இலங்கையின் புதிய ஜனாதிபதியினால் தனது நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி (இதை ஒழிக்கப் போவதாகச் சொல்லித்தான் ஆட்சிபீடம் ஏறினார்) ஜனநாயக விரோதமான முறையில் பிரதமராக நியமிக்கப்பட்டிருக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, தமது அரசின் 100 நாள் வேலைத்திட்டத்தின் சிறப்பு வெளிப்பாடுகளில் ஒன்றாக இந்தியாவுக்கு எதிரான முதலாவது கல்லை வீசியிருக்கிறார்.

மைத்திரிபால சிறிசேன இலங்கையின் புதிய ஜனாதிபதியாகப் பதவி ஏற்ற பின்னர் இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கு இந்தியாவின் ‘ரோ’ அமைப்பின் மூலம் உதவி செய்த இந்தியாவுக்கு நன்றி தெரிவிப்பதற்காகவோ என்னவோ, இந்தியாவுக்கே தனது முதலாவது வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொண்டார்.

பதிலுக்கு இந்தியாவின் பிரதமர் நரேந்திரமோடி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டார். மோடி விஜயம் மேற்கொள்வதற்கு முன்னதாகத்தான் ரணில் இந்தியாவை நோக்கித் தனது கல்லை வீசி எறிந்தார்.

அப்படி என்னதான் ரணில் பென்னம் பெரிய இந்தியாவுக்கு எதிராகச் செய்துவிட்டார்?

தமிழக மீனவர்கள் எல்லைதாண்டி இலங்கைக் கடற்பரப்பிற்குள் மீன் பிடித்தால் அவர்களைச் சுட்டுத் தள்ளுவதற்கு இலங்கை அரசுக்கு உரிமை உள்ளது எனத் துணிகரமாகத் திருவாய் மலர்ந்தார். உண்மையில் இது ஒரு துணிச்சலான கூற்றுத்தான்!

அதுவும் இந்தியாவின் பிரதமர் இலங்கை வரவிருந்த சூழலில், அதற்கு முன்னோடியாக இந்திய வெளிவிவகார அமைச்சர் சிறீமதி சுஸ்மா சுவராஜ் வரவிருந்த நேரத்தில், ரணில் இந்தக் குண்டைத் தூக்கிப் போட்டார்.

ரணலின் இந்தப் பேச்சைக் கேட்டு வழமையாக நாரதர் வேலையில் துடிப்புடன் செயல்படும் இலங்கை – இந்திய ஊடகங்கள் ஆரவாரம் செய்து செய்திகளை வெளியிட்டன.

ஆனால் அவர்கள் எதிர்பார்த்த மாதிரி இந்தியப் பிரதமரின் விஜயத்தின் போது ரணிலின் கூற்றுப் பற்றி விவாதிக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

ரணில் தினதந்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி

அதுமாத்திரமல்ல, இந்தியா ரணிலின் ‘ஆத்திரமூட்டும்’ பேச்சு சம்பந்தமாக அலட்டிக் கொள்ளவும் இல்லை.

அதைவிட ஆச்சரியம் என்னவென்றால், மகிந்த ராஜபக்ச தான் உயிர் வாழ்வதற்காக இயற்கையாகச் சுவாசித்தாலும், அவர் இலங்கைத் தமிழர்களுக்கு எதிராகவும், தமிழகத்தில் வாழும் 7 கோடி தமிழர்களுக்கு  எதிராகவுமே திட்டமிட்டுச்   சுவாசிக்கிறார் என ஆர்ப்பாட்டம், கடையடைப்பு, பஸ் எரிப்பு எனச் செய்யும் தமிழகப் பிழைப்புவாத அரசியல் கட்சிகள் கூட ரணிலின் திமிர்த்தனமான பேச்சுப் பற்றி பேசாமடந்தைகளாக மாறிப்போய் இருக்கிறார்கள்.

இந்திய அரசினதும், தமிழக அரசியல்வாதிகளினதும் இந்த, ரணிலின் பேச்சைக் கண்டு கொள்ளாத போக்கு ரணிலையும் கொஞ்சம் எரிச்சலூட்டி இருப்பதாகத் தெரிகிறது.

அதனால்தானோ என்னவோ மோடி வந்து போன பின்னரும் கூட ரணில் மீண்டுமொரு தடவை தமிழக மீனவர்கள் எல்லை கடந்தால் அவர்களைச் சுடுவதற்கு இலங்கை அரசுக்கு உரிமை உள்ளது என மீண்டும் வலியுறுத்தி இருக்கிறார்.

ரணிலின் இந்தப் பாரதூரமான பேச்சில் இரண்டு விடயங்கள் உள்ளடங்கி உள்ளன.

