சேஷாத்ரி, நீலாத்ரி, கருடாத்ரி, அஞ்சனாத்ரி, விருஷபாத்ரி, நாராயணாத்ரி, வேங்கடாத்ரி… ஆகிய ஏழு சிகரங்களைக் கொண்ட மலையில் இருப்பதால்தான் ஏழுமலையான் என்று அழைக்கப்படுகிறார் கடவுள்.

ஏழு மலைகளில் முதல் மலையான சேஷாத்திரி மலைப்பகுதியில்தான், செம்மரக் கடத்தல் கும்பல் என்று சொல்லி ஈவு இரக்கமில்லாமல் அப்பாவித் தமிழர்கள் 20 பேரை வேட்டையாடி இருக்கிறார்கள் ஆந்திர போலீஸார்.

வாரிமெட்டு என்ற அந்தப் பகுதியில் தமிழர்கள் 20 பேரின் உடல்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சிதறிக்கிடந்தன.

20 பேரின் உடல்களுக்குப் பக்கத்திலும் தலா, ஒரு செம்மரக்கட்டை வைக்கப்பட்டிருந்தது.

p12aஇறந்தவர்களின் உடல்களில் கை, கால், பாகங்களில் தீக்காயங்களின் அடையாளங்கள் அப்பட்டமாகத் தெரிகின்றன.

பலரின் உடல்கள் தீயிட்டு கருக்கப்பட்டுள்ளன. சுடும்போது தீக்காயம் எங்கிருந்து வந்தது? ஆந்திர அரசிடம் பதில் இல்லை.

கொல்லப்பட்டவர்களில் மூர்த்தி, மகேந்திரன், பெருமாள், முனுசாமி, பழனி, சசிகுமார், முருகன், கோவிந்தசாமி, சின்னசாமி, டெல்லிமுத்து, ராஜேந்திரன், பன்னீர்செல்வம் ஆகிய 12 பேரும் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.

அரிகிருஷ்ணன், வெங்கடேஷ், சிவகுமார், அரச நத்தம் லட்சுமணன், கலசபாக்கம் லட்சுமணன், வேலாயுதம், சிவலிங்கம் ஆகிய 7 பேரும் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள். ஒருவர் சேலத்துக்காரர்.

இவர்களது உடல்கள் லாரிகள் மூலம் திருப்பதி அரசுப் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. பிரேதப் பரிசோதனை அறை ஆந்திர போலீஸாரின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. யாரையும் அந்தப் பகுதிக்குள் அனுமதிக்கவில்லை.

முனுசாமியின் அம்மா பத்மா வயிற்றில் அடித்துக்கொண்டு, ‘இது எல்லாத்தையும் ஏழுமலையானே நீ பார்த்துட்டுதானே இருக்கே… நீதான்யா நீதி கொடுக்கணும்’ என்று கதறினார்.

p12b

உடலை வாங்க வந்தவர்களுக்கு ஆந்திர அரசு சார்பில் உணவுகள் தயாராக வைக்கப்பட்டிருந்தன. அவர்களை ஆந்திர அதிகாரி ஒருவர், சாப்பிட அழைத்தார்.

‘பொழைக்க வந்தவங்களைச் சுட்டுக் கொன்னுட்டு சாப்பிட கூப்பிடுறியா… போய்யா… நீங்களும் உங்க சாப்பாடும்’ என்று திட்டியபடி யாரும் அந்தப் பக்கம் திரும்பவே இல்லை.

காங்கிரஸ் கட்சியின் திருப்பதி தொகுதி முன்னாள் எம்.பி சிந்தா மோகன் அங்கே வந்தார். அவரிடம் பேசினோம். “இது போலி என்கவுன்டர். நீதி விசாரணை வேண்டும்.

செம்மரக் கடத்தலைத் தடுக்க வேண்டுமானால், உண்மையான கடத்தல்காரர்களைச் சுட வேண்டும். அப்பாவி கூலித் தொழிலாளிகளைச் சுடுவது எந்தவிதத்தில் நியாயம்? இது திட்டமிட்ட படுகொலை.

p12dஎன்கவுன்டர் நடப்பதற்கு முன்பு சந்திரபாபு நாயுடு திருப்பதி வந்துள்ளார். அவரது உத்தரவின்பேரில்தான் இந்தச் சம்பவம் நடந்து இருக்க வேண்டும்’’ என்றார் ஆக்ரோஷமாக.

சிவில் லிபர்ட்டி கமிட்டி மாவட்டப் பொருளாளர் லதாவிடம் பேசினோம். “திருவண்ணாமலையைச் சேர்ந்த முனுசாமி, பெருமாள், மகேந்திரன், முருகன், மூர்த்தி, பழனி, சசிகுமார், சேகர் ஆகிய 8 பேர் மரம் வெட்டும் தொழிலுக்காக ஆந்திராவை நோக்கி பஸ்ஸில் வந்துள்ளனர்.

