நேபாளத்தில் கடந்த 80 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள மிகப்பெரும் நிலநடுக்கத்தில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,400 ஐத் தாண்டிவிட்டது.
நிலநடுக்கம் எவரெஸ்ட் மலையில் ஏற்படுத்திய பனிச்சரிவுகளில் சிக்கி 17 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஓராண்டுக்கு முன்னர் இங்கு ஏற்பட்ட பனிச்சரிவுகளில் 16 மலையேறி வழிகாட்டிகள் பலியானமை இங்கு நினைவுகூரத்தக்கது.
இதனிடையே, நேற்றைய பூகம்பத்தைத் தொடர்ந்து நேபாளம், இந்தியா மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளில் இன்று மீண்டும் மிகவும் சக்திவாய்ந்த நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.
நேபாளத் தலைநகர் காத்மண்டுவிலிருந்து 60 கிலோமீட்டர் தொலைவாக 6.7 அளவில் பதிவான இந்த நிலநடுக்கத்தால் பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு திறந்தவெளிகளை நோக்கி ஓடினர்.
இராணுவ உதவி ஹெலிகாப்டர்கள் பறந்து திரிகின்றன. பாதிக்கப்பட்டவர்களை நோக்கி, மேற்கு நேபாளத்திற்கு நிவாரணப் பொருட்கள் விரைந்துள்ளன.
காத்மண்டுவில் குறைந்தது ஐந்து இடங்களில் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
வீடுகளுக்கு செல்ல மக்கள் அச்சம்
பிரதமரின் அதிகாரபூர்வ இல்லத்துக்கு அருகே, தரைமட்டமாகிக் கிடக்கின்ற உள்ளூர் வரி அலுவலகத்துக்குள் இருந்து 4 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இலகுவில் சென்றடையமுடியாத பல பிரதேசங்களுடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் நேற்றைய நிலநடுக்கத்தின் உயிரிழப்புகள் இன்னும் அதிகமாகவே இருக்கும் என்று ஊகிக்கப்படுகின்றது.
மலைப்பகுதிகளுக்கான பாதைகள் மண்சரிவுகளால் மூடப்பட்டுள்ளன.
சடலங்கள் காத்மண்டுவில் இருக்கின்ற மருத்துவமனைகளுக்கு கொண்டுவரப்படுகின்றன. காயமடைந்தவர்கள் நிரம்பிவழிவதால் மருத்துவமனைகள் சமாளிக்கமுடியாமல் திணறுகின்றன. தலைநகரில் மட்டும் 700க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
நகரமத்தியில் உள்ள திறந்தவெளி மைதானம் ஒன்றில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடாரங்களுக்குள் தஞ்சம் புகுந்துள்ளனர்.
குடியிருப்புகளை இழந்தவர்களும் மீண்டும் நிலநடுக்கம் ஏற்படலாம் என்ற அஞ்சியவர்களுமாக பெருமளவிலானவர்கள், குளிரையும் ஈரத்தையும் தாங்கிக்கொண்டு நேற்றைய இரவுப்பொழுதை வெளியிலேயே கழித்துள்ளனர்.
வெளிநாடுகள் உதவி
இயற்கைப் பேரழிவால் திணறுகின்ற நேபாள அரசுக்கு உதவுவதற்கு வெளிநாட்டுத் தலைவர்களுடன் தொண்டுநிறுவனங்களும் முன்வந்துள்ளன.
இலகுவில் செல்லமுடியாத பகுதிகளில் மீட்புப் பணிகளுக்காக இந்தியா ஹெலிகொப்டர்களை வழங்கி உதவியுள்ளது.
அமெரிக்கா, பிரிட்டன், சீனா, பாகிஸ்தான் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் உதவி அணியில் இணைந்துள்ளன.
செஞ்சிலுவை சங்கம், ஒக்ஸ்பாம், எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு கிறிஸ்டியன் எய்ட் ஆகிய நிறுவனங்களும் அங்கு களத்தில் உள்ளன.
அவசர நிலைமைகள் ஏற்படலாம் என்ற எதிர்பார்ப்பில் நேபாளத்தில் ஏற்கனவே தயார்படுத்தல்களை மேற்கொண்டிருந்ததாக ஒக்ஸ்போம் தொண்டுநிறுவனத்தின் மனிதநேயப் பணிகளுக்கான இயக்குநர் ஜேன் கொக்கிங் தெரிவித்தார்.
பனிச்சரிவு அச்சம்
எவரெஸ்ட் மலைப்பகுதியில் இன்னும் பனிச்சரிவுகள் ஏற்படலாம் என்று அஞ்சப்படுகின்றது.
அங்கு அடிவார முகாமின் ஒருபகுதி பனிச்சரிவினால் மூடப்பட்டதில் கொல்லப்பட்ட 17 பேரில் கூகுள் நிறுவனத்தின் பணியாளரான டான் ஃப்ரெடின்பர்க் பலியானவர்களில் ஒருவர் என்று அந்த நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
அங்கு 61 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களை காத்மண்டுவுக்கு ஏற்றிவர முயற்சிக்கும் ஹெலிகாப்டர்கள் கடுமையான மேகமூட்டத்துக்கு மத்தியிலும் பலரை மீட்டுவந்துள்ளன.
காத்மண்டுவுக்கும் பொக்காரா நகருக்கும் இடைப்பட்ட மத்திய நேபாளத்தில் சனிக்கிழமை காலை 7.8 அளவில் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் நேபாளத்தை தாண்டி இந்தியாவிலும் வங்கதேசத்திலும் திபத் சீனப் பிராந்தியத்திலும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
காத்மண்டுவில் புகழ்பெற்ற 9 மாடி தரகா டவர், பதானில் தர்பார் ஸ்கொயர் ஆகியவை தரைமட்டமாகிப் போகின.
1934ஆம் ஆண்டு ஏற்பட்ட கோர நிலநடுக்கத்தில் காத்மண்டு நகரம் பேரழிவை சந்தித்தது. இந் நிலநடுக்கத்தால் அண்டை நாடான இந்தியாவின் டெல்லி உட்பட பல மாநிலங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டது.