பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவுக்கும் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள விரிசல், விரிவடைந்துவரும் போக்கை உணரமுடிகிறது.
வடக்கிலிருந்து படையினரை விலக்கி, உயர் பாதுகாப்பு வலயத்துக்காக அபகரிக்கப்பட்டுள்ள நிலங்களில் அவற்றின் உண்மையான உரிமையாளர்களை குடியமர்த்தும் விவகாரத்தில் தொடங்கிய இந்த சர்ச்சை, இப்போது ஒருவரையொருவர் விமர்சிக்கும் மற்றும் ஒருவரையொருவர் புறக்கணிக்கும் நிலைக்கு சென்றுள்ளது.
இந்த விவகாரம் உள்நாட்டில் மட்டுமன்றி, சர்வதேச அளவிலும் உன்னிப்பாக அவதானிக்கப்படும் விவகாரங்களில் ஒன்றாக மாறியுள்ளது.
ஏனென்றால், இந்த விரிசல் இலங்கைத்தீவில் எதிர்காலத்தில் குறிப்பிடத்தக்க தாக்கங்களை ஏற்படுத்தும் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
ஊடகங்களை பொறுத்தவரையில் இந்த விவகாரத்தை சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் ரணில் விக்கிரமசிங்க என்ற இரண்டு தனி நபர்களுக்கு இடையிலான பிரச்சினையாக பார்ப்பதா அல்லது தமிழ், சிங்களம் ஆகிய இரண்டு இனங்களின் சிந்தனைகளுக்கு இடையிலான பிரச்சினையாக பார்ப்பதா?
அல்லது முதலமைச்சர் விக்னேஸ்வரன், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க என இரண்டு அரசியல் தலைமைத்துவங்களுக்கு இடையிலான பிரச்சினையாக பார்ப்பதா என்று குழம்பிப்போயுள்ளன.
கடந்த ஜனவரி மாதம் பதவிக்கு வந்த மைத்திரிபால சிறிசேன – ரணில் விக்கிரமசிங்க கூட்டரசாங்கம், தனது கவர்ச்சியை இழக்கத் தொடங்கியுள்ள தருணத்தில் இந்த விவகாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அண்மைய யாழ்ப்பாண பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தாலும், அதனை தமிழ் மக்கள் கருத்தில் எடுக்கவில்லை என்று யாழ். ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு அடிப்படை காரணம் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் புறக்கணிக்கப்பட்டதே.
இதனை ஜேர்மனித் தூதுவருடனான சந்திப்பின்போது அவரே குறிப்பிட்டிருந்தார்.
புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வடக்கில் பயணத்தை மேற்கொண்டு சந்திப்புகள், கலந்துரையாடல்களை நடத்துவது முக்கியமான விடயமாகவே இருந்தது.
இருந்தாலும், வடமாகாணசபையையும் அதன் முதலமைச்சரையும் புறக்கணித்துவிட்டு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நடந்துகொண்டமையானது, அவரது கடந்த காலம் குறித்து தமிழ் மக்களை சந்தேக கண்ணுடன் திரும்பிப்பார்க்க வைத்துள்ளது.
ஒரு பக்கத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனேயே பேச்சு வைத்துக்கொள்வேன் என்று அவர் கூறிக்கொண்டு, வடமாகாண முதலமைச்சரை ஒதுக்கிவைத்தார்.
இது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைப்பதற்கான ரணில் விக்கிரமசிங்கவின் சதித்திட்டமாக இருக்கலாம் என்ற பரவலான சந்தேகம் தோன்றியுள்ளது.
2004ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்கத்தில் பிளவை ஏற்படுத்துவதில் அப்போதைய ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் கணிசமான பங்கை வகித்திருந்தது.
அப்போது விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு தளபதியாக இருந்த விநாயகமூர்த்தி முரளிதரன், புலிகள் இயக்கத்திலிருந்து பிரிந்து சென்றதுடன், அவர்களின் பெரும் படைப்பிரிவுகளையும் சிதைத்திருந்தார். இதன் விளைவு, விடுதலைப் புலிகளை முள்ளிவாய்க்கால்வரை துரத்திச்சென்றது.