அப்போது நகரி பகுதியில் சேகரை தவிர, மற்ற 7 பேரை விசாரணை என்று போலீஸார் காட்டுக்குள் அழைத்துச் சென்று சுட்டுள்ளனர்.

அதன் பிறகே மரம் கடத்தும்போது சுட்டதாக நாடகமாடுகிறார்கள். இதில் தப்பிய சேகர் இதற்கு சாட்சியாக உயிரோடு இருக்கிறார்.

அவரை தேசிய மனித உரிமைகள் ஆணையம் முன்பு நிறுத்தி ஆந்திர போலீஸாரின் முகத்திரையைக் கிழிப்போம்’’ என்று கோபத்துடன் சொன்னார்.

இந்தியக் கம்யூனிஸ்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரவி, “சம்பவம் நடந்த பகுதிக்கு நேரில் சென்று விசாரித்தோம். இறந்தவர்களின் உடலில் முன்பகுதியிலேயே குண்டுகள் துளைத்துள்ளன.

மேலும் உடல்கள் கிடந்த இரண்டு இடங்களிலும், உடல்கள் குவியலாகவே கிடக்கின்றன. உண்மையாக என்கவுன்டர் நடந்திருந்தால் போலீஸார் துப்பாக்கியால் சுட்டதும் தொழிலாளர்கள் ஆளுக்கொரு பக்கம் சிதறி ஓடி இருப்பார்கள். உடல்களும் ஆங்காங்கே கிடந்திருக்கும்.

மேலும் ஒவ்வோர் உடலின் அருகிலும் கட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. அந்தக் கட்டைகளைப் பார்த்தால், ஏற்கெனவே பறிமுதல் செய்யப்பட்டதைப்போல இருக்கின்றன.

p12d

ஒரே நேரத்தில் ஆடு, மாடுகளைப்போல அப்பாவித் தமிழர்களைச் சுட்டுக் கொல்ல போலீஸாருக்கு யார் அதிகாரம் கொடுத்தது.

விலங்குகளைச் சுட்டுக் கொன்றால்கூட குரல் கொடுக்க அமைப்புகள் இருக்கின்றன. ஆனால், பிழைப்புத் தேடி வந்த தமிழர்களை அநியாயமாகக் கொன்றுவிட்டது ஆந்திர போலீஸ். இதற்கு ஆந்திர அரசு பதில் சொல்லியே தீர வேண்டும்” என்று கொந்தளித்தார்.

ஆந்திர போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தோம். “சரண்டர் அடையாததாலும் தொடர்ந்து எங்களைத் தாக்கியதாலும் என்கவுன்டர் நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

இறந்தது தமிழர்கள் என்பது எங்களுக்குத் தெரியாது. கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்றுதான் துப்பாக்கிச் சூடு நடத்தினோம்.

செம்மரங்களை வெட்டக் கூடாது என்று பலமுறை எச்சரித்தும் தொடர்ந்து மரம் வெட்டவும் கடத்தவும் தொழிலாளர்களைத் தங்குத் தடையின்றி புரோக்கர்கள் அழைத்து வருகிறார்கள்.

இந்த ஓராண்டில் மட்டும் 2,000 பேரை கைது செய்து இருக்கிறோம். தொழிலாளர்களை அழைத்து வரும் புரோக்கர்கள் குறித்த விவரங்களையும் கடத்தல் புள்ளிகள் குறித்த விவரங்களையும் சேகரித்து வருகிறோம்.

விரைவில் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுப்போம். ஆந்திராவின் சொத்தான செம்மரங்களை வெட்டி கடத்துவதைத் தடுக்கவே முதல்வர் சந்திரபாபு நாயுடு உருவாக்கிய சிறப்புப் படை இது” என்று சொல்கிறார்கள்.

உண்மையான கடத்தல்காரர்கள் யார் பாதுகாப்பிலோ இருக்க… ‘மரம் வெட்டும் தொழிலுக்கு வாருங்கள்’ என்று அழைத்துச் செல்லப்பட்ட அப்பாவிகள் பலியாகிக் கிடக்கிறார்கள். ஆந்திர போலீஸின் அராஜகத்தை மத்திய அரசுதான் விசாரிக்க வேண்டும்!

– எஸ்.மகேஷ்,
அட்டை மற்றும் படங்கள்: ச.வெங்கடேசன்

“சித்ரவதை செய்த பின் படுகொலை ! ”
எங்கோ சுட்டு இங்கு கொண்டுவந்து போட்டுள்ளார்கள் .-ஆதாரங்களை அள்ளி வைக்கிறார் தடய அறிவியல் சந்திரசேகரன்
Evidences of a fak

Share.
Leave A Reply