நேபாளத்தில் கடந்த 25ஆம் தேதி ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில நடுக்கத்தால் சின்னாபின்னமான அந்த நாட்டில் எங்கு பார்த்தாலும், இடிந்து விழுந்த கட்டடங்கள், நொறுங்கிப்போன வீடுகளைத்தான் காண முடிகிறது.

நிலநடுக்கம் காரணமாக கட்டடம் இடிந்ததில் இடிபாடுகளுக்குள் சிக்கிய ஒருநபர் 3 நாட்களாக சிறுநீரை மட்டுமே குடித்து உயிரைக் கையில் பிடித்தபடி இருந்த அவலம் தெரிய வந்துள்ளது. அந்த நபர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். நேபாள நாட்டு நிலநடுக்கம் பல சோக வடுக்களை ஏற்படுத்தியுள்ளது.

பல ஆயிரம் பேரின் உயிரைக் குடித்த இந்த நிலநடுக்கமானது, பலரைக் காணாமல் போகச் செய்து விட்டது. காணாமல் போனவர்களை தொடர்ந்து மீட்புப் படையினர் தேடி வருகின்றனர்.

nepal earth quake youth 1

இந்த நிலையில், ரிஷி கனல் என்பவர் 3 நாட்களாக இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த நிலையில் பத்திரமாக மீட்கப்பட்டார். அவர் உயிர் தப்பிய விதம் குறித்து கூறியபோது அனைவருமே மலைத்துப் போய் விட்டனர்.

காத்மாண்டுவில் உள்ள ஒரு ஹோட்டலுக்குக் கீழே இருந்த போது நிலநடுக்கம் காரணமாக அந்த ஹோட்டல் இடிந்து விழுந்து அதில் சிக்கிக் கொண்டார் ரிஷி. அவரைச் சுற்றிலும் கட்டட இடிபாடுகளும், பிணங்களுமாக இருந்தனவாம்.

குடிக்க தண்ணீர் கூட இல்லாத நிலையில், தனது சிறுநீரையே குடிக்கும் அவலத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார் இவர். வாயெல்லாம் வெளுத்து, விரல் நகங்கள் எல்லாம் வெளுத்து பெரும் தவிப்புக்குள்ளாகியுள்ளார்

ரிஷி. 3 நாட்கள் இப்படியாக தவித்து வந்த அவரை மீட்புப் படையினர் கண்டுபிடித்து மீட்டுள்ளனர். கிட்டத்தட்ட 80 மணி நேரம் இவர் உயிரைக் கையில் பிடித்தபடி தத்தளித்துள்ளார். அவரை காத்மாண்டுவில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

கடும் நிலநடுக்கத்திற்கு பிறகும் நேபாள மக்களிடையே பீதி குறையவில்லை. சோதனை மேல் சோதனையாக சிறியதும் பெரியதுமாக 65 நில நடுக்கங்கள் கடந்த 3 நாட்களில் ஏற்பட்டுள்ளன.

நில நடுக்கத்திற்கு இதுவரை 4,400க்கும் அதிகமானோர் பலியாகி விட்டனர். 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர் என்று நேபாள உள்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.

 

33 மணி நேரத்திற்குப் பின் உயிருடன் மீட்கப்பட்ட பெண்!

nepal earth quake womanமுன்னதாக, தலைநகர் காத்மாண்டு அருகே உள்ள பசுந்தரா பகுதியில் உள்ள ஐந்து அடுக்குமாடி கட்டடம் ஒன்றும் இடிந்து விழுந்தது.

அதில் சிக்கிய சுனிதா சிதௌலா என்ற பெண்ணை, இந்திய பேரிடர் மீட்பு படை வீரர்கள் 33 மணி நேரத்திற்கு பிறகு உயிருடன் மீட்டுள்ளனர்.

இது குறித்து மீட்புப் பணியில் ஈடுபட்ட இந்திய வீரர் குலிஷ் ஆனந்த் கூறுகையில், “இரண்டு தடுப்புகளுக்கு இடையே பெண் ஒருவர் சிக்கியிருப்பதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது.

உடனே நாங்கள் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டு இடிபாடுகளை அகற்றினோம். சில மணி நேரத்திற்குப் பின் அந்தப் பெண் சிக்கிய தடுப்புகளை நெருங்கினோம்.

அப்போது அதில் இடைவெளி இருப்பது தெரிந்தது. இதனால் அவர் உயிருடன் இருப்பார் என்ற நம்பிக்கையோடு முன்னேறினோம்.

நாங்கள் நினைத்தவாறே அவர் உயிருடன் இருப்பது கண்டு மகிழ்ச்சியடைந்தாலும், அவர் மயக்க நிலையில் இருந்தார். அவருக்குத் தேவையான உயிர் காக்கும் முதலுதவி அளித்து, மேலே கொண்டு வந்தோம்” என்றார்.

33 மணி நேரத்திற்கு பின் உயிருடன் மீட்கப்பட்டது குறித்து பரவசத்துடன் கூறிய சிதௌலா, “புதுப்பிறவி என்பதை உணர்கிறேன்” என்கிறார்.

Share.
Leave A Reply