வடக்கில் ஆயிரம் ஏக்கர் காணிகளை விடுவிக் கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் இரண் டாவது கட்டமாக வலி.வடக்கில் இராணுவ வசம் இருந்த பொதுமக்களின் காணிகளில் மேலும் 570 ஏக்கர் நிலப்பரப்பை விடுவித்து மீள்குடியேற்ற அமைச்சிடம் ஒப்படைப்பதற்கு நேற்று பிரதமர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மேலும் பல்வேறு காணிகளை விடுவித்து பொதுமக்களிடம் ஒப்படைப்பதற்கும் பிரதமர் தலைமையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
அதேபோல் கிழக்கில் பொதுமக்களின் காணிகளை விடுவித்து இராணுவம் வெளியேறுவ தாகவும் இராணுவ, கடற்படை தளபதிகள் வாக்குறுதியளித்துள்ளனர் .
வடக்கில் காணிகளை விடுவிப்பது தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்று காலை பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம் பெற்ற விசேட கலந்துரையாடலின்போது இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது .
இந்த கூட்டத்தில் மீள் குடியேற்ற அமைச்சர் டீ.எம் .சுவாமிநாதன் , நகர அபிவிருத்தி மற்றும் நீர் வடிகாலமைச்சு அமைச்சர் ரவுப் ஹக்கீம் , தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இ ரா . சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர் எம் .எ. சுமந்திரன் , பிரதியமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் இராணுவ , கடற்படை தளபதிகள் கலந்து கொண்டிருந்தனர் .
இந்நிலையில் இது தொடர்பில் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவிக்கையில் ,
வடக்கில் இராணுவ வசம் உள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிக்கக் கோரி நாம் ஆரம்பத்தில் இருந்தே அரசாங்கத்தை வலியுறுத்தி வருகின்றோம்.
அதற்கமைய அரசாங்கம் வலி வடக்கில் ஆயிரம் ஏக்கர் பொதுமக்களின் காணிகளை விடுவிப்பதாக கூறியமைக்கு அமைய கடந்த மாதம் ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் வடக்கில் ஒரு பகுதிகாணிகள் விடுவிக்கப் பட்டன .
அதன் அடுத்தகட்டமாக இன்று (நேற்று) மேலும் 570 ஏக்கர் நிலம் விடுவிக்கப் பட்டுள்ளது . இவ்வாறு விடுவிக்கப் பட்டுள்ள காணிகள் மீள் குடியேற்ற துறை அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
அதேபோல் விடுவிக்கப்பட்டுள்ள பொதுமக்களின் நிலங்களை அம் மக்கள் பார்வையிட அனுமதிக்கப் பட்டுள்ளதுடன் உரிய நிலங்களை அப் பகுதி மக்கள் இனங்காணும் பட்சத்தில் நிலத்தை ஒப்படைப்பதற்கான நடைமுறைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
அதேபோல் இராணுவ வசம் உள்ள பொதுமக்களின் நிலங்கள் தொடர்பிலும் நாம் பிரதமரிடம் கேள்வி எழுப்பியதுடன் அவற்றை நிலங்களை விடுவிப்பது தொடர்பிலும் கோரிக்கை விடுத்தேருந்தோம்
அதற்கமைய வடக்கில் பிரதான இராணுவ முகாம்கள் தவிர்ந்து ஏனைய பொதுமக்களின் நிலங்களையும் இராணுவம் விரைவில் விடுவிப்பதாகவும் அதற்கான நடவடிக்கைகளை இராணுவம் மேற்கொண்டு வருவதாகவும் வாக்குறுதி கொடுத்துள்ளது.
மேலும் கிழக்கில் சம்பூர் பகுதியில் இராணுவ மற்றும் கடற்படை வசமுள்ள நிலங்களை விடுவிப்பதாகவும் அங்குள்ள படையினரை வெளியேற்றுவதாகவும் இராணுவ தளபதி,கடற்படை தளபதிகள் தெரிவித்தனர்.
அதோடு முல்லைத்தீவு ,சிலாவத்துறை ,பரவிபாஞ்சான்,கேப்பாபிளவு ஆகிய பகுதிகளிலும் பொதுமக்களை மீள் குடியேற்றும் நடவடிக்கைகளை எடுப்பதாகவும் அதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதாகவும் அரசாங்கம் உறுதியளித்துள்ளது எனவும் தெரிவித்தார் .
இதேவேளை இன்று சனிக்கிழமை விடப்படும் பகுதிகளில் காங்கேசன்துறை புகையிரதப் பாதைக்கு கிழக்குப்புறமாக உள்ள பகுதிகளில் சுமார் நானுறு ஏக்கர் நிலத்திற்க்கு மேற்பட்ட பிரதேசம் உள்ளடங்குகின்றமை குறிப்பி்டத்தக்கதாகும்.
ஜே.235 காங்கேசன்துறை தெற்கு ஜே.236 பளை வீமன்காமம் வடக்கு ஜே . 237 பளை வீமன்காமம் தெற்கு 238 கட்டுவன் ஜே.240 தென்மயிலை ஜே.241 வறுத்தலைவிளான் ஜே. 250 தையிட்டி தெற்கு ஜே 252 பலாலி தெற்கு ஆகிய கிராம அலுவலர்கள் பிரிவுகள் பகுதியாகவும் முழமையாகவும் விடப்படுகின்றன.
வறுத்தலைவிளான் பிரிவுக்கு செல்லும் மக்கள் தமது காணிகளை பார்வையிட தெல்லிப்பளை வைத்தியசாலை வீதி வழியாகவும் மற்றும் பலாலி தெற்கு கிராம அலுவலர் பிரிவுக்க செல்லும் மக்கள் தமது காணிகளை பார்வையிட அச்சுவேலி தம்பாட்டி வழியாகவும் ஏனைய கிரா அலுவலர் பிரிவுகளுக்கு செல்லும் பொது மக்கள் பளை வீமன்காமம் புகையிரத வீதிவழியாகவும் சென்ற தமது காணிகளை பார்வையிட முடியும் எனவும் பிரதேச செயலகத்தினால் தொவிக்கப்பட்டுள்ளது..
இந்தப் பகுதியில் மீள்க்குடியேறும் மக்கள் தங்களுடைய காணிகளை பார்வையிட்டு உறுதிப்படுத்திய பின்னர் தமது கிராம அலுவலர்களிடம் பதிவுகளை மேற்க்கொள்ள முடியும்.
இதனடிப்படையில் சனிக்கிழமை (11) காணிகளை பார்வையிட மக்கள் வந்திருந்தனர்.
ஆனால் அங்கு குறித்த கிராம அலுவலர் பிரிவுகளில் பகுதி பகுதியாகவே காணிகளை பார்வையிட அனுமதிக்கப்பட்டனர். இதனால் பலர் ஏமாற்றத்துடன் திரும்பிச்செல்லும் நிலை ஏற்பட்டது.
தற்போது விடுவிக்கபட்ட பகுதிகள் செறிவு குறைந்த குடியிருப்புக்கள் உள்ள பகுதிகள் ஆகும்.
இதனால் வருகை தந்திருந்த மக்களில் பலர் தமது காணிகளை இராணுவத்தினரால் அமைக்கப்பட்டுள்ள முட்கம்பி வேலிகளுக்கப்பால் தொலைவில் நின்று பார்த்துவிட்டு அங்கலாய்ப்புடனும் விரக்தியுடனும் சென்றனர்.