அப்போது, விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு அடைக்கலம் கொடுத்து காப்பாற்றியது ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கமே.
பின் நாட்களில் சஜித் பிரேமதாச போன்ற ஐ.தே.க. தலைவர்கள் பலரும், தாமே விடுதலைப் புலிகள் இயக்கத்தை உடைத்து அதை பலவீனப்படுத்தியதாகவும் எனவே, போரின் வெற்றியில் தமக்கும் கணிசமான பங்கு இருப்பதாகவும் மேடைகளில் மார்தட்டியிருந்தனர்.
விநாயகமூர்த்தி முரளிதரன் விடயத்தில், ஐ.தே.க. நடந்துகொண்ட விதம் கூட, 2005ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவை தோற்கடிக்க விடுதலைப் புலிகள் வியூகம் வகுத்தமைக்கு ஒரு காரணம் என்பதை மறுக்கமுடியாது.
முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவை ஒரு குள்ளநரி அரசியல்வாதியாக பார்த்த தமிழ் மக்கள், ரணில் விக்கிரமசிங்கவையும் அதேபோன்று பார்க்கும் நிலை இன்று ஏற்பட்டுவருகிறது.
அதற்கு அடிப்படை காரணம், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுடன் அவர் ஏற்படுத்திக்கொண்டுள்ள முரண்பாடு.
தமிழ் மக்களின் நியாயமான உரிமைகளை மறுத்து வந்தவர்களில் முன்னைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன முக்கியமான ஒருவர்.
அவரது வழியில் வந்துள்ள ரணில் விக்கிரமசிங்கவும் தமிழ் மக்கள் விடயத்தில் தவறான அணுகுமுறையை கடைப்பிடிக்க முனைவதாக வடமாகாணசபையின் அமர்வில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியிருந்தார்.
அதனை அவர் குறிப்பிட்டதற்கு காரணம், வடக்கிலிருந்து படை முகாம்களை விலக்கிக்கொள்ளப் போவதில்லை என்ற ரணில் விக்கிரமசிங்க மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன ஆகியோரின் அறிவிப்புகளே.
இதனை சுட்டிக்காட்டிய முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை, தமிழ்நாட்டின் தந்தித் தொலைக்காட்சிக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அளித்திருந்த பேட்டியில் பொய்யர் என்று கடுமையாக விமர்சித்திருந்தார்.
அத்துடன், தாம் வடமாகாணசபையுடன் எந்தத் தொடர்பையும் வைத்துக்கொள்ளப் போவதில்லை என்றும் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை சந்திக்கமாட்டேன் என்றும் பகிரங்கமாகவே சபதமிட்டார்.
மேலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுடன் வடக்கிலுள்ள பிரச்சினைகள் குறித்து பேச்சுக்களை வைத்துக்கொள்வேன் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இதன் தொடர்ச்சியாக வடமாகாணத்துக்கான தனது மூன்று நாள் பயணத்தில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு உரிய அழைப்புக் கொடுக்காமல் புறக்கணித்திருந்தார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.
ஒட்டுமொத்த வடமாகாணசபையும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் நிகழ்வுகளை புறக்கணிக்க, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, சுரேஸ் பிரேமச்சந்திரன், சரவணபவன் போன்றவர்கள் ஒரே மேடையில் பிரதமர் ரணிலுடன் அமர்ந்திருந்தனர்.
ஆனால், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் அந்த நிகழ்வுகளை புறக்கணித்திருந்தார். இது கூட்டமைப்புக்குள் ஒற்றுமை என்பது கேள்விக்குறியாகி வருகிறதோ என்ற சந்தேகத்தை மட்டும் தமிழ் மக்களுக்குள் எழுப்பவில்லை.
ரணில் விக்கிரமசிங்கவின் நரித்தந்திரம் பலித்துப் போகுமோ என்ற அச்சத்தையும் அவர்களுக்குள் ஏற்படுத்தியது.
தனது வடக்குக்கான பயணத்தில் வடமாகாண முதலமைச்சரையும் வடமாகாணசபையையும் ஓரம் கட்டுவதை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறியாக கொண்டிருந்தார் என்பது வெளிப்படையான விடயமாகியுள்ளது.