முதலாவது விடயம், இலங்கையில் ஆட்சி மாற்றத்துக்கு உதவிய இந்தியாவுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் விதமாக ஏன் ரணில் அப்படிப் பேசினார் என்பது.

இரண்டாவது விடயம், எடுத்ததிற்கெல்லாம் இலங்கைக்கு எதிராக ஆவேசப் போராட்டம் நடாத்தும் தமிழக அரசியல்வாதிகள் ரணிலின் பேச்சுக் குறித்து ஏன் அடக்கி வாசிக்கிறார்கள் என்பது.

ரணில் ஏன் அப்படிச் சொன்னார் என்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. வரலாற்று ரீதியாகவே ஐ.தே.க இந்தியாவுக்கு எதிரான ஒரு கட்சி என்பது முக்கியமானதாகும்.

சுதந்திர இலங்கையின் முதலாவது அரசாங்கத்தை அமைத்த அன்றைய ஐ.தே.க. தலைவர் டி.எஸ். சேனநாயக்கவின் அரசாங்கம் தான் இந்திய வம்சாவழியினரான மலையகத் தமிழ் தோட்டத் தொழிலாளர்களின் வாக்குரிமையையும், பிரஜாவுரிமையையும் பறித்து அவர்களை நாடற்றவர்களாக்கி சுதந்திர இலங்கையில் இந்திய விரோதப் போக்கிற்கு கால்கோள் இட்டது.

அத்துடன் சுதந்திர இந்தியாவின் முதலாவது பிரதமர் நேருவும், பின்னர் அவரது புதல்வி இந்திராகாந்தியும் இந்தியாவின் பிரதமர்களாகப் பதவி வகித்த, அமெரிக்க -சோவியத் பனிப்போர் நிலவிய அக்காலகட்டத்தில், அவர்களுடைய அரசுகள் அமெரிக்க எதிர்ப்பு நிலைப்பாட்டில் இருந்ததால்,

அமெரிக்க சார்பான ஐ.தே.கவும் அமெரிக்காவுக்குச் சார்பாக இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டையே எடுத்து வந்தது.

images-53இந்த விடயத்தில் ரணிலின் மாமனார் அரசியல் குள்ளநரி ஜே.ஆர்.ஜெயவர்த்தன மிகவும் தீவிரமான இந்திய எதிர்ப்பாளர் ஆவார்.

அவர் 1977இல் ஆட்சிக்கு வந்த பின்னர் இந்தியாவுக்கு எதிராக, தீவிரமான அமெரிக்க சார்பு நிலைப்பாட்டை எடுத்ததும், அவருக்கு ஒரு ‘பாடம் படிப்பிக்க’ இலங்கையில் தமிழ் இளைஞர்களின் ஆயுதப் போராட்டத்தை இந்திராகாந்தி அரசு தொடக்கி விட்டதும் வரலாற்று நிகழ்வுகள்.

ஜே.ஆரின் ஆட்சிக் காலத்தில்தான் இந்திய – இலங்கை உடன்படிக்கையில் கையெழுத்திட இலங்கை வந்த இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்திக்கு ஜே.ஆர். முன்னிலையில் மரியாதை அணிவகுப்பில் கலந்து கொண்ட இலங்கைக் கடற்படைச் சிப்பாய் ஒருவன் ராஜீவின் தலையில் தனது துப்பாக்கி பிடியால் தாக்கிக் கொலை செய்ய முயன்றான்.

index
(அவன் செய்ய முடியாமல் போனதைப் பின்னர் புலிகள் வெற்றிகரமாகச் செய்து முடித்துவிட்டார்கள்)
அதன் பின்னர் தற்போதைய மோடியின் விஜயத்துக்கு முன்னர் இதுவரை காலமும் இந்தியப் பிரதமர் யாருமே இலங்கை வருவதைத் தவிர்த்து வந்தனர்.

இவைகள் பழைய கதைகள். ஆனால் தற்போதைய சூழ்நிலையில் ரணில் இந்திய விரோத நிலைப்பாட்டை எடுப்பதற்கு இரண்டு பிரதான காரணங்கள் இருக்கின்றன.

அதில் ஒன்று இந்தியா தன்னை இலங்கை அரசியலில் ஓரம்கட்ட முயற்சிக்கிறது என்ற ரணிலின் சந்தேகமாகும்.

