இந்தக் கட்டுரை முதலில் ஏப்ரல் 10, 2009ல், “எல்.ரீ.ரீ.ஈ க்கு ஏற்பட்ட பாரிய தோல்வியினால் உயர்மட்ட புலித் தலைவர்கள் கொல்லப்பட்டார்கள்” எனும் தலைப்பில் எழுதப்பட்டது. பின்னர் அது புதுப்பிக்கப்பட்டு திருத்தங்களுடன் தற்போதைய தலைப்புடன் வெளியிடப்படுகிறது.அது மீண்டும் இங்கே வெளியிடப்படுவது, ஏப்ரல் 5,2009ல் ஆனந்தபுரத்தில் முடிவுற்ற தீர்க்கமான போரின் ஆறாம் ஆண்டு நிறைவை நினைவுகூர்வதற்காக.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு அதன் 33 வருட போராட்டத்தின் பழைய வரலாற்றில் பல பாரிய பின்னடைவுகளைச் சந்தித்த அனுபவத்தைக் கொண்டிருக்கிறது.
இந்தக் கட்டங்களிலெல்லாம் கெட்டதே நடக்கவேண்டும் என்ற எண்ணம் கொண்ட தீர்க்கதரிசிகளின் தவறான கணிப்புகளையெல்லாம் பொய்யாக்கியபடி இயக்கமானது எப்போதும் இந்த அடிகளையெல்லாம் தாங்கிக்கொண்டு அதன் அரசியல் மற்றும் இராணுவப் பயணத்தை வெற்றிகரமாக தொடர்ந்திருக்கிறது.
இருந்தபோதிலும் புதுக்குடியிருப்பு உதவி அரசாங்க அதிபர் பிரதேசத்தை சேர்ந்த ஆனந்தபுரத்தில் ,ஏப்ரல் முதல் வாரத்தில் அது அடைந்திருக்கும் தோல்வியானது அதன் தரம் மற்றும் அளவு ஆகிய இரண்டிலுமே வித்தியாசமாகத் தெரிகிறது.
தற்போதைய போர் செல்லும் முக்கியமான தருணத்தில் மிகத் தெளிவாக சொல்லக்கூடியது புலிகள், மிகச் சிறப்பாகச் சண்டையிடக்கூடிய தளபதிகளின் பரந்த அணிவரிசையையும், அதேபோல பெரும் எண்ணிக்கையிலான போராளிகளையும் ஒரு ஒற்றைப் போரில் இழந்திருக்கிறார்கள் என்று.
625 க்கும் மேற்பட்ட எல்.ரீ.ரீ.ஈ போராளிகளின் இறந்த உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதோடு, இறந்தவர்களை அடையாளம் காண்பதில் ஒரு விசேட இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
படிப்படியாக சில விபரங்கள் வெளிப்பட்டு வருகின்றன. இந்த தோல்வியையிட்டு எல்.ரீ.ரீ.ஈ உத்தியோகபூர்வ மௌனத்தைக் கடைப்பிடிப்பதோடு, அதன் பிரச்சார வலையமைப்புகள் ஊமையாகிவிட்டன, ஆனால் கெட்ட செய்திகள் மெதுவாக இருந்தாலும் உண்மையாக பரவி வருகின்றன.
ஆனந்தபுரம் சண்டையில் இறந்தவர்களின் நெருங்கிய உறவினர்களை எல்.ரீ.ரீ.ஈ யின் முக்கியஸ்தர்கள் தொடர்பு கொண்டு என்ன நடந்தது என்று விளக்கி வருகிறார்கள்.
மிகவும் பிரபலமற்ற முறையில் சமயச்சடங்குகளையும் மற்றும் மரணச்சடங்குகளையும் நடத்துமாறு உறவினர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
அதேபோல பல்வேறு புலித்தலைவர்களும் மற்றைய புலி அங்கத்தவர்களின் நெருங்கிய குடும்ப அங்கத்தினர்களுக்கு தங்களைவிட்டு பிரிந்து சென்ற தங்கள் உறவுகளுக்கு என்ன நடந்தது என்று தெரிவித்து வருகிறார்கள்.
இறந்த புலிகளில் கேணல். தீபன் (இறந்தபின் பிரிகேடியராக பதவி உயர்த்தப்பட்டார்)அவர்களின் இழப்பு, ஒருவேளை அந்த அமைப்புக்கு ஈடு செய்ய முடியாத மிகப் பெரிய தனியான ஒரு இழப்பாக இருக்கும்.
