஆயுதம் ஏந்திப் போராடிய ஓர் இயக்கமாக இருந்தாலும், அதன் நேர்மறையானதோ, எதிர்மறையானதோ செல்வாக்கு இலங்கை அரசியலில் எங்கும் வியாபித்திருக்கிறது.
புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டு ஆறு வருடங்களாகிவிட்ட நிலையிலும், அதனை வைத்து அரசியல் நடத்தப்படுகிறது என்றால், அதனை சுற்றியே இலங்கையின் அரசியல் அச்சு சுழல்கிறது என்றால், புலிகள் இயக்கம் தோற்றுவிட்டதாக கருதமுடியாது.
இந்த தோல்வி கொள்கை ரீதியான, கோட்பாட்டு ரீதியான தோல்வியையே சுட்டிக்காட்டுகிறது. விடுதலைப் புலிகளின் அடையாளமே இருக்கக்கூடாது என்பதற்காக ஒரு புல்பூண்டு கூட மிஞ்சாமல் அதன் தடயங்களை அழித்த அரசாங்கமே, அவர்களை மக்களின் முன்பாக அவ்வப்போது நினைவுபடுத்திக்கொள்கிறது.
அதனை வைத்து அரசியல் நடத்துகிறது. இது, விடுதலைப் புலிகள் இயக்கம் கொள்கை ரீதியாக செத்துவிடவில்லை என்பதற்கு சிறந்த உதாரணம்.
விடுதலைப் புலிகள் இயக்கம் உயிர்ப்புடன் செயற்பட்ட காலத்தில், அதனைச் சுற்றியே தெற்கின் அரசியலும் பின்னப்பட்டுக் கிடந்தது.
விடுதலைப் புலிகளுடன் போரிடுதல் அல்லது அவர்களுடன் சமாதானத்தை ஏற்படுத்திக்கொள்ளுதல் என்று ஏதாவதொரு மையத்தை முன்வைத்தே கொழும்பு அரசியல் நகர்ந்தது.
காலத்துக்குகாலம் அந்த போக்கு மாற்றம் இருந்தாலும், அதன் அச்சாணியாக இருந்தது விடுதலைப் புலிகள்.
உதாரணத்துக்கு, சந்திரிகாவை சமாதான தேவதையாக ஆட்சியில் அமர்த்தியதுக்கும் விடுலைப் புலிகளுடன் அவர் சமாதானம் செய்துகொள்வார் என்ற நம்பிக்கையே காரணம்.
பின்னர் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கமும் அதுபோன்றதொரு நம்பிக்கையிலேயே. 2001ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. அவையிரண்டும் விடுதலைப் புலிகளுடன் அமைதியான இணக்கப்பாட்டுக்காக ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள்.
2005ஆம் ஆண்டுக்கு பின்னர், மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் வெற்றிகள் அனைத்துமே விடுதலைப் புலிகளை தோற்கடிப்பதற்காகத் தான்.
ஆக, காலத்துக்குக்காலம் விடுதலைப் புலிகளை மையப்படுத்தியே, கொழும்பு அரசியலின் நிலை மாற்றங்கள் தோற்றம் பெற்றன. இப்போதும் கூட அந்த நிலை பெரியளவில் மாற்றம் காணவில்லை.
அதேவேளை, இப்போது விடுதலைப் புலிகள் இலங்கையில் இயங்கு நிலையில் இல்லை. அவர்களால் இப்போதா அல்லது இன்றும் சிறிது காலத்துக்குள்ளாகவோ, ஒரு ஆயுதப் போராட்டத்தை மீள ஆரம்பிக்கமுடியாது என்ற கருத்தே எல்லா படைத்துறை வல்லுனர்களிடமும் உள்ளது.
அத்தகையதொரு ஆயுதப் போராட்டத்துக்கான முகிழ்நிலை ஏதும் இப்போது இல்லை என்பதுடன், அத்தகைய வாய்ப்புகளை தடுப்பதற்கான எல்லா முன்னேற்பாடுகளுடனும் அரசாங்கம் இருக்கிறது. இப்படியான நிலையில், ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம், புலிகள் இயக்கம் மீதான தடையை நீக்க எடுத்த முடிவினால் எந்தப் பயனும் ஏற்பட்டிருக்காது.
அது புலிகள் இயக்கத்தில் புலம்பெயர்ந்துள்ளவர்கள் மத்தியில் முரண்பாடுகளையே தீவிரப்படுத்தியிருக்கும். அதுபோலவே, இப்போது மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளதிலும், பெரிய நன்மைகள் என்று கூறமுடியாது. ஆனால், அதனை பூதாகாரப்படுத்திக் காட்ட முனைகிறது அரசாங்கம்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை மீள விதிக்கப்படாது போனால், தடைசெய்யப்பட்டுள்ள புலிகளின் சொத்துக்கள் விடுவிக்கப்பட்டுவிடும் என்றும் பில்லியன் கணக்கான டொலர் பணத்தை வைத்து அவர்கள் ஆயுதப் போராட்டத்தை மீள ஆரம்பித்துவிடலாம் என்றும் பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பெரேரா கூறியிருக்கிறார்.
ஆயுதப் போராட்டம் ஒன்றுக்கு வெறும் பணம் மட்டும் அடிப்படையாகிவிட முடியாது. அந்த உண்மை அரசாங்கத்துக்கு தெரியவில்லை. வெறும் நிதியை வைத்து போராட்டத்தை நடத்திவிட முடியாது.
ஓர் ஆயுதப் போராட்டத்துக்கான முகிழ்நிலை அதற்கும் அப்பால் பல விடயங்களை உள்ளடக்கியது. தமிழர்கள் மீண்டும் ஆயுதம் ஏந்தமாட்டார்கள், அதற்கான வாய்ப்புகள் முற்றிலும் இல்லை என்று கூறமுடியாது.
அதற்காக வாய்ப்புகள் இப்போது இல்லை. அத்தகைய வாய்ப்புகளை இனியும் உருவாகாமல் தடுக்கும் பொறுப்பு அரசாங்கத்திடமே உள்ளது.
தமிழர்களுக்கான உரிமைகள் விடயத்தில், அரசாங்கம் கடைப்பிடிக்கும் கொள்கையே அந்த முகிழ்நிலையை தீர்மானிக்கும் முக்கிய விடயமாக இருக்கும். இதனை தற்போதைய அரசாங்கம் எந்தளவுக்கு புரிந்துகொண்டுள்ளது என்று தெரியவில்லை.
ஆனால், விடுதலைப் புலிகளை வைத்து நன்றாகவே அரசியல் நடத்தலாம் என்று மட்டும் தெரிந்துவைத்திருக்கிறது.