களவெடுக்க வந்தவனை மனைவியின் கள்ளக்காதலன் என நினைத்து மனைவியைத் தாக்கிய கணவன்

யாழ் அராலிப் பகுதியில் நான்கு மாதக் குழந்தையின் இளம் தாயார் கணவரால் கடுமையாகத் தாக்கப்பட்ட நிலையில் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேசன் வேலைக்குச் சென்று விட்டு வீட்டுக்குத் திரும்பிய கணவர் வீட்டின் கிணற்றடிப் பகுதிக்குச் சென்ற போது வீட்டின் பின்புறத்தில் நடப்பட்டிருந்த மரவள்ளித்தோட்டத்தினுள் இருந்து 25 வயது மதிக்கத்தக்க ஒருவன் வேலைபாய்ந்து வெளியே ஓடுவதை அவதானித்துள்ளார்.

அவனைத் துரத்திச் சென்ற போது அவன் துாரத்தில் நிறுத்தப்பட்டிருந்த பெட்டி கட்டிய  சபரி மோட்டார் சைக்கிளில் ஓடித் தப்பிவிட்டான்.

இதனையடுத்து மனைவி மீது சந்தேகம் கொண்ட கணவர் வீட்டினுள் புகுந்து மனைவியை கட்டையால் தலையில் தாக்கியுள்ளான்.

இதனால் தலைப் பகுதியில் இரத்தம் வழிந்தநிலையில் மனைவி தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.

இருவரும் அண்மையிலேயே காதலித்துத் திருமணம் செய்ததாகவும் தற்போது 4 மாதக் குழந்தைக்கு தாயாக மனைவி இருப்பதாகவும் தெரியவருகின்றது.

மனைவி மீது தாக்குதல் மேற்கொண்ட கணவன் பின்னர் அயலவர்களுடன் சேர்ந்து வீட்டில் நடாத்திய தேடுதலில் உழவு இயந்திரப் பாகங்கள் உட்பட்ட 50 கிலோவுக்கும் அதிகமான இரும்புப் பொருட்கள் வீட்டின் வேலிக்கு அருகில் குவிக்கப்பட்டு கொண்டு செல்லத் தயாராக இருந்தது அவதானி்க்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து கணவனை அயலவர்கள்  களவெடுக்க வந்த கள்ளனை மனைவியுடன் சந்தேகப்பட்டது தவறு என தெரிவித்து கடுமையாக ஏசி எச்சரித்துள்ளதாகத் தெரியவருகின்றது.

Share.
Leave A Reply