இந்தோனேசியாவுக்குள் போதைப்பொருள் கடத்திய குற்றத்துக்காக அவுஸ்திரேலியாவை சேர்ந்த மயூரன் சுகுமாரன் (34 வயது ) மற்றும் அன்ரூ சான் ( 31 வயது) ஆகியோருக்கு இன்று நள்ளிரவுக்கு பின்னர் சரியாக 12.25 மணிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
நுசாஹம்பங்கன் தீவின் காடு ஒன்றுக்குள் வைத்து இவர்களுக்கு இந்த மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இவர்களுடன் வேறு 6 சிறைக் கைதிகளுக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இவர்களுக்கான இந்த தண்டனையை துப்பாக்கி தரித்த 12 பொலிசார் நிறைவேற்றினர்.
இவர்களுக்கான இந்த மரண தண்டனை எந்த இடையூறுகளும் இன்றி நிறைவேற்றப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தனது கண்கள் கட்டப்படாமலேயே தனது மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்று மயூரன் கேட்டிருந்தார்.
மரணத்தை கண்டு தான் அஞ்சவில்லை என்ற செய்தியை தனது தயாருக்கு வழங்குவதற்காக ‘ மன வலிமையுடனும் இறைமையுடனும்’ தனது சாவை எதிர்கொள்ள விரும்புவதாக அவர் கூறியிருந்தார். இவர்களுக்கான இறுதியாக KFC இல் இருந்து உணவு வழங்கப்பட்டிருந்தது.
இதேவளை, பிலிப்பைன்ஸை சேர்ந்த மேரி ஜேன் வேலோசோ என்பவரின் மரண தண்டனை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பிலிப்பைன்ஸ் அரசாங்கம் இன்று இந்தோனேசியாவின் சட்ட மா அதிபருக்கு அனுப்பிய அவரச கடிதத்தில் இவரது மரண தண்டனையை ஒத்திவைக்குமாறு கோரி இருந்ததை அடுத்தே தண்டனை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
வேலோசோவை தவறுதலாக போதைப்பொருள் கடத்துவதற்கு தானே அனுப்பி வைத்ததாக மரியா கிறிஸ்ரினா சேர்ஜியோ என்ற பெண் பிலிப்பைன்ஸ் பொலிஸில் ஒத்துக்கொண்டதாகவின் இதன்காரணமாக வேலோசோவுக்கான தண்டனையை ஒத்திவைக்குமாறும் இந்த கடிதத்தில் பிலிப்பைன்ஸ் அரசு கேட்டிருந்தது.
மயூரன் சுகுமாரனும் அன்ரு சானும் இன்னும் சில மணி நேரங்களில் இறுதி விடை பெறுவர்: இருவரும் எவ்வாறு தமது இறுதி நேரத்தை செலவிடுவர்?
27-04-2015
போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டுக்காக மரண தண்டனை வழங்கப்பட்டுள்ள மயூரன் சுகுமாரன் மற்றும் அன்ரூ சான் ஆகியோர் இன்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவின் பின்னர் இந்தோனேசியாவின் ஜாவாவிலுள்ள நுசாகம்பன்கன் தீவில் முக மூடி அணிந்த 12 பேரை எதிர்கொள்வர்.
இந்த 12 பேரில் மூன்று பேர் மட்டும் ரவைகள் நிரப்பபட்ட துப்பாக்கிகளை ஏந்தியிருப்பார். ஏனைய 9 பெரும் வெற்று துப்பாக்கிகளை மட்டுமே ஏந்தியிருப்பார்.
இதற்காக, பட்டு சிறையில் அடைத்து வைக்கப்படிருந்த சுகுமாரனும் சானும் 3 கிலோ மீற்றர் தொலைவில் நுசாகம்பன்கன் தீவில் உள்ள ‘சாவுப் பள்ளத்தாக்கு’ என்று அழைக்கப்படும் நிர்பாய என்ற இடத்திற்கு கூட்டிச் செல்லப்பட ஏற்பாடுகள் நடைபெற்றுவருகின்றன.
சுடப்படுவதற்கு முன்னர் இவர்கள் தமது கண்கள் கட்டப்படுவதை விரும்புகிறார்களா என்பதை தீர்மானிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படும்.
