அமெரிக்க பொப்பிசை நட்சத்திரமான மைக்கல் ஜக்ஸன், தனது பாலியல் துஷ்பிரயோக நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டவர்களை மௌனித்திருக்கச் செய்வதற்காக 200 மில்லியன் டொலர்களை (சுமார் 258 கோடி ரூபா) செலவிட்டிருந்தார் என சட்டத்தரணிகள் சிலர் தெரிவித்துள்ளனர்.
பொப்பிசை சக்கரவர்த்தி என வர்ணிக்கப்பட்ட மைக்கல் ஜக்ஸன், 2009 ஜுன் 25 ஆம் திகதி தனது 50 ஆவது வயதில், அளவுக்கு அதிகமான செறிவுகொண்ட மருந்தேற்றப்பட்டதால் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
அவர் மறைந்து சுமார் 6 வருடங்களாகின்ற போதிலும் அவர் மீதான குற்றச்சாட்டுகளும் அவருக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளும் இன்னும் ஓயவில்லை.
தாம் சிறுவர்களாக இருந்த காலத்தில், மைக்கல் ஜக்ஸனுடன் இணைந்து செயற்பட்ட வாட் ரொப்ஸன், ஜேம்ஸ் சேவ்சக் ஆகிய இருவர், மைக்கல் ஜக்ஸன் தம்மை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக குற்றம் சுமத்தியுள்ளனர்.
இதனால், தமக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என மைக்கல் ஜக்ஸனுக்கு சொந்தமாகவிருந்த 150 கோடி டொலர் பெறுமதியான ஜக்ஸன் எஸ்டேட்டின் நிர்வாகிகளிடம் மேற்படி இருவரும் கோருகின்றனர்.
இந்நிலையில், பாலியல் குற்றச்சாட்டுகள் வெளிவராமல் தடுப்பதற்காக 200 மில்லியன் டொலர்களை மைக்கல் ஜக்ஸன் செலவிட்டிருந்தார் என வாட் ரொப்ஸன் மற்றும் மேஸ் சேவ்சக் ஆகியோரின் சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.
தான் 9 வயது சிறுவனாக இருந்தபோது மைக்கல் ஜக்ஸன் தன்னை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாகவும் தனது தந்தைக்கு 10 லட்சம் டொலர்களை ஜக்ஸன் வழங்கியதாகவும் ஜேம்ஸ் சேவ்சக் (36) தெரிவித்துள்ளார்.
இவர் மைக்கல் ஜக்ஸனுடன் விளம்பரமொன்றில் இணைந்து தோன்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
1987 ஆம் ஆண்டு 8 வயது சிறுவனாக தான் இருந்தபோது முதன்முதலில் மைக்கல் ஜக்ஸனை சந்தித்ததாக ஜேம்ஸ் சேவ்சக் கூறுகிறார்.
அதேவேளை தான் 9 வயது சிறுவனாக இருந்தபோது தன்னை மணமகளாக சித்தரித்து போலி திருமண வைபவமொன்றையும் மைக்கல் ஜகஸன் நடத்தினார் என நீதிமன்றிடம் சேவ்சக் தெரிவித்துள்ளார்.
ஜேம்ஸ் சேவ்சக்கை 100 தடவைகளுக்கு மேல் மைக்கல் ஜக்ஸன் துஷ்பிரயோகப்படுத்தியதாக சேவ்சக்கின் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
ஜக்ஸன் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தும் மற்றொருவரான வாட் ரொப்ஸன், அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த நடனக் கலைஞராவார்.
தற்போது 32 வயதான வாட் ரொப்ஸன், பிரபல இசைத்துறை நட்சத்திரங்களான பிரிட்னி ஸ்பியர்ஸ், பாடகர் ஜஸ்டின் டிம்பர்லக் ஆகியோருடனும் இணைந்து பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் சிறுவயதில் ஜக்ஸன் மீதான பாலியல் குற்றச்சாட்டை நிராகரித்து வாக்கு மூலம் அளித்திருந்தார்.
ஆனால், சுமார் ஒரு வருடகாலமாக ஜக்ஸன் தன்னை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக பின்னர் குற்றம் சுமத்தினார்.
’22 வருட காலமாக நான் இதை நிராகரித்து மௌனமாக வாழ்ந்தேன்’ என ரொப்ஸன் கூறினார்.
மைக்கல் ஜக்ஸன் தன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளை நிராகரித்து வந்தார்.
எனினும், அவரால் பாதிக்கப்பட்டதாக கூறப்பட்ட ஜோர்டான் சான்ட்லர் எனும் சிறுவனின் குடும்பத்திற்கு 4 கோடி டொலர்களை வழங்கியிருந்தார்.
இந்நிலையில் மைக்கல் ஜக்ஸனின் ஜக்ஸன் எஸ்டேட் நிர்வாகத்திடம் வாட் ரொப்ஸன், ஜேம்ஸ் சேவ்சக் ஆகியேர் நஷ்ட ஈடு கோர முடியுமா என்பது குறித்து லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நீதிமன்றம் இன்று தனது தீர்ப்பை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.