இந்த நிலையில், கட்சியை வளர்க்க வடக்குக்கு வந்த ரணில் விக்கிரமசிங்க பங்கேற்கும் நிகழ்வுகளில், தான் பங்கேற்கவேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் உயர் பாதுகாப்பு வலய முகாம்களை படிப்படியாக அகற்றி மக்களை மீளக்குடியேற்றுவதாக அறிவித்தால், அவருடன் கைகோர்க்க தயார் என்றும் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அறிவித்தார்.
இத்தோடு இந்த விவகாரம் முடிந்துவிடவில்லை, முடியப்போவதும் இல்லை. ஏனென்றால், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பொறுத்தவரையில் வடக்கில் தனது கட்சியை காலூன்றவைப்பதற்கு முயற்சிக்கிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பலமாகவும் உறுதியாகவும் ஒன்றுபட்டு நிற்கும்வரைக்கும் அது சாத்தியமாகப் போவதில்லை என்பதும் அவருக்குத் தெரியும்.
எனவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் பிளவை எற்படுத்தினால், அந்த இடைவெளிக்குள் தாம் நுழைந்துகொள்ளலாம் என்று அவர் கணக்கு போடுவதாகத் தெரிகிறது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை உடைத்து, அடுத்த தேர்தலில் ஐ.தே.கட்சியை பலமான நிலைக்கு கொண்டுவருவதற்கு அவர் எத்தகைய வியூகத்தை பயன்படுத்துகிறாரோ, அதேபோன்றதொரு வியூகத்தை சற்று வித்தியாசமான வடிவத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராகவும் பயன்படுத்திக்கொள்கிறார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை ஓரங்கட்டுவது அவரது முதற்குறியாக தெரிகிறது.
முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் உறுதியான, நியாயமான சில செயற்பாடுகளால் அதிருப்தியடைந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் சிலரும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் நரித்தனத்துக்கு பலியாக தொடங்கியுள்ளனர் என்ற பேச்சும் உள்ளது.
எவ்வாறாயினும், இந்த விவகாரம் ரணில் விக்கிரமசிங்க, சி.வி.விக்னேஸ்வரன் என்ற இரண்டு தனிப்பட்ட நபர்களுக்கு இடையிலான பிரச்சினை அல்ல.
ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் இருக்கும் சிலர், அவ்வாறானதொரு தோற்றப்பாட்டை உருவாக்குவதன் மூலம் தமது செயலை நியாயப்படுத்த முனைவதாக தெரிகிறது.
அதேவேளை, இது இனரீதியான பிளவு, வரலாற்று ரீதியாக தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்டுவந்த அநீதிகளின் தொடர்ச்சி என்றவாறான விமர்சனங்களும் ஊடகங்களில் முன்வைக்கப்படுகின்றன.
அவ்வாறு முன்வைக்கப்படும் நியாயங்கள் தட்டிக்கழிக்கப்பட முடியாதவை என்பதை ஏற்றுக்கொண்டேயாக வேண்டும்.
தமிழரின் அரசியல் பலத்தை சிதைப்பது என்பதே எப்போதும் கொழும்பு அரசின் மைய நோக்கமாக இருந்துவந்திருக்கிறது என்பது கசப்பானதொரு உண்மை.
கொழும்பு அரசின் மையமாக விளங்கிய தலைவர்கள் எல்லோருமே இதனையே செய்திருக்கிறார்கள். அந்த வகையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் கூட, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சிதைக்க முயற்சிப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை முற்றாகப் புறமொதுக்கமுடியாது.
இந்தக் கட்டத்தில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் தோன்றியுள்ள முரண்பாடுகள், தமிழ் மக்களிடையே மட்டும் கவனிப்பை ஏற்படுத்தவில்லை.
சர்வதேச சமூகமும் கூட இந்த விவகாரத்தை உன்னிப்பாக அவதானிக்கிறது, உற்று நோக்குகிறது என்பதை தெளிவாக உணரமுடிகிறது.
