ஐரோப்பாவிற்கு புகலிடம் கோரி புலம்பெயர்ந்து சென்றவர்களின் படகு லிபியாவிற்கு அருகில் கவிழ்ந்ததில் 400 இற்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுமார் 540 பேருக்கு மேற்பட்டவர்களுடன் லிபியாவில் இருந்து புறப்பட்ட 24 மணி நேரத்திற்கு பிறகு இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்திற்கான முழுமையான காரணம் இதுவரை தெரியவில்லை.
இந்த பயங்கர விபத்தில் உயிர் இழந்தவர்களில் பெரும்பாலனவர்கள் 18 வயதுக்கும் உட்பட்ட சிறுவர்களாக இருக்க கூடும் என மீட்புப்படையினர் தெரிவித்துள்ளனர்.
இதற்கு முன்னர் இத்தாலியின் கடலோர காவல்படை திங்கட் கிழமை இந்த விபத்தில் சிக்கிய 144 பேரை உயிருடன் மீட்டதாக தெரிவித்தனர். அதேபோல் விபத்தில் இறந்து போனவர்களின் 9 உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன.
இதுபோல் புகலிடக்கோரிக்கையாளர்களின் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாவது இது முதல் முறை அல்ல.
ஆப்பிரிக்கா மற்றும் கிழக்கு ஆசியா நாடுகளில் நடைபெறும் உள்நாட்டு போர் மற்றும் வறுமை காரணமாக பலர் பொருளாதார நலனுக்காக வாழ்வாதாரத்தை தேடி ஐரோப்பாவிற்கு ஆபத்தான கடல் பயணத்தை மேற்கொள்ளும் போது விபத்தில் சிக்கி உயிரிழந்து போகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த விபத்தில் எந்தெந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் சிக்கியுள்ளார்கள் என்பது தொடர்பான விபரங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.