ஜெ. சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து பவானி சிங் நீக்கம்: உச்ச நீதிமன்றம் அதிரடி!

புதுடெல்லி: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு மேல் முறையீட்டு வழக்கில் ஆஜராகி வந்த அரசு வழக்கறிஞர் பவானி சிங்கை நீக்கி உச்ச நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்டோர் மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கிலும், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராக பவானிசிங் ஆஜரானார்.

அவரது நியமனத்தை எதிர்த்து தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த நீதிபதிகள் மதன் பி.லோகுர் மற்றும் ஆர்.பானுமதி ஆகியோர் முரண்பட்ட தீர்ப்பு வழங்கியதால், மனு மீதான விசாரணை 3 நீதிபதிகள் அமர்வுக்கு பரிந்துரைக்கப்பட்டது. அதன்படி நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர்.கே.அகர்வால், பிரபுல்ல சி.பந்த் ஆகியோர் முன்னிலையான அமர்வில் இந்த விசாரணை நடைபெற்றது.

அன்பழகன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அந்தியார்ஜூனா தன்னுடைய இறுதி வாதத்தில், மேல்முறையீட்டு மனுவின் மீது கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பவானிசிங் வாதாடுவதற்கு எந்தவகையான சட்டரீதியான உறவும் கிடையாது என்றும், அவர் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சாதகமாக செயல்பட்டார் என்றும் கூறினார்.

ஜெயலலிதா தரப்பில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் பாலி நாரிமன், அரசு வழக்கறிஞர் நியமனம் என்பது குறிப்பிட்ட வழக்கு தொடர்பானது என்றும், பவானிசிங் நியமனத்தில் விதிமுறைகள் சரியாக கடைப்பிடிக்கப்பட்டுள்ளன என்றும் கூறினார்.

இத்தைகைய பரபரப்பான சூழ்நிலையில், நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர்.கே.அகர்வால், பிரபுல்ல பந்த் ஆகியோர் கொண்ட அமர்வு இன்று காலை தீர்ப்பளித்தது.

நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், “பவானி சிங்கை, தமிழக லஞ்ச ஒழிப்பு துறை நியமித்திருக்கிறது. வழக்கு கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் நடைபெறுவதால் அங்குள்ள நீதிமன்றமே அரசு வழக்கறிஞரை நியமித்திருக்க வேண்டும்.
அரசு வழக்கறிஞரை நியமிக்க தமிழக அரசுக்கு எந்த உரிமையும் இல்லை. ஆனால், இவ்வழக்கில் மறு விசாரணைக்கு அவசியமில்லை” என தெரிவித்துள்ளனர்.

மேலும் நீதிபதிகள் கூறும்போது, “மனுதாரர் அன்பழகன், 90 பக்கங்களுக்குள் எழுத்துப்பூர்வமான வாதத்தை தாக்கல் செய்ய வேண்டும், கர்நாடக அரசு 50 பக்கங்களுக்குள் எழுத்துப்பூர்வ வாதத்தை நாளைக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

மேல்முறையீட்டு வழக்கில் அன்பழகன் மற்றும் கர்நாடக அரசும் எழுத்துமூலம் அளிக்கும் வாதத்தை பெற்றுக் கொண்டு தீர்ப்பளிக்கவும் கர்நாடக உயர் நீதிமன்றத்துக்கு அறிவுறுத்தியுள்ள உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ஊழல் வழக்குகள் சமுதாயத்தை எப்படி பாதிக்கும் என உணர்ந்து தீர்ப்பு அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

உச்ச நீதிமன்றத்தின் அதிரடி அறிவிப்பை தொடர்ந்து சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம் விரைவில் தீர்ப்பளிக்கலாம் என்ற எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது.

Share.
Leave A Reply