அண்மையில் நடந்து முடிந்த இலங்கை ஜனாதிபதித் தேர்தலின் போது எதிரணி சார்பில் ரணில் போட்டியிட விரும்பிய போதும், அதைத் தடுத்து மைத்திரியை பொது வேட்பாளராக்கியதில் இந்தியாவின் ‘ரோ’ உளவு அமைப்புக்கு முக்கிய பங்கு உண்டு என்ற பலமான அபிப்பிராயம் இலங்கையில் நிலவுகின்றது.

 hunter1

அதற்குக் காரணம் ரணில் தீவிரமான மேற்கத்தைய சார்பாளர் என்பதாகும். தற்போதைய மோடியின் இந்திய அரசும் மேற்கத்தைய -அதிலும் குறிப்பாக அமெரிக்க சார்பு அரசு என்றாலும், தென்னாசியப் பிராந்தியத்தின் வல்லரசாகத் தன்னைக் கருதிக் கொள்ளும் இந்தியா, தன்னைத் தவிர இந்தப் பிராந்தியத்தில் உள்ள வேறெந்த நாடும் மேற்கத்தைய சக்திகளுடன் நேரடியாகத் தொடர்பு வைத்துச் செயல்படுவதை விரும்பவில்லை.

அமெரிக்கா உலகப் பொலிஸ்காரன் என்றால், இந்தியா தென்னாசியப் பொலிஸ்காரன் என்பதே இந்தியா நீண்டகாலமாகக்  கடைப்பிடித்து வரும்  கொள்கையாகும்.

இந்தக் கொள்கை இந்தியாவில் எந்த அரசு பதவிக்கு வந்தாலும் மாறாத ஒன்றாகும்.

எனவேதான் அமெரிக்காவுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் நீண்டகால வரலாற்றைக் கொண்ட ரணிலை விட, அவ்வாறான நிலைப்பாடு எதுவும் அற்ற மைத்திரி ஜனாதிபதியாக வந்தால் அவரைக் கையாள்வது சுலபம் என்பது இந்திய ஆளும் தரப்பின் எண்ணமாகும்.

இது ரணிலுக்கும் புரியும். அதனால்தான் ரணில் தனது எதிர்ப்பை இந்தியாவுக்குத் தெரியப்படுத்துவதற்காக இந்தியாவின் எந்த அரசுக்கும் தலையிடியாக இருக்கும் தமிழக மீனவர் பிரச்சினையில் அப்படி ஒரு ‘துப்பாக்கி சூட்டு’ கதையைத் திரும்பத் திரும்பச் சொல்லி மோடி அரசுக்கு தமிழக அரசியல் அரங்கில் ஒரு நெருக்கடியை உருவாக்க முயல்கிறார்.

அதைப் புரிந்து கொண்டதாலேயே மோடி அரசும் ரணிலின் கல்லெறிகளைத் தட்டிவிட்டுவிட்டு அமைதியாக இருக்கிறது.

ஆனால் தமிழக அரசியல்வாதிகள் இந்த விடயத்தில் அமைதியாக இருப்பதுதான் பலருக்கு ஆச்சரியத்தைக் கொடுத்திருக்கிறது.

ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் இலங்கை கடற்படை தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடாத்தினாலும் நடத்தாவிட்டாலும் தமிழக அரசியல்வாதிகள் இலங்கை அரசுக்கு எதிராக காரசாரமான கண்டன அறிக்கைகள் விடுவதும், தமிழக மீனவக் கிராமங்களில் தொடர் போராட்டங்கள் நடாத்துவதும் அன்றாட விடயங்கள்.

vaiko
ஆனால் இப்பொழுது இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே ‘எல்லை தாண்டும் தமிழக மீனவர்களைச் சுடுவோம்’ என கொடுக்கை வாரிக் கட்டிக்கொண்டு போர்ப் பிரகடனம் செய்த போதிலும், எந்நேரமும் நெருப்புக் கக்கும் தீக்கோழிகளான வைகோ, நெடுமாறன், ராமதாஸ், திருமாவளவன் போன்றவர்கள் மணலுக்குள் தலையைப் புதைத்துக் கொண்டு சத்தம் சந்தடியின்றி அடங்கிப்போய்க் கிடக்கின்றனர்.

இதற்குக் காரணம் என்ன? பொதுவாகவே தமிழகத்தில்

இடதுசாரிக் கட்சிகளைத் தவிர (அவர்களும் ஓட்டுப் பொறுக்குவதற்காக சில வேளைகளில் இலங்கைப் பிரச்சினையில் தப்புத்தாளங்கள் போடுவதுண்டு), மற்ற எல்லா திராவிடப் பிழைப்புவாதக் கட்சிகளும் ஏகாதிபத்திய சார்புக் கட்சிகளே.

அதனால்தான் கடந்த காலங்களில் ஏகாதிபத்திய எதிர்ப்பான மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த போது எடுத்ததெற்கெல்லாம் இலங்கைக்கு எதிராக போர்க்கொடி தூக்குவதை வழமையாகக் கொண்டிருந்தார்கள்.

அதுமட்டுமல்ல, இலங்கையில் ராஜபக்சவை வீழ்த்தி மேற்குலகின் கைப்பொம்மைகளான ரணில் – மைத்திரி கூட்டை ஆட்சிக்குக் கொண்டு வருவதிலும் அவர்களுக்கும் முக்கிய பங்கு இருந்தது.