எல்.ரீ.ரீ.ஈ அமைப்பில் 25 வருடங்களுக்கு மேலாக நீண்ட அனுபவமுடைய மூத்த தலைவரான இவர் கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளையைச் சேர்ந்தவர், எல்.ரீ.ரீ.ஈயின் வடபகுதி முன்னிலையின் போராட்ட அமைப்பின் ஒட்டுமொத்த தளபதியாக கடமையாற்றினார்.
வேலாயுதபிள்ளை பகீரதக்குமார் என்கிற தீபன், கந்தையா பாலசேகரன் என்கிற பால்ராஜின் மறைவுக்குப் பின்னர் எல்.ரீ.ரீ.ஈயின் உண்மையான துணை இராணுவ தளபதியாகவும் இருந்தார்.
தீபனின் தொடர்புக்கான சங்கேதப் பெயர் “டொங்கொ பப்பா” என்பதாகும். அவர் ஒரு முன்னாள் பெண் போராளியினை மணமுடித்திருந்தார், அவர்களுக்கு குழந்தைகள் இல்லை.
தீபனுடன் சேர்த்து, பெண்போராளிகளின் உயர்மட்ட தளபதிகள் நால்வரும்கூட இதில் கொல்லப்பட்டார்கள்.
தளபதி விதுஷா
மாலதி படையணியைச் சேர்ந்த விசேட தளபதி விதுஷா. மற்றும் அவரது துணைத் தளபதியும், மாலதி படையணியின் தளபதியுமான கமலினி, சோதியா படையணியின் விசேட தளபதி, துர்கா மற்றும் அவரது துணைத் தளபதியும், சோதியா படையணியின் தளபதியுமான மோகனா ஆகியோரே கொல்லப்பட்ட அந்த நாலு உயர்மட்ட தளபதிகள்.
ஒரு உறுதிப்படுத்தப்படாத தகவலின்படி பெண்கள் பிரிவு அரசியல் பொறுப்பாளர் தமிழினியும் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
கொல்லப்பட்ட ஏனைய மூத்த புலித் தலைவர்களில், விசேட தளபதியும், மற்றும் ஜெயந்தன் காலாட்படையணியின் தளபதியுமான கீர்த்தி மற்றும் நாகேஸ் ஆகியோரும் அடங்குவர்.
ஜெயந்தன் படையணியானது கிழக்கு மாகாணத்தை சேர்ந்த புலிப் போராளிகளால் உருவாக்கப்பட்டதாகும்.
மாணிக்கப்போடி மகேஸ்வரன் என்கிற கீர்த்தியின் சொந்த இடம் மட்டக்களப்பு மாவட்டத்தின் அரசடித்தீவு ஆகும், அவர் முன்பு புலிகளின் கிழக்கு மாகாண புலனாய்வுப் பிரிவின் தலைவராகவும் பணியாற்றியிருந்தார்.
செல்வரட்னம் சுந்தரம் என்கிற நாகேஸின் சொந்த இடம் பெரியபோரைதீவு, முன்னர் அவர் மாவட்ட இராணுவத் தளபதியாக கடமையாற்றியிருந்தார்.
இவர்கள் இருவருமே புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் விசுவாசிகளாக இருந்தனர், மற்றும் வினாயகமூர்த்தி முரளிதரன் என்கிற கருணா வடக்கின் மேலாதிக்கத்தை காரணங்காட்டி தலைமைக்கு எதிராக கிளர்ச்சி செய்தபோது, மண்ணின் மைந்தர்களாக இருந்தபோதும் கருணாவுக்கு எதிராக போராட இவர்கள் தயங்கவில்லை.
விடுதலை மற்றும் அமுதன் என்று அறியப்பட்ட கடாபியின் மரணம் மற்றொரு மாபெரும் இழப்பாகும். வடமராட்சிப் பகுதியின் வதிரியிலுள்ள கொட்டாரவத்தையைச் சேர்ந்த இவர் ஒரு சமயம் எல்.ரீ.ரீ.ஈ தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மெய்ப்பாதுகாவலராகவும் கடமையாற்றியிருந்தார்.
இந்தியா – லங்கா ஒப்பந்தம் கைச்சாத்தாகிய பின்பு சுதுமலையில் பிரபாகரன் ஆற்றிய பிரபலமான சொற்பொழிவின்போது, தலைவருக்கு பின்னால் நின்ற இரண்டு மெய்ப்பாதுகாவலர்களில் ஒருவர் கடாபி.
