சாத்வீக வழியில் ஆரம்பித்த தமிழ் மக்களின் ஈழ விடுதலைப் போராட்டம் பின்னர் ஆயுத ரீதியான போராட்டமாக பரிணமித்து இன்று பல்வேறு சவால்களின் மத்தியில் ஒரு அரசியல் -இராஜதந்திர போராட்டமாக சர்வதேசமயப்பட்டிருக்கிறது.
இந்த சந்தர்ப்பத்தில், தமிழ் மக்களின் ஆயுத ரீதியான விடுதலைப் போராட்டத்தின் தோற்றுவாயாக இருந்த தமிழ் மாணவர் பேரவையின் ஸ்தாபக உறுப்பினர் என்ற வகையில், ஈழ விடுதலைப் பயனத்தை என்னால் முடிந்தளவு நினைவுபடுத்தி நேர்மையாகவும் உண்மையாகவும் பதிவு செய்வது எனது கடமையும் பொறுப்பும் என்று உணர்வதுடன்,
கடந்த காலத்திலிருந்து பாடங்களை கற்றுக்கொண்டு, உரிமைக்கான போராட்டத்தை எமது இளைஞர்கள் அரசியல் – ராஜதந்திர வழிகளில் முன்னெடுத்து சென்று வெற்றி பெறுவற்கு இது உதவும் என்ற நம்பிக்கையில் எனது பதிவுகளை ‘சத்தியசீலனின் மலரும் நினைவுகளில் ஈழ விடுதலைப் போராட்டம்’ என்னும் தலைப்பில் இங்கு தொடர்ந்து எழுதவிருக்கிறேன்.
சிந்தனையும் ஆற்றலும் வீரமும் நிறைந்த இளைஞர்களை தேடிச் சென்று அவர்களை ஒன்றிணைத்து நாம் தமிழ் மாணவர் பேரவவையை ஸ்தாபித்தது முதல் தம்பி பிரபாகரனின் போராட்டம் வரை எனது நினைவுகளை இங்கு எழுத முயலுகிறேன்.
நினைவு பிறழ்ந்து ஏதேனும் பிழைகள் இருந்தால் என்னை மன்னித்து பிழைகளை சுட்டிக்காட்டுங்கள்.
தமிழ் மாணவர் பேரவையின் தோற்றம்
1960 களிலும் 70 பதின் ஆரம்பத்திலும் இலங்கை அரசியலில் தமிழ் அரசியல் கட்சிகளின் மென் போக்கே தமிழ் மாணவர் பேரவை தோன்ற காரணமாக அமைகிறது.
1960 ஆம் அண்டு நடந்த இரண்டு பொதுத் தேர்தல்களிலும் தமிழரசு கட்சியும் தமிழ் காங்கிரசும் வகித்த அரசியல் தளம்பல் நிலைப்பாடும், 1961 ஜனவரியில் சரியான திட்டமிடல் இன்றி தொடங்கிய சத்தியாக்கிரக போராடட்ட தோல்வியும், 1965 இல் டட்லி -செல்வா ஒப்பந்தத்தின் மூலம் ‘மாவட்ட சபை’ அமைக்க தமிழரசு கட்சி எடுத்த முடிவும் சில காரணங்களாக அமைகின்றன.
மேலும், இவ் ஒப்பந்தம் தமிழரசு கட்சியை பிளவு படுதித்தி ஊர்காவற்றுறை பாராளுமன்ற உறுப்பினர் வி. நவரத்தினம் தலைமையில் ‘ சுயாட்சி கழகம்’ என்ற மூன்றாவது தமிழர் கட்சி உருவாக காரணமாக அமைந்தது.
மேலும், தமிழ் கட்சிகளின் தலைவர்களின் உறுதி அற்ற தன்மை இக் கட்சிகளின் வாலிப முன்னணி இளைஞர் அமைப்புக்களிடையே விரக்திப் போக்கை தோற்றுவித்ததுடன் ஒரு அரசியல் இடைவெளியயையும் ஏற்படுத்தியது.
இந்த வேளையில் தான் பொன். சிவகுமாரனின் பொங்கிஎழும் அரசியல் வெளிப்பாடு சிங்கள அரசுக்கு எதிரான ஆயுதப் போராட்டமாக முனைப்பு எடுக்கிறது.
ஆரம்பத்தில் தனி மனித வீச்சாக தொடங்கப்பட்டாலும் அது பிற் காலத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழ் இளைஞர்களின் திரட்சிப் போராட்டமாக உருவெடுத்தது.
