யாழ். தம்பானை நாச்சிமார் கோவில் வீதியிலுள்ள வீட்டுக்காரருக்கு எதிராக 75 வயது மூதாட்டியொருவர் ஞாயிற்றுக்கிழமை (05) விசித்திர முறைப்பாடு ஒன்றை செய்துள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.
வீதியில் சென்ற தன்னை மேற்படி பகுதியிலுள்ள வீட்டில் வளர்க்கப்படும் நாய் கடித்து விட்டதாகவும், அது தொடர்பில் நாய் வளர்க்கும் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கூறி முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.
மேற்படி வீட்டில் 3 நாய்கள் வளர்க்கப்படுவதாகவும், அவற்றில் இரண்டு நாய்களுக்கு விசர் நாய் தடுப்பூசி ஏற்றப்படவில்லையென மூதாட்டி முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
முறைப்பாட்டை தெரிவித்த மூதாட்டி அதன் பின்னர் அச்சுவேலி வைத்தியசாலைக்குச் சென்று சிகிச்சை பெற்றார்.
கடற்கரையில் கேக் வெட்ட முயன்ற யாழ் வாலிபர்கள்: நீரில் மூழ்கி ஒருவர் பலி!
05-04-2014
தொண்டைமானாறு அக்கரை கடலில் சனிக்கிழமை(04) நண்பர்களுடன் குளித்துக்கொண்டிருந்த போது காணாமற்போன இளைஞனின் சடலம், ஞாயிற்றுக்கிழமை(05) காலையில் மீட்கப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.
புத்தூர் வடக்குப் பகுதியை சேர்ந்த கருணாணந்தன் மிதுலன் (வயது 22) என்பவரே சடலமாக மீட்கப்பட்டார்.
நண்பர் ஒருவரின் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்காக கடலுக்கு சென்ற 12 நண்பர்களும் கடலில் குளித்த பின்னர் கேக் வெட்டுவதற்காக அனைவரையும் அழைத்தபோது, நண்பர்களில் ஒருவர் மட்டும் கரைக்கு வரவில்லை.
இதனையடுத்து, இது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதுடன் மீனவர் மற்றும் சுழியோடிகளின் உதவியுடன் தேடுதல் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
எனினும், காணாமற்போனவர் மீட்கப்படவில்லை. ஏனைய 11 நபர்களும் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வந்தனர்.
இந்நிலையில் காணாமற்போன இளைஞன், ஞாயிற்றுக்கிழமை சடலமாக மிதந்ததையடுத்து, மீனவர்கள் சடலத்தை மீட்டனர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கந்தசுவாமி ஆலயத்துக்கு பின்புறமாக இராணுவ சிப்பாயின் சடலம் மீட்பு
05-04-2014
கிளிநொச்சி, கந்தசுவாமி ஆலயத்துக்கு பின்புறமாகவுள்ள 58 ஆவது இராணுவ படைப்பிரிவில் பணியாற்றும் இராணுவ சிப்பாய் ஒருவர், ஞாயிற்றுக்கிழமை (05) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.
காலியை சேர்ந்த எச்.எஸ்.மதுசங்க (வயது 25) என்ற சிப்பாயே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவர், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் சடலம் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.