கடாபி
பின்னர் கடாபி இம்ரான் – பாண்டியன் படையணியின் தளபதியானார். ஒரு சமயம் அவர் ராக்கெட்டில் இணைக்கப்பட்ட எறிகுண்டு(ஆர்.பி.ஜி) பிரிவிற்கு பொறுப்பாகவும் இருந்தார். இந்திய அரசாங்கத்தினால் விமான எதிர்ப்பு ஏவுகணைகளை இயக்குவதற்கு பயிற்சி வழங்கப்பட்ட பத்து அங்கத்தவர்களைக் கொண்ட படையணியில் கடாபியும் ஒருவர்.
பின்னர் கடந்த நூற்றாண்டின் 90 களில் எல்.ரீ.ரீ.ஈ சில சாம் – 7 ஏவுகணைகளைப் பெற்றுக் கொண்டபோது கடாபி அவைகளைச் சுடும் நிபுணராக மாறினார்.
ஸ்ரீலங்கா விமானப்படைக்கு சொந்தமான பல விமானங்களை தனது தோளில் சுமந்து சுடும் ஏறிகணைகளால் கடாபி சுட்டு வீழ்த்தியிருக்கிறார்.
அவர் ஒரு ஆயுத நிபுணரும் கூட மற்றும் ஐரோப்பாவில் விசேட பயிற்சி பெறுவதில் சில மாதங்களை செலவிட்டும் உள்ளார்.
சமீபத்தில் புலிகளின் பயிற்சிப் பள்ளியில் விசேட படைகளுக்கு பயிற்சி வழங்குவதற்கு பொறுப்பாகவும் கடாபி கடமையாற்றியுள்ளார்.
எல்.ரீ.ரீ.ஈயின் தீரமிக்க உயர்மட்ட சிறப்பு படைப் பிரிவிற்கு, பின்னர் முன்னாள் புலித் தலைவரான ஹரிச்சந்திரன் என்கிற ராதாவின் பெயர் சூட்டப்பட்டது. இந்த சிறப்பு படைப்பிரிவினை தலைமையேற்று வழிநடத்தியவர் சிலம்பரசன். அவரும் கொல்லப்பட்டார்.
ராதா படையணியின் துணைத் தளபதி அன்பு. அவர் தீவிரமான காயங்களுக்கு ஆளாகி உயிரோடு பிடிபட்டார்.
அதேபோலவே பொன்னம்மான் கண்ணிவெடிப் பிரிவின் தலைவர் அஸ்மியும் மோசமாகக் காயமடைந்ததால் உயிரோடு பிடிக்கப்பட்டார். இந்த இருவருடைய விதியும் என்னவென்று யாருக்கும் தெரியவில்லை.
கிட்டு எறிகணைப் பிரிவின் தலைவர் மணிவண்ணன், மற்றும் குட்டி சிறீ மோட்டார் பிரிவின் தலைவர் கோபால் ஆகியோரும் கொல்லப்பட்டனர்.
எஸ்பி.தமிழ்செல்வனின் கீழ் நிருவாக உத்தியோகத்தராகவும் மற்றும் துணை அரசியல் பொறுப்பாளராகவும் பணியாற்றி வந்த எஸ்.தங்கன் என்பவரும் உயிருடன் இல்லை என்று உறுதிப்படுத்தப் படாத சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
புலிகளின் தொலைக்காட்சியான நிதர்சனத்துக்கு பொறுப்பான சேரலாதனும் கொல்லப்பட்டவர்களில் ஒருவர்.
கொல்லப்பட்ட இதர மூத்த புலித் தலைவர்களில், அடையாளம் காணப்பட்டவர்கள், ரூபன், பஞ்சன், நேரு, அன்ரன், மாங்குயில், அமுதா, இனியவன், ஆதித்யன், மற்றும் சித்ராங்கன் ஆகியோர்களாகும். ஒரு மூத்த கடற்புலியான மகிந்தன் என்பவரும் கொல்லப்பட்டார்.
இந்த மூத்த புலித் தலைவர்கள் ஏப்ரல் முதல் வாரத்திலேயே கொல்லப்பட்டார்கள். ஆனால் அவர்களின் சாவுக்கு காரணமான இராணுவப் போராட்டம் மார்ச் 30 ந்திகதி ஆரம்பிக்கப்பட்டது.