தமிழ் மாணவர் பேரவை 1970 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர் ஊர்வலமாக தொடங்கி யாழ் முற்றவெளி மைதானத்தில் எனது தலைமையில் பொதுக் கூட்டத்தை நடத்தி தனது முதல் அரசியல் பயணத்தை தொடங்கியது.
அன்று நடந்த மாணவர் எழுச்சிச் கூட்டத்தில் மாணவர்கள் தவிர அரசியல்வாதிகள் எவரும் பேசுவதற்கு அனுமதிக்கப்படவில்லை. இதனை நான் திட்டமிட்டே நடத்தினேன்.
மாணவர் எழுச்சி என்பது அரசியல்வாதிகளுக்கு ஒரு பாடமாக மற்றும் மாற்று கருத்துருவாக்கமாக அமைய வேண்டும் என்பதுவுமாகவே இருந்தது.
தம்பி பிரபாகரனினால் முதன் முதலாக மாமனிதராக கௌரவிக்கப்பட்ட திரு ஆ.இராசரத்தினம், தமிழீழவிடுதலைப் போராட்டத்தின் ஆயுதப்போராட்ட முன்னோடிகளான மாவீரர்கள் சிவகுமாரன் முத்துக்குமாரசாமி, குட்டிமணி, தங்கத்துரை, நடேசுதாசன், கண்ணாடி பத்மநாதன் (சுங்கான்) மற்றும் பல்வேறு பாடசாலைகளின் மாணவர் தலைவர்கள் என்று பலரையும் உள்வாங்கிய அமைப்பாக மாணவர் பேரவையை நாம் குறிப்பிடலாம்.
அத்துடன் தமிழீழப் பிரதேசமான இலங்கையின் வடகிழக்கு மாகாணங்களில் பரந்திருந்த பல்வேறு ஊர்களிலும் கிராமங்களிலும் தனித்தனியாகவும் சமூக மற்றும் ஊர்க்குழுக்களாகவும் இயங்கிய தமிழ் இன உணர்வாளர்களை கண்டுபிடித்து ஸ்தாபனமயப்படுத்தப்பட்ட அமைப்பொன்றில் இணைத்து உரிமைக்கான போரை முதன்முதலில் முன்னெடுத்த பெருமையும் தமிழ்மாணவர் பேரவைக்கே உண்டு.
ஏறத்தாள இருபத்தெட்டு மாதங்கள் பகிரங்கமாகவும் தலைமறைவாகவும் சிறப்பான முறையில் தமிழ்மாணவர் பேரவை செயற்பட்டது.
பின்வந்த காலங்களில் ஈழ அல்லது தமிழ்ஈழ என்பதை முன்னடியாகக் கொண்ட பல ஆயுதப் போராட்ட அமைப்புகள் உருவாகின.
தனி நாட்டு கோரிக்கையை இலக்காக கொண்டு செயற்ப்பட்ட இந்த அமைப்புகளிற்கு முன்னோடியான தாய் அமைப்பு என இதனை வர்ணிக்கலாம்.
1965 மார்ச்சில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் 66 தொகுதிகளில் ஐக்கிய தேசியக்கட்சியும் 44இடங்களில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் வெற்றி பெற்றிருந்தன.
எனினும் அரசாங்கத்தை அமைப்பதற்குரிய அறுதிப் பெரும்பான்மை அவ்விருகட்சிகளிற்கும் கிடைக்காதிருந்தது.
இதனால் மூன்றாவது பெரும்பான்மையாக வெற்றிபெற்றிருந்த தமிழரசுக்கட்சியினரின் தயவை நாடினர். 14 தொகுதிகளில் வெற்றிபெற்றிருந்த தமிழரசுக்கட்சியினர் மந்திரிப்பதவி ஒன்றினைப் பெற்றுக்கொண்டு அதற்கு மாற்றீடாக ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்து ஆட்சியில் பங்கெடுத்தனர்.
இவ்வாறு கிடைத்த மந்திரிப்பதவியை மக்களால் தெரிவுசெய்யப்படாத மு.திருச்செல்வம் பெற்றுக்கொண்டு உள்ளூராட்சி அமைச்சரானார்.
அத்துடன் எதிர்க்கட்சிகளின் ஆசனத்தில் அமரவேண்டிய தமிழரசுக்கட்சியினர் ஆளும்கட்சியாகி ஆரவாரத்துடன் எங்கும் பவனிவந்தனர்.
இவ்வாறு இவர்கள் அரசுடன் இணைந்து ஆட்சி நடத்தியகாலத்தில் தமிழ் ஈழ மக்களை பாதிக்கும் பலசம்பவங்கள் நடந்தேறின.
அந்த சம்பவங்களை பின்னர் பார்ப்போம்…
தொடரும்…