இலங்கையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தை அடுத்து உருவாகியுள்ள புதிய அரசாங்கம் ஜனநாயகம், மனித உரிமைகள், நல்லாட்சி உள்ளிட்ட விடயங்களில் முன்னைய அரசாங்கத்தை விடவும் சாதகமானதொரு நிலைமைக்கு நாட்டைக் கொண்டுசெல்லும் என்ற நம்பிக்கை சர்வதேச சமூகத்திடம் நிரம்பியிருக்கிறது.
அந்த எதிர்பார்ப்பை பல்வேறு நாடுகளும் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் வெளிப்படையாகவே எடுத்துக் கூறியிருக்கின்றன.
இத்தகைய நிலையில், ஆட்சி மாற்றத்துக்கு பின்னர், வடமாகாண முதலமைச்சருக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் தோன்றியுள்ள முரண்பாடு, தமிழ் – சிங்கள இனங்களுக்கு இடையிலான நல்லிணக்க முயற்சிகளை சிதைத்துவிடுவோ என்ற கவலையை சர்வதேச சமூகத்திடம் ஏற்படுத்தியுள்ளது.
அண்மைய நாட்களில் வடமாகாணத்துக்கு கள நிலைகளை கண்டறிவதற்காக பயணம் மேற்கொள்ளும் வெளிநாட்டு இராஜதந்திரிகள், சர்வதேச பிரமுகர்கள், இந்த முரண்பாடு குறித்தும் கவனம் செலுத்தி வருகின்றனர். ஜேர்மனி, அவுஸ்திரேலிய தூதுவர்கள் யாழ். ஆயரிடம் இது பற்றி விசாரித்தறிந்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் யார் பக்கம் நியாயம் உள்ளது என்பதை அறிந்துகொள்வதற்காக வேறு பல மட்டங்களிலும் அவர்கள் கலந்துரையாடல்களை நடத்தியிருக்கின்றனர்.
ஆட்சி மாற்றத்துக்கு பிந்திய சூழலில் தமிழ் மக்களுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்திக்கொள்வதற்கு அரசாங்கம் முன்னுரிமை கொடுக்கவேண்டும் என்பது சர்வதேச சமூகத்தின் எதிர்பார்ப்பாக உள்ளது.
அந்த சூழல் இந்த முரண்பாட்டினால் சிதைக்கப்பட்டுவிடுமோ என்ற கவலை வெளிநாட்டு இராஜதந்திர மட்டங்களில் ஏற்பட்டிருப்பதில் வியப்பில்லை.
தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற புதிய அரசாங்கம் தவறிவிட்டது என்று வடமாகாண முதலமைச்சர், அவுஸ்திரேலிய தூதுவரிடம் குறிப்பிட்டிருந்தார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினது செயற்பாடுகளின் மீதுள்ள அதிருப்தி கூட அவரை இந்தளவுக்கு விரைவாக இத்தகைய கருத்தை வெளிப்படுத்த தோன்றியிருக்கலாம்.
தற்போதைய அரசாங்கம், வரையறுக்கப்பட்ட காலமே பதவியில் இருக்கக்கூடியது என்பதும் வரையறுக்கப்பட்ட எல்லைகளை தாண்டாது என்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் சரி, வடமாகாண முதலமைச்சரும் சரி நன்றாகவே அறிந்திருக்கின்றனர்.
ஆனாலும், அரசாங்கத்தின் செயற்பாடுகள் மீது அதிருப்தியை, அவநம்பிக்கையை வெளிப்படுத்தும் அவசரம் அவர்கள் மத்தியில் தோன்றியுள்ளது என்றால், அதற்கு அடிப்படைக் காரணம் அவர்களின் மீது ரணில் விக்கிரமசிங்க கைவைக்க முயன்றதே.
எனவே, இந்த முறுகல், தமிழர் அரசியலை ஓரங்கட்டி பழகிப்போன தென்னிலங்கையின் அரசியல் பாரம்பரியத்தின் விளைவு என்பதே சரியான கருத்தாக தெரிகிறது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வடக்கிலுள்ள தமிழர்களிடம் எப்படி அரசியல் நடத்துவது என்பதை அறியாதவராக இருக்கிறார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதையில் பயணிக்க நினைப்பதே அவர் செய்யும் தவறு. இது அவரையும் அதே படுகுழிக்குள் தள்ளிச் செல்லும்.