யுத்தம் மற்றும் இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டு தமது உறவுகள் மற்றும் உடைமைகளை இழந்த பலர் எம்மத்தியில் வாழ்கின்றனர்.

இவர்கள் தமது அன்றாட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக நாளாந்தம் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

அப்துல் முத்தலிப் அக்பர் உம்மா, கடற்றொழிலை ஜீவனோபாயமாகக் கொண்டு தனது இரண்டு பிள்ளைகளைக் கடந்த 15 வருடங்களாக தனி நபராக வளர்த்து வருகின்றார்.

கிண்ணியா – பெரியாற்றுமுனையைச் சேர்ந்த இவர், பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் தமது வாழ்க்கையை முன்னெடுத்துள்ளார்.

கடலுக்குச் சென்று மட்டிகளை சேகரித்து அதன் ஊடாக பெற்றுக்கொள்ளும் வருவாயின் ஊடாகவே, தனது அன்றாட வாழ்க்கைச் செலவிற்கான பணத்தை ஈட்டி
வருகின்றார் அப்துல் முத்தலிப் அக்பர் உம்மா.

சுனாமி ஆழிப்பேரலையின் போது பாதிக்கப்பட்ட இவரது குடும்பத்திற்கு இதுவரையில் எவ்வித வீட்டுத்திட்டமோ, உதவிகளோ வழங்கப்படவில்லை.

சிறிய கொட்டிலொன்றில் தமது வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்லும் இவரைப் போன்ற பலர் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் வாழ்ந்து வருகின்றனர்.

தமக்கான விடிவு எப்போது கிடைக்கும் என ஆவலாக எதிர்பார்த்துள்ள இவ்வாறான பெண்களுக்கான வாழ்வாதார உதவிகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக வழங்க வேண்டும் என்பது எம் அனைவரினதும் எதிர்பார்ப்பாக அமைகின்றது.

சிதம்பரபுரம் முகாமுக்குள் முடக்கப்பட்டவர்களுக்கு தீர்வு கிட்டுமா?

sithamparamவவுனியா – சிதம்பரபுரம் பகுதியில் குடியேற்றப்பட்டுள்ள மக்கள் நிலமற்றவர்களாகவும் முகாம்களுக்குள் முடக்கப்பட்டவர்களாகவும் வாழ்நாளைக் கழிக்கின்றனர்.

வீடு திரும்புவோம் என்ற ஏக்கத்தில் பல வருடங்களாகக் காத்திருக்கின்றனர்.

வடக்கில் யுத்தம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் வெளியேற்றப்பட்ட மக்களில் ஒருசாரார் மீள்குடியேற்றப்பட்டுள்ள போதிலும் ஏனையோரின் நிலை மாறுபட்டது.

வவுனியாவில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை மீள்குடியேற்றுவதற்காக 1990 ஆம் ஆண்டு வவுனியா ஆசிக்குளம் கிராம அலுவலர் பிரிவில் சிதம்பரபுரம் முகாம் அமைக்கப்பட்டது.

இந்த முகாமில் பல வருடங்களாக சுமார் 150 குடும்பங்கள் காணியற்றவர்களாகத் தங்கியுள்ளனர்.

சொந்த நிலத்தில் சொந்த வீடுகளில் வாழ்ந்த மக்கள் இன்று காணியற்றவர்களாக, தகரக் கொட்டகைக்குள் வாழ்வதற்கு நிர்பந்திக்கப்பட்டுள்ளனர்.

அடிப்படை வசதிகளற்ற நிலையில் தற்காலிகக் கூடாரங்களில் இன்னல்படும் இந்த மக்கள் தொடர்பில் அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் பாராமுகமாக செயற்படுவது கவலைக்குரியதே.

சிதம்பரபுரம் மக்களும் நாட்டின் குடிகள் என்ற அந்தஸ்த்தை தேர்தல் காலங்களில் மாத்திரம் நினைவில்கொள்ளும் அரசியல்வாதிகள் அவர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் முன்வர வேண்டுமல்லவா?

Share.
Leave A Reply