பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் அலியன் ராபர்ட்(52). உடும்புகளைப் போல் உயரமான கட்டிடங்களின் மீது ஏறுவதையே பொழுதுப்போக்காக கொண்டுள்ள இவரை ‘பிரெஞ்ச் ஸ்பைடர்மேன்’ என ஊடகங்கள் செல்லமாக அழைத்து மகிழ்கின்றன.

பல நாடுகளில் இதுபோன்ற சாகசங்களை செய்தபோது கீழேவிழுந்து அடிபட்டு ‘ஏகப்பட்ட சில்லறை அள்ளியும்’ இவரது ஆர்வம் மட்டும் துளியளவும் குறையவில்லை.

இந்த ஆர்வத்தின் உந்துதலால் தற்போது துபாயில் உள்ள 75 மாடிகள் கொண்ட கயான் டவர் கட்டிடத்தில் இவர் மீண்டும் ஏறி சாகசம் படைத்துள்ளார்.

கயான் டவர் கட்டிடம் 90 டிகிரி செங்குத்து வாட்டத்தில் கட்டப்பட்டது. 1,007 அடி உயரம் கொண்டது. கால் வைத்து ஏறவும் சரியான வசதி எதுவும் இல்லாத கயான் டவர் கட்டிடத்தில் எந்தவித பாதுகாப்பு சாதனங்களின் துணையும் இல்லாமல் இவர் தாவித்தாவி ஏறுவதை காண சாலையில் ஏராளமான மக்கள் திரண்டிருந்தனர்.

கீழ் தளத்தில் இருந்து தனது கட்டிடம் ஏறும் பயணத்தை தொடங்கிய இவர் ஒரேயொரு ‘சாக்பீஸ்’ மற்றும் ஒட்டும் ‘டேப்’ ஆகியவற்றை மட்டுமே தன்னுடன் வைத்திருந்தார்.

சுமார் ஒரு மணி நேரத்துக்குள் அலியன் ராபர்ட் இந்த சாகசத்தை நிறைவேற்றிய காட்சிகளை பலர் புகைப்படங்களாகவும், வீடியோவாகவும் பதிவு செய்து கொண்டனர்.

ஒரு சிறு சிராய்ப்பு கூட இல்லாமல் இவர் தனது சாகசத்தை செய்து முடித்ததும் கூடியிருந்த மக்கள் ஆரவார கூச்சலுடன் கரவொலி எழுப்பி பாராட்டு தெரிவித்தனர். அந்த வீடியோ காட்சியின் சிறுபகுதி உங்கள் பார்வைக்காக…

Share.
Leave A Reply