சிவகுமாரன் 1970 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மேற்கொண்ட குண்டுவெடிப்புபற்றி எனது கடந்த பதிவில் குறிப்பிடிருந்ததுடன் அது பற்றி இந்த பதிவில் விபரிப்பதாக எழுதியிருந்தேன்.
இந்த குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து சிவகுமாரனைப்பற்றிய ஒரு முழுமையான விளக்கத்தினூடாக எழுதுவது பொருத்தமானது என்று கருதுகிறேன்.
நானும் சிவகுமாரனும் அயல் வீட்டுக்காரர்கள். சிவகுமாரனுக்கு இரண்டு சகோதரர்களும் ஒரு சகோதரியும் இருக்கின்றனர்.
தாயாரின் பெயர் அன்னலட்சுமி பொன்னுத்துரை. இவர் பின்னாளில் தமிழர் விடுதலைக்கூட்டணியின் மகளிர் அணி தலைவியாக பணியாற்றி இருந்தார்.
தந்தை பொன்னுத்துரை உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாசாலையில் அதிபராக கடமையாற்றினார்.
நாம் அயல் வீட்டுக்காரர்களாக இருந்தபோதிலும், நான் பேராதனை பல்கலைக்கழகத்தில் படிப்பை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்த பின்னரே எங்களுக்குள் அன்னியோன்னியமான பழக்கம் ஏற்பட்டது.
சிவகுமாரனை சிங்கள அடக்குமுறைக்கு எதிராக போராடும் ஒரு வீரனாக மட்டும் அன்றி ஒரு சமூகப் போராளியாகவும் நான் கண்டேன்.
உரும்பிராயில் சாதிக் கொடுமைகளை எதிர்த்து குரல்கொடுத்து வந்தான். அங்குள்ள வைரவ கோவிலில் ‘சமபந்தி போஷனம்’ என்ற ஒரு நிகழ்வை ஒழுங்கு செய்து இளையோர் மத்தியில் சாதிப் பாகுபாட்டுக்கெதிரான ஒரு எழுச்சியை அவன் உருவாக்கினான்.
மற்றொரு நிகழ்வாக, சாவு வீடுகளில் பறை மேளம் அடிப்பதை எதிர்க்கும் வகையில் அச் சமூகத்வர்களுடன் கலந்தாலோசித்து பறை மேளங்களை உரும்பிராய் முச்சந்தியில் போட்டு அவற்றை உடைத்து எரித்தமையை குறிப்பிடலாம்.
கோவில்களில் வேள்வி நடத்துவதற்கு எதிராகவும் அவன் தனது செயற்பாடுகளை மேற்கொண்டிருந்தான்.
1970 ஆம் ஆண்டு ஜூலையில் ‘வல்வெட்டித்துறை பட்டு’ என்று அழைக்கப்டட்ட ஆனந்தகுமரன் என்பவருடன் ஏற்பட்ட தொடர்பு சிவகுமாரனின் சிங்கள அடக்கு முறைக்கு எதிரான செயற்பாடுகளுக்கு முக்கியமானது.
யாழ்ப்பாணம் தொழில்நுட்ப கல்லூரியில் படிக்கும்போதே இவர்களுக்கிடையிலான தொடர்பு ஏற்படுகிறது.
இவர்கள் இருவரும் தொழில்நுட்ப கல்லூரியில் படித்த அதேநேரம், கொக்குவில் பொற்பதி வீதியில் வசித்த ஆனந்தகுமாரசுவாமி என்ற ஆசிரியரிடம் ஆங்கிலம் கற்றனர்.
இந்த நேரத்தில் தான், 1970ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் வாரத்தில் கொழும்பு இந்துக் கல்லூரியில் விஞ்ஞான ஆய்வு கூடத்தை திறந்து வைப்பதற்கு சென்ற கலாசார உதவி அமைச்சர் பேசிய பேச்சு இருவரையும் ஆத்திரம் கொள்ள வைத்தது.
அந்த நிகழ்வில் பேசிய சோமவீர சந்திரசிறி “தமிழ் கலாசாரமும் சிங்கள கலாசாரமும் ஒன்றிணைந்தது” என்று பேசியிருந்தார்.
இந்த கருத்து சிவகுமாரனுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது. இதற்கு எவ்வாறு பதிலடி கொடுக்கலாம் என்று நண்பர்களுடன் கலந்துரையாடினார்.
இந்த சந்தர்ப்பத்தில் தான், சில நாட்கள் கழித்து சோமசிறி யாழ்ப்பாணம் வருவதாக அறிவிக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் வைத்தீஸ்வரா கல்லூரியிலும் சிவகுமாரனின் தகப்பனார் அதிபராக இருந்த உரும்பிராய் சைவ தமிழ் வித்தியாசாலையில் அன்றைய தினம் மாலையும் அவர் ஆய்வுகூடங்களை திறக்க ஏற்பாடாகி இருந்தது.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சோமசிறிக்கு ஒரு பாடம் புகட்ட சிவகுமாரன் நினைத்தான்.
