சிங்கப்பூர்: சிங்கப்பூரில் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து தவறி விழுந்து தொங்கிய குழந்தையின் உயிரை 2 தமிழர்கள் காப்பாற்றிய சம்பவம், நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த இரண்டு தமிழர்களுக்கும் சிங்கப்பூர் அரசு விருது வழங்கி கவுரவித்துள்ளது.

சிங்கப்பூரில் ஜூராங் கிழக்கு எஸ்டேட் பகுதியில் ஒரு புதிய கட்டடம் கட்டும் திட்டத்தில் இணைந்து வேலை செய்து வந்தவர்கள், சுப்பிரமணியன் சண்முகநாதன் (35), பொன்னன் முத்துகுமார் (24). இவர்கள் இருவரும் தமிழர்கள்.

அவர்கள் வேலை செய்து கொண்டிருந்த இடத்திற்கு அருகே ஒரு அடுக்கு மாடி குடியிருப்பு உள்ளது. அந்த அடுக்கு மாடி குடியிருப்பில் ஒரு குழந்தையின் அழுகுரலை, சம்பவத்தன்று இருவரும் கேட்டுள்ளனர்.

அவர்கள் அங்கு ஏறிட்டு பார்த்தபோது, ஒரு பெண் குழந்தை, 2வது மாடியில் அமைந்துள்ள ஒரு வீட்டின் வெளியே துணிகளை காயப்போடுவதற்காக அமைக்கப்பட்டுள்ள மாடத்தில் இருந்து தவறி விழுந்து, தொங்கிக்கொண்டிருப்பதை பார்த்துள்ளனர்.

இது குறித்து அவர்கள் உடனடியாக சிங்கப்பூர் சிவில் பாதுகாப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். ஆனால் அவர்கள் வருவதற்குள் அசம்பாவிதம்  ஏதும் நடந்து விடக்கூடாது என கருதிய அவர்கள், காத்திருக்காமல் தாங்களே களத்தில் இறங்கினர்.

இரண்டு பேரும் தங்கள் உயிரைப் பணயம் வைத்து, இரண்டாவது மாடியில் ஏறி குழந்தையை பத்திரமாக மீட்டு கீழே கொண்டு வந்தனர்.

அவர்கள் குழந்தையை மீட்டுக் கொண்டு வந்து விட்ட நிலையில், சிங்கப்பூர் சிவில் பாதுகாப்பு படையினர் வந்து சேர்ந்துள்ளனர். அவர்கள் சண்முகநாதனையும், முத்துகுமாரையும் பாராட்டினர். அந்தக் குழந்தை ‘ஐ பாட்’ வைத்து கேம்ஸ் விளையாடியபோது தவறி விழுந்துவிட்டதாக தெரியவந்தது.

குழந்தையின் உயிரை தீரமுடன் செயல்பட்டு காப்பாற்றிய சண்முகநாதனுக்கும், முத்து குமாருக்கும் சிங்கப்பூர் சிவில் பாதுகாப்பு படை விருது வழங்கி சிறப்பித்தது.

 singapore child- tamils 2(1)

இந்த நிகழ்ச்சியில் சிங்கப்பூர் சிவில் பாதுகாப்பு படையின் 4-வது பிரிவு துணை கமாண்டர் மைக்கேல் சுவா, சண்முகநாதனையும், முத்துகுமாரையும் வெகுவாக பாராட்டி விருது வழங்கி நன்றி தெரிவித்தார். அப்போது உள்ளூர் எம்.பி. ஆங் வெய் நெங்கும் உடனிருந்தார்.

விருது பெற்ற முத்துகுமார் கூறுகையில், “இந்த விருது கிடைத்தது மகிழ்ச்சி தருகிறது. இதுபோன்ற வீர தீர செயலை பலரும் முன்வந்து செய்ய இது உந்துதலாக அமையும்.

இப்படி செய்கிறபோது, நாளை என் பிள்ளைக்கு ஒரு அபாயகரமான நிலையில், மற்றவர்கள் உதவுவார்கள்” என நெகிழ்ச்சியுடன் கூறினார்.

Share.
Leave A Reply