மேலும் இரண்டு மூத்த புலித் தலைவர்கள் மார்ச் 31ல் கொல்லப்பட்டனர். சாள்ஸ் அன்ரனி காலாட் படையணியின் கோபித், மற்றும் சாள்ஸ் அன்ரனி படையணியின் தலைவரும் விசேட தளபதியுமான அமுதாப் ஆகியோரோ அந்த இருவரும்.
ஒரு ஒற்றைப் போரில் எப்படி இவ்வளவு உயர்மட்டத் தலைவர்கள் கொல்லப்பட்டார்கள், ஏன் இவ்வளவு உயர்மட்டத் தலைவர்களும் ஒரே இடத்தில் அடைபட்டார்கள், என பலவிதமான அதிர்ச்சி கலந்த குழப்பம் நிலவுகிறது.
என்ன நடந்தது என்பதை விளங்கிக்கொள்ள முந்தைய நிகழ்வுகளைப் பற்றிய சுருக்கமான ஒரு மீள் – சுழற்சி அவசியமாகிறது.
கடந்துபோன சமீபத்தைய நாட்களில் எல்.ரீ.ரீ.ஈ ஒரு தீவிரமான இராணுவப் பின்னடைவினால் பாதிக்கப்பட்டிருந்தது.
அது இராணுவத்தினர் முன்னோக்கி நகர்வதும் மற்றும் புலிகள் பின்வாங்கிச் செல்லுவதுமான ஒரு நிகழ்வாக இருந்தது, ஏனெனில் பாதுகாப்பு படையினர் எல்.ரீ.ரீ.ஈயைக் காட்டிலும் ஆட்பலம், சுடுகலன் சக்தி, வான்படை சக்தி, மற்றும் ஆயுதபலம் என்பனவற்றில் அளவுக்கு அதிகமான உயர்ச்சியை கொண்டிருக்கிறார்கள்.
இராணுவத் தேர் இடைவிடாது முன்னோக்கி உருண்டோடிக் கொண்டிருக்கிறது, மற்றும் புலிகள் தற்சமயம், ஏ -35 நெடுஞ்சாலை (பரந்தன் – முல்லைத்தீவு வீதி)க்கிடையில் ஒருபக்கம் நந்திக்கடல் மற்றும் சாலை கடலேரிகளும் மறுபக்கத்தில் இந்துசமுத்திரத்துக்கும் இடைப்பட்ட கரையோரமாகவுள்ள சிறிய பட்டி போன்ற பிரதேசத்துக்குள் அடைபட்டுள்ளார்கள்.
இராணுவத்தின் ஐந்து படையணிகள் மற்றும் விசேட படையணிகள் என 50,000க்கும் மேற்பட்ட படைவீரர்கள் முற்றுகையிட்டுள்ளார்கள்.
இந்த சுற்றிவளைப்பு வியூகத்தை உடைத்து படையினரை பின்னுக்குத் தளளும் துணிச்சலான முயற்சியில் புலிகள் ஈடுபட்டுள்ளார்கள்.
மார்ச் மாதக் கடைசியில் மூத்த தளபதிகள் சொர்ணம் மற்றும் லோறன்ஸ் ஆகியோர் தலைமையில் எதிர் தாக்குதல் நடத்தியபோது சிறியளவு வெற்றியினை எல்.ரீ.ரீ.ஈ பதிவு செய்திருந்தது.
இராணுவத்தினரை அவர்களின் முன்னணி பாதுகாப்பு நிலையிலிருந்து 600 – 700 மீற்றர் வரை எல்.ரீ.ரீ.ஈ பின்னுக்குத் தள்ளியிருந்ததுடன் வடக்;குப் பக்கமாக சுமார் 8 கிலோ மீட்டர் தூரம் வரை சென்றிருந்தனர்.
எனினும் இராணுவத்தினர் அணிதிரண்டு வந்து திரும்பத் தாக்கினர். அவர்கள் புலிகளை துரத்தியடித்து ஒருவாறு தங்களின் பழைய நிலைகளை திரும்பக் கைப்பற்றினார்கள்.
சொர்ணம் மற்றும் லோறன்ஸ் ஆகிய இருவருமே காயத்துக்குள்ளானார்கள். மேலும் பிரபாகரனின் மகனான சாள்ஸ் அன்ரனியும் அவரது முதுகிலும் மற்றும் தோளிலும் சிறு சிறு காயங்களுக்குள்ளானார்.
