கோவை: குடும்பத் தகராறில் மனைவியின் தலையை வெட்டிக்கொன்ற கணவர், வெட்டப்பட்ட மனைவியின் தலையுடன் போலீஸ் ஸ்டேஷன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி தாலுக்கா நாராயணன்செட்டி பாளையத்தைச் சேர்ந்தவர், சின்னப்பராஜ். தேங்காய் இறக்கும் தொழிலாளி(49). இவரது மனைவி செல்வி (40). இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். அவர்களுக்கும் திருமணமாகிவிட்டது.
தோட்டத்து வீட்டில் தனியே வசித்து வந்த தம்பதியிடையே கடந்த சில நாட்களாக அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் இன்று காலை இருவரும் அருகில் உள்ள மயில்சாமி என்பவரது தோட்டத்தில் தேங்காய் இறக்கும் பணிக்கு சென்றுள்ளனர். அப்போது கணவன் – மனைவி இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த சின்னப்பராஜ், தோட்டத்தில் தேங்காய் வெட்டுவதற்காக வைத்திருந்த அரிவாளால், செல்வியின் கழுத்தில் வெட்டியுள்ளார். இதில் செல்வியின் தலை துண்டானது. மேலும் அவரது கையிலும் வெட்டுக்காயங்கள் ஏற்பட்டுள்ளன.
அங்கிருந்த சக தொழிலாளர்கள் இந்த சம்பவத்தை பார்த்து பயந்து ஓடினர். இதையடுத்து சின்னப்பராஜ், கொலை செய்யப்பட்ட தனது மனைவியின் தலையை, சாக்குப்பையில் எடுத்து சுமார் 2 கி.மீ தொலைவில் இருக்கும் வடக்கிபாளையம் காவல்நிலையத்துக்கு நடந்து சென்றார்.
அங்கு சென்று போலீஸாரிடம், தனது மனைவியை கொலைசெய்ததைக் கூறி சரணடைந்தார்.
“என்னை ஏமாத்திட்டா சார். அதனால வெட்டிட்டேன்!” என அவர் திரும்ப திரும்பக் கூறியதில் போலீசார் பதறிப்போயினர்.
சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸார், பிரேதத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள் ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சின்னப்பராஜ் மீது கொலை வழக்கு பதிவு செய்து, போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
“கொலை செய்யப்பட்ட செல்விக்கும், வடக்கிபாளையத்தைச் சேர்ந்த மற்றொரு நபருக்கும் பழக்கம் இருந்ததாக தெரிகிறது. அதை சின்னப்பராஜ் தொடர்ந்து கண்டித்து வந்துள்ளார்.
இந்த பிரச்னை தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில், கோபமுற்று அவர் தனது மனைவியை வெட்டிக்கொலை செய்ததாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக விசாரித்து வருகிறோம்” என்றனர் போலீசார்.
– ச.ஜெ.ரவி