அத்துடன் வெள்ளை நிற உடை அணிவிக்கப்படும். இவர்கள் இருவரதும் கைகள் அல்லது கால்கள் கட்டப்படவிருக்கும் 3 மீற்றர் உயர கம்பம் அலல்து கதிரையில் இருந்து 10 மீற்றர்கள் தொலைவில் 12 முகமூடி அணிந்த துப்பாக்கிதாரிகள் நிற்பர்.
இருவரதும் நெஞ்சில் துப்பாக்கியால் சுடப்படுவதற்கான குருசு அடையாளம் வைக்கப்படுவதற்கு முன்னர் இவர்கள் நிற்க விரும்புகிறார்களா, இருக்க விரும்புகிறார்களா அல்லது மண்டியிட்டு இருக்க விரும்புகிறார்களா என்று கேட்கப்படும்.
பின்னர் இவர்களின் இருதயத்தில் சுடப்படுவதற்கு முன்னர் தம்மை சாந்தப்படுத்திக் கொள்ளும் பொருட்டு மூன்று நிமிடங்கள் வழங்கப்படும்.
இதன் பின்னர் உத்தரவிடுபவர் தனது வாளை அசைத்து சைகை காட்டியதும் துப்பாக்கிதாரிகள் இருவரின் நெஞ்சில் வைக்கப்பட்ட குருசு அடையாளத்தை குறிவைத்து சரமாரியாக சுடுவர்.
இவர்கள் இறந்து விட்டார்களா என்று மருத்துவர் உறுதிப்படுத்துவார். இவர்கள் இறக்கவில்லை என்று அவர் அறிந்தால், பின்னர் அவர்களின் தலையில் சுடப்பட்டு அவர்கள் கொல்லப்படுவர். கொல்லப்பட்ட பின்னர் இவர்கள் இருவரினதும் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும்.
இந்தோனேசிய சட்டத்தின்படி தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு 72 மணித்தியாலங்களுக்கு முன்னர் குற்றவாளிகளுக்கு அது குறித்து அறிவிக்கவேண்டும்.
இந்த அறிவிப்பு கடந்த சனிக்கிழமை விடுக்கப்பட்டிருந்தது. இந்த நேரம் இன்று முடிவடையும் நிலையில், இவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும் நேரத்தினை இந்தோனேசிய சட்ட மா அதிபர் இன்று அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை இன்று காலை 9 மணிக்கு மயூரனினதும் சானுவினதும் உறவினர்களை இருவரையும் பார்ப்பதற்கு சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்படுவர்.
சுகுமாரனின் பெற்றோரான ரஜி, சாம், சகோதரன் சிந்து, சகோதரி பிருந்தா மற்றும் சிந்துவின் மனைவி மற்றும் மாமிமார் மாமாமார் என்று 13 பேர் அவரை இறுதியாக காணுவதற்கு காத்துக்கிடக்கின்றனர்.
இதேவேளை, நேற்று முன்தினம் தான் அன்ரூ சானுக்கும் அவரது காதலிக்கும் சிறையில் திருமணம் நடைபெற்றது. எளிமையாக நடைபெற்ற இந்த வைபவத்தில் அவரது உறவினர்களும் நண்பர்களும் கலந்து கொண்டனர்.
இவர்களின் மரண தண்டனைக்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டு விட்டதாக இந்தோனேசிய வெளிநாட்டமைச்சர் தெரிவிதுள்ளபோதிலும் ஜனாதிபதி இறுதி நேரத்தில் கருணை காட்டுவார் என்று சிறு நம்பிக்கையில் இருவரது உறவினர்களும் இருக்கின்றனர்.
ஆனால் , இருவரும் கொல்லப்பட்ட பின்னர் அவர்களின் உடல்களை வைப்பதற்கான சவப் பெட்டிகள் கூட அவர்களின் பெயர்கள் எழுதப்பட்டு ஏப்பிரல் 29 என்று திகதி குறிப்பிடப்பட்டு தயார் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இருவரும் தமது இறுதி நள்ளிரவை தமக்கு விரும்பிய மத தலைவர் ஒருவருடன் கழிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மெல்போனைச் சேர்ந்த கிறிஸ்டி புகிங்க்காம் என்ற பாதிரியாரை சுகுமாரன் தெரிவு செய்துள்ளார். அத்துடன், இறுதிவரை ஓவியம் வரைவதற்கு தன்னை அனுமதிக்குமாறும் அவர் கேட்ட்டுளார்.
கடந்த பத்து நாட்களாக தனது இறுதி நாட்களை சித்திரிக்கும் பல ஓவியங்களை அவர் வரைந்துள்ளார்.