“ஆண்டவன் நினைச்சா அரசியலுக்கு வருவேன்னு” ரஜினி சொல்லி பல வருசம் ஆச்சு. இன்று பொய் நாளை வா கதையாக அவர் அரசியல் பிரவேசம் ரசிகர்களுக்கே சலிப்பை ஏற்படுத்திய நிலையில் இனி மனிதசக்தியால் ரஜினி அரசியலுக்கு வரவாய்ப்பில்லை.

அவர் சொல்கிற மாதிரி ஆண்டவன் வழி தான் சரியானது. ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்று சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஒன்றிய ரஜினி ரசிகர்கள் ஒரு மண்டலம் விரதம் இருந்தும் சிறப்பு யாகம் நடத்தியும் உள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள கருசல்குளம் கிராமத்தில் அமைந்துள்ளது கேட்டவரம் தரும் முத்துமாரியம்மன் கோயில்.

இந்த பகுதியில் மிக பிரசித்தி பெற்றது இந்த கோயில். இங்கு வரும் பக்தர்களுக்கு கேட்ட வரம் தரும் என்ற நம்பிக்கை இந்த பகுதி மக்களிடம் உள்ளது.

இந்த கோயிலில் கடந்த புதன்கிழமை அன்று சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க ரஜினி படத்துடன் சிறப்பு யாகம் நடைபெற்றது.

யாகத்தில் கலந்து கொண்ட ரஜினி மன்ற ஒன்றிய பொறுப்பாளர் ரஜினிபுஸ்பா கூறுகையில், “நாங்க ஆரம்பத்தில் இருந்து சூப்பர்ஸ்டார் ரஜினியின் தீவிர ரசிகர்கள். தமிழ்நாட்டில் எந்த நடிகருக்கும் இல்லாத செல்வாக்கு எங்கள் தலைவருக்கு தான் இருக்கு.

அவர் ஆரம்பத்திலே அரசியலுக்கு வந்து இருந்தா இன்றைக்கு தமிழ்நாட்டில் அசைக்க முடியாத சக்தி தலைவர் தான். ஆனால் இன்னும் அரசியல் பக்கம் வரவே தயங்குகிறார். ஆனால் அவர் அரசியலுக்குவரணும்னு தமிழ்நாட்டில் இருக்குற எல்லா ரசிகர்களும் விரும்புகிறோம்.

rajini fans yagam 1நாங்கள் பலமுறை அவர்கிட்ட அரசியலுக்கு வாங்கனு சொன்னா பாபாவை கேட்டு தான் செய்யணும்னு சொல்றார். அதனால் இனி மனித சக்தியால அவரை அரசியலுக்கு கொண்டு வர முடியாது.

அவர் விரும்புகிற ஆண்டவனால் தான் அரசியலுக்கு கொண்டு வர முடியும்னு முடிவு பண்ணி எங்க ஊரில் இருக்கும் கேட்ட வரம் தரும் முத்துமாரியம்மன் கோயிலில் சிறப்பு யாகம் நடத்தி, நாங்க ரஜினி அரசியலுக்கு வரணும்னு கேக்குற வரத்த அம்பாள் தரணும்னு வேண்டியிருக்கோம்.

புதன்கிழமை சிறப்பு யாகம் நடத்தி 48 நாள் விரதம் இருக்கிறோம். நாற்பத்தி எட்டு நாள் காவி வேஷ்டி கட்டி, மாலை போட்டு கடுமையான விரதம் இருந்து கடைசியா இந்த கோயிலில் பால்குடம் எடுத்து எங்க விரதத்தை நிறைவு செய்ய இருக்கிறோம். கண்டிப்பா எங்க தலைவர் அம்மன் அருளால் அரசியலுக்கு வருவார்” என்றார் உற்சாகமாக.

இந்த யோசனை எப்படி வந்தது என்று கேட்டபோது, “நாங்க ரஜினி அரசியலுக்கு வரணும்னு அம்மனுக்கு அபிசேகம் பண்ண போனப்ப கோயில் அர்ச்சகர் தான் நீங்க யாகம் வளர்த்து விரதம் இருங்க அம்பாள் சக்சஸ் ஆக்குவானு சொன்னாங்க.

அதான் இறங்கிடோம். மொத்தம் பதினைந்து பேர் இந்த விரதம் இருக்கிறோம். தலைவர் நம்புகிற சாமியை தான் நாங்களும் இப்ப நம்ப ஆரம்பிச்டோம்” என்று பதில் தந்தார்.

rajini fans yagam 2ஆன்மிகம் தான் அரசியலுக்கு தடையாக கருதும் ரஜினிக்கு அந்த ஆன்மிகத்தின் மூலமே ரசிகர்கள் அரசியல் ஆசையை தூண்டியுள்ளனர்.

தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கும் நேரத்தில் இந்த முறையாவது தங்கள் கனவு நிறைவேற வேண்டும் என இனி தமிழக முழுவதும் இந்த திட்டம் ரஜினி ரசிகர்களால் செயல்படுத்தபடும் என்று தெரிகிறது.

-சையது அபுதாஹிர்

Share.
Leave A Reply