பால்ராஜ்
இந்தப் பின்னடைவுக்கு எதிராக மிகப்பெரிய எதிர் தாக்குதலை இராணுவத்தின்மீது தொடுக்க எல்.ரீ.ரீ.ஈ திட்டம் தீட்டியது. பாதுகாப்பு படைகளை தடைப்படுத்தி பாரிய அடி கிடைக்கும்படி கவனமாக திட்டமிட்ட நடவடிக்கையை மேற்கொள்வதே அந்த திட்டம்.
வெளிப்படையாக புலித்தலைவர்கள் ஆனந்தபுரத்தை மையமாகக் கொண்டு புதுக்குடியிருப்பு -இரணப்பாலை – புதுமாத்தளன் வீதியில் ஆயுதப் படைகளுக்கு எதிராக பாரிய எதிர் தாக்குதலை மேற்கொள்வதற்காக சுறுசுறுப்பாக திட்டம் தீட்டிக் கொண்டிருந்தனர்.
இரணப்பாலைக்கான வீதி புதுக்குடியிருப்பு சந்தியிலிருந்து ஏ – 35 நெடுஞ்சாலை மேலாக கிழக்கி நோக்கிச் செல்கிறது.
மற்றொரு வீதி, இரணப்பாலை கிழக்கிலிருந்து ஆரம்பித்து புது மாத்தளனை நோக்கி கடற்கரையோரமாகச் செல்கிறது. இந்த வீதியில் பச்சைபுல்மோட்டையில் ஒரு சிறிய சந்தி உள்ளது, அங்கிருந்து ஒரு சிறிய வீதி பழம் மாத்தளனை நோக்கிச் செல்கிறது.
ஆனந்தபுரம் மற்றும் இரணப்பாலை ஆகியவை புதுக்குடியிருப்பு உதவி அரசாங்க அதிபர் பிரிவைச் சேர்ந்தவை, மற்றைய பிரதேசங்கள் காரைதுறைப்பற்று உதவி அரசாங்க அதிபர் பிரிவைச் சேர்ந்தவை, ஆயிரத்துக்கும் மேற்பட்ட புலிப் போராளிகள் ஆனந்தபுரத்தில் ஒருங்கிணைக்கப்பட்டு திட்டமிட்ட எதிர் தாக்குதலை நல்ல முறையில் அணுகுவதற்காக தயார் படுத்தப்படலானார்கள்.
புதுக்குடியிருப்பு – இரணப்பாலை – புதுமாத்தளன் வீதியின் உள்ளேயும் அதனைச் சுற்றியுமுள்ள பகுதிகளின் பாதுகாப்பு சாள்ஸ் அன்ரனி காலாட் படையினரின் கைகளிலேயே இருந்தது.
என்ன நடந்தது என்றால் பிரிகேடியர்.சவேந்திர சில்வாவின் கட்டளையின் கீழுள்ள 58வது படையணியும், ஜெனரல். கமால் குணரத்னவின் தலைமையின் கீழுள்ள 53வது படைப்பிரிவும், கேணல்.ரவிப்பிரிய வழிநடத்தும் பணிப்படை 8 வது பிரிவும் மார்ச் 30ல் ஒரு வெற்றிகரமான இராணுவ நடவடிக்கையை நடத்தினார்கள்,அது விரைவான பலனை அறுவடை செய்தது.
58 வது படையணி புதுக்குடியிருப்பு வடக்கிலிருந்து, தென்கிழக்கு மூலம் தெற்குப் பக்கத்துக்கும், 53வது மற்றும் 8வது படையணிகள் புதுக்குடியிருப்பு தெற்கிலிருந்து வட கிழக்கு மூலம் வடக்குப் பக்கத்தக்கும் விரைந்து முன்னேறி புதுக்குடியிருப்பு வீதி வழியாக பச்சைப் புல்மோட்டை சந்தியில் எல்.ரீ.ரீ.ஈயின் நிலைகளுக்குப் பின்புறமாக ஒன்றிணைந்தன.
பச்சைப் புல்மோட்டையில் மிகப் பெரிய போர் மூண்டது, அங்கு புலிகளின் தடைத் தாக்குதல் சாள்ஸ் அன்ரனி படைப்பிரிவின் விசேட தளபதி கோபித்தினதும்,மற்றம் தளபதி அமுதாப்பினதும் தலைமையின் கீழ் மேற்கொள்ளப்பட்டது, அதில் அவர்கள் இருவருமே கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
(தொடரும்)
– டி.பி.எஸ்.ஜெயராஜ்
(இத்தொடர் மீள்பிரசுரம்)