மங்கையின் கூந்தல் வாசம் மணவாளனை மயக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்தது தான். ஆனால் அலகாபாத்தை சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவாவின் கூந்தலோ, பெண்கள் வர்க்கத்தையே மயக்கத்தில் ஆழ்த்தும் வகையில் உள்ளது.
தனது உயரத்தை விட மூன்று அங்குலம் நீண்ட கூந்தலை உடைய ஸ்மிதா, இந்தியாவின் நீண்ட கூந்தல் கொண்ட பெண் என்ற சாதனையை படைத்துள்ளார்.
தற்போது 7 அடி நீளம் கொண்ட கூந்தல் உடையவராக உள்ள ஸ்மிதா, கூந்தல் நீளத்தில் உலக சாதனை படைப்பதே தனது லட்சியம் என்று கூறியுள்ளார்.
37 வயதாகும் ஸ்மிதா, தனது கூந்தல் 6 அடி நீளம் இருந்தபோதே லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துவிட்டார்.
தனது சாதனை குறித்து ஸ்மிதா கூறுகையில், எனது வாழ்க்கை ஓய்வில்லாதது. எனது கூந்தலின் நீளம் 7 அடி. எனது கூந்தலுக்காக பல விருதுகளை வென்றுள்ளதுடன், லிம்கா (Limca Book of Records) சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்துள்ளேன்.
கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடிக்க திட்டமிட்டுள்ளேன் என்றார்.
கடைவீதிக்கு செல்லும் போது பலரும் எனக்கு மரியாதை தருகின்றனர். என்னுடன் பேச ஆர்வப்படுவதுடன், எப்படி இவ்வளவு நீண்ட கூந்தலை வளர்க்கின்றீர்கள் என்று கேள்வி எழுப்புகின்றனர்.
பெண்கள் மற்றும் குழந்தைகள் என்னுடைய கூந்தலின் நீளம் உண்மையானது தானா என்று இழுத்து பார்க்கின்றனர்.
உண்மை என்று தெரிந்தவுடன் நீங்கள் அதிர்ஷ்டசாலி என்று கூறிவிட்டு செல்கின்றனர் என்ற ஸ்மிதா மேலும் தெரிவித்தார்.
குழந்தை பருவத்திலிருந்தே கூந்தல் வளர்ப்பதில் ஸ்மிதா ஆர்வத்துடன் இருந்து வருகிறார். ஸ்மிதாவின் முயற்சிக்கு அவரது குடும்பத்தினரும் ஆதரவளித்து வருகின்றனர்.
உத்தரப்பிரதேசத்தில் உள்ள உள்ளூர் எண்ணெய் தயாரிப்பு நிறுவனங்களின் தூதுவராகவும், அங்கு நடைபெறும் அழகி போட்டியின் நடுவராகவும் ஸ்மிதா செயலாற்றி வருகிறார்.
சீனாவின் க்சி குய்பிங் 18 அடி நீள கூந்தலுடன் கின்னஸ் சாதனை படைத்துள்ளதால், தனது கின்னஸ் சாதனைக்கு இன்னும் நீண்ட பயணத்தை ஸ்மிதா மேற்கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.