இதுபற்றி நண்பர்களுடன் கலந்துரையாடிய அவன் முத்துக்குமாரசுவாமி மாஸ்ரரின் வீட்டில் ஒரு கூட்டத்தை ஒழுங்கு செய்தான்.
இந்த கூட்டத்தில் சிவகுமாருடன், வில்வராஜா ( சென் பற்றிக்ஸ் கல்லூரி), தவராசா (தற்போதைய எதிர்கட்சித் தலைவர் வட மாகாண சபை), ஆனந்தன் ( முத்துகுமாரசுவாமி மாஸ்ரரின் தம்பி), ஆனந்த குமரேசன் ( பட்டு) மற்றும் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் உயிராபத்து ஏற்படாத வகையில் ஒரு குண்டு தாக்குதலை நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டது.
உரும்பிராய் சைவத் தமிழ் வித்தியாசாலையில் நிகழ்வு முடிந்து காரில் ஏறும்போது இந்த தாக்குதலை நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
ஆனால், குண்டு வைக்கும் தொழில்நுட்பம் எவருக்குமே தெரிந்திருக்கவில்லை. ஆனந்தகுமரேசனின் ஆலோசனையின்படி, வல்வெட்டித்துறையில் இருந்த குட்டித்துரை மற்றும் சின்னசோதி ஆகியோரிடம் குண்டு தயாரிப்பது பற்றி அறிந்து கொள்வதற்கு முடிவுசெய்யப்பட்டது.
குட்டித்துரை திருகோணமலை துறைமுகத்தில் வேலை பார்த்தபோது குண்டு வைப்பதற்கு கற்றுக்கொண்டிருந்தார். இவரிடம் தான் நானும் பின்னர் சிவகுமார் மூலமாக குண்டு தயாரிப்பதற்கு கற்றுக்கொண்டேன்.
பொட்டாசியம் குளோரைட் மற்றும் மனுசிலின் ஆகியவற்றை பயன்படுத்தி எவ்வாறு குண்டு தயாரிப்பது என்று அவர்களிடம் கற்றுக்கொண்ட சிவகுமாரனும் தோழர்களும் அவற்றை கடையிலே வாங்கி குண்டை தயாரிக்கின்றனர்.
கொக்குவிலில் வைத்தே இந்த குண்டு தயாரிக்கப்படுகிறது. தயாரித்த இந்த குண்டை துணிப்பை ஒன்றினுள் மண்ணை இட்டு அதனுள் புதைத்து 13 ஜூலை 1970 ஆம் திகதி சோமசிரியின் காரின் சில்லின் கீழே சிவகுமாரன் வைக்கிறான்.
நிகழ்வு முடிந்து வெளியே வந்த சோமசிறி தனது காரில் ஏறி புறப்பட்டபோது அதன் சில்லினால் அமுக்கப்பட்டு குண்டு வெடிக்கிறது. சில்லு உடைந்தது.
ஆனால் எவருக்கும் காயம் ஏற்படவில்லை. அன்று வைக்கப்பட்ட இந்த குண்டே ஈழத் தமிழ் மக்களின் போராடட்ட வரலாற்றில் அரசியல் காரணங்களுக்காக வைக்கப்பட்ட முதல் குண்டாகும்.
இந்த குண்டுவெடிப்பில் சிவகுமாரனின் தொடர்பை அறிந்துகொண்ட பொலிசார் அவனை அவனது வீட்டில் வைத்து கைது செய்தனர். ஆனால், எவரையும் அவன் காட்டிக்கொடுக்கவில்லை.
ஆனாலும், ஆனந்தரும் கைது செய்யப்படுகிறார். இவர்கள் குண்டு வைத்ததற்கு ஆதாரம் எதுவும் இல்லை என்று கூறி இரண்டரை மாதங்களின் பின்னர் இருவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
இவர்கள் இருவருக்காகவும் வாதாடுவதற்கு தமிழரசுக் கட்சியின் வழக்கறிஞர்கள் எவரும் முன்வரவில்லை.
ராஜராஜேஸ்வரன் என்ற கட்சி சார்பற்ற ஒரு வழக்கறிஞரே இவர்களுக்காக வாதாட முன்வந்து இவர்களை விடுதலை செய்ய உதவினார்.
இந்த சம்பவத்துடன் ஏனைய இளைஞர்கள் பயத்தில் கலைந்து விட்டனர்.
சிறையில் இருந்து சிவகுமாரன் வீட்டுக்கு வந்த பின்னர் நானும் பேராதனை பல்கலைக்கழகத்தில் படிப்பை முடித்த பின்னர் வீடு வருகிறேன்.
இதன் பின்னர் நாம் இருவரும் இணைந்து மேற்கொண்ட செயற்பாடுகள் பற்றி எனது அடுத்த பதிவில் விபரிக்கிறேன். இந்த பதிவில் நான் எழுதியவற்றில் அதிகமானவை சிவகுமாரன் மூலம் நான் அறிந்தவையே ஆகும்.
சத்தியசீலனின்-
‘ஈழத் தமிழ் இயக்கத்தின்’ தோற்றமும் வீழ்ச்சியும்: ஈழ விடுதலைப் போராட்டம் – (பாகம்-2)