எனவே தமது சகாவான ரணில் விக்கிரமசிங்க என்ன சொன்னாலும் சொல்லிவிட்டுப் போகட்டும். அதைக் கண்டு கொள்ளாமல் இருந்து விடுவோம் என அவர்கள் சபதம் செய்திருக்கிறார்கள் போலும்.

இன உறவை விட வர்க்க – அரசியல் உறவு மேலானது என மார்க்சிய மூலவர்கள் சும்மாவா சொல்லிச் சென்றிருக்கின்றனர்.

ரணிலின் இந்திய எதிர்ப்புக்கு இன்னொரு முக்கிய காரணமும் இருக்கின்றது. அதாவது ஜனாதிபதித் தேர்தலில் தான் தோற்றுப் போனதற்கு மேற்கத்தைய உளவு அமைப்புகளின் செயற்பாடுகளுடன்,

இந்திய ரோ உளவு அமைப்பும் ஒரு காரணம் என முன்னாள ஜனாதிபதி மகிந்த அண்மையில் இரண்டு மூன்று தடவைகள் திரும்பத் திரும்பக் கூறியிருந்தார்.

அதன் மூலம் பெரும்பான்மை சிங்கள இனம் மத்தியில் மீண்டும் ஒரு இந்திய எதிர்ப்பு அரசியல் களைகட்டத் தொடங்கியிருக்கிறது.

விரைவில் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளதால் இந்த இந்திய எதிர்ப்பு அரசியல் மேடைகளில் ஒரு பிரபலமான பிரச்சார ஆயுதமாக மாறக்கூடிய சூழல் உள்ளது.

அப்படியான ஒரு நிலை ஏற்பட்டால், ஏதோ ஒரு வகையில் அடுத்த தேர்தலில் பிரதமர் வேட்பாளராகக் களமிறங்கக் காத்துக் கொண்டிருக்கும் மகிந்த ராஜபக்சவுக்கு அது பெரும் வாய்ப்பாக இருக்கும்.

ஏனெனில் பாரம்பரியமாகவே சிங்கள மக்கள் மத்தியில் இந்திய எதிர்ப்பு உணர்வு ஆழமாக வேரூன்றி இருக்கின்றது.

அது தென்னிந்திய மன்னர்கள் இலங்கை மீது முன்னைய வரலாற்றுக் காலங்களில் அடிக்கடி படையெடுத்து அவர்களை அடிமைப்படுத்தியதால் உருவானது.

அந்த உணர்வை நவீன இலங்கையின் வரலாற்றில் எண்ணெய் ஊற்றி வளர்த்த பெருமை ஐ.தே.கவையே சாரும். பின்னர் ஜே.வி.பி அதைத் தனது கொள்கையின் அடிநாதமாக வரித்துக் கொண்டது.

rajiv-ganthiஇந்திய – இலங்கை உடன்படிக்கை காலத்தில் சிறீலங்கா சுதந்திரக் கட்சியும் தனது பங்கிற்கு இந்திய எதிர்ப்பைக் கிளறியது.

அரசியல் கட்சிகள் தவிர, பல்வேறு பௌத்த அமைப்புகள், சிங்கள அமைப்புகள் என்பனவும் இந்திய எதிர்ப்பிலேயே உரம் பெற்று இருப்பன. எனவே அது எப்பொழுதும் இலங்கை அரசியலில் நீறுபூத்த நெருப்பாகவே இருந்து வருகின்றது.

தனது மாமனார் ஜே.ஆர். அளவுக்கு இல்லாவிட்டாலும், சின்ன அரசியல் குள்ள நரியான ரணிலுக்கு இது நன்கு விளங்கும்.

எனவேதான் அடுத்த பொதுத்தேர்தலில் தனது எதிரணியான சிறீ.ல.சு.கட்சிக்கு ஜனாதிபதி மைத்திரி அக்கட்சியின் தலைவர் என்ற வகையில் தலைமை தாங்கினாலும், அவரை இந்திய ஆதரவாளராகவும், தன்னை இந்தியாவுக்கு எதிரான இலங்கையின் தேசபக்திமானாகவும் காட்டி வெற்றி பெறுவதற்காகவே, ரணில் இந்த இந்திய எதிர்ப்பு என்ற அஸ்திரத்தை இப்பொழுதே கையில் தூக்கி வைத்திருக்கிறார் என்பதே உண்மையாகும்.

ஆனால் கணக்குகள் யாரும் போடலாம். விடைகள் எப்படி அமையும் என்பதையும், அதில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

(-இரா.கார்த்திகேசு –
வானவில்)

Share.
Leave A Reply