சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள 19வது திருத்தச்சட்டத்தின் மூலம், சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவின் அரசியல் எதிர்காலம் சூனியமாக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடத் திட்டமிட்டிருந்த அவருக்கு, 19வது திருத்தச்சட்டம், தேர்தலில் போட்டியிட முடியாத நிலையை ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்ட 19வது திருத்தச்சட்டம், இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள், சிறிலங்காவில் எந்த தேர்தல்களிலும் போட்டியிடத் தடை விதிக்கின்றது.

கோத்தாபய ராஜபக்ச சிறிலங்காவில் இரட்டைக் குடியுரிமையைக் கொண்டுள்ளவர் என்பதால், அவர் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில், அரசியல் கட்சியின் ஊடாகவோ அல்லது சுயேட்சையாகவோ போட்டியிட முடியாது.

கோத்தாபய ராஜபக்ச, இரட்டைக் குடியுரிமையைக் கொண்டுள்ளவர் என்பதை, சிறிலங்காவின் குடிவரவு குடியகல்வு திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.

சிறிலங்கா இராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர், அவர் 10 ஆண்டுகளாக அமெரிக்காவில் தங்கியிருந்தார்.

மகிந்த ராஜபக்ச அதிபரானதும், 2005ம் ஆண்டு நாடு திரும்பிய அவர், பாதுகாப்புச் செயலராகப் பொறுப்பேற்றிருந்தார்.

கோத்தாபய ராஜபக்ச அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடலாம் என்று பரவலான எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது.

அவரை நாடாளுமன்றத் தேர்தலில் களமிறக்குவதற்கு, சிங்கள- பௌத்த கடும்போக்குவாதக் குழுக்கள் தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டிருந்தன.

அண்மையில் இணையத்தளம் ஒன்றுக்கு அளித்திருந்த செவ்வியில் கூட, தான் அரசியலில் ஈடுபடக் கூடும் என்று கோத்தாபய ராஜபக்ச தெரிவித்திருந்தார்.

ஆனால், 19வது திருத்தச் சட்டம் இரட்டைக் குடியுரிமை கொண்ட அவரை, தேர்தலில் போட்டியிட அனுமதிக்காது.

அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் அவர் போட்டியிட வேண்டுமானால், அவர் அமெரிக்க குடியுரிமையை தியாகம் செய்ய வேண்டும் என்று சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

basilஅதேவேளை, முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச, நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு 19வது திருத்தச்சட்டம் தடையை விதிக்கவில்லை என்றும், சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

பசில் ராஜபக்ச அமெரிக்க குடியுரிமை கொண்டவர் அல்ல என்றும், வதிவிடஉரிமையை (கிறீன் காட்) மட்டுமே அவர் கொண்டவர் என்பதால் தேர்தலில் போட்டியிடத் தடையில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

பசில் ராஜபக்ச கிறீன் காட் உரிமையாளர் என்றால், அவர் தேர்தலில் போட்டியிட அரசியலமைப்பு ரீதியான தடை இருக்காது என்று, அரசியலமைப்பு விவகார சட்டநிபுணர் ஜெயம்பதி விக்கிரமரட்ண தெரிவித்துள்ளார்.

நாமல் ராஜபக்சவுக்கும் ஆப்பு வைத்தது 19வது திருத்தச்சட்டம் 

namal-rajapaksa-300x1992021ம் ஆண்டு நடைபெறும் சிறிலங்காவின் அடுத்த அதிபர் தேர்தலில், ராஜபக்ச குடும்பத்தின் வாரிசான நாமல் ராஜபக்ச போட்டியிடும் வாய்ப்பை இழந்துள்ளார்.

19வது திருத்தச்சட்டத்தின் மூலம், சிறிலங்கா அதிபர் தேர்தலில், போட்டியிடும் வேட்பாளரின் ஆகக்குறைந்த வயதெல்லை, 35 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

முன்னர், 32 வயதைப் பூர்த்தி செய்தவர்கள் அதிபர் தேர்தலில் போட்டியிட முடியும் என்ற நிலை இருந்தது.

ஆனால், 19வது திருத்தச்சட்டத்தின் மூலம், இது 35 வயதாக உயர்த்தப்பட்டுள்ளதால், வரும் 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறும் அடுத்த அதிபர் தேர்தலில் நாமல் ராஜபக்சவினால் போட்டியிட முடியாத நிலை ஏற்படும்.

2021ம் ஆண்டு அதிபர் தேர்தலில் நாமல் ராஜபக்சவைப் போட்டியிட வைக்கும் திட்டத்துடனேயே, மகிந்த ராஜபக்ச தனது அரசியல் நகர்வுகளை மேற்கொண்டிருந்தார்.

ஆனால், 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் அடுத்த அதிபர் தேர்தல் நடத்தப்படும் போது, நாமல் ராஜபக்ச 35 வயதைப் பூர்த்தி செய்யமாட்டார்.

1986ம் ஆண்டு ஏப்ரல் 10ம் நாள் பிறந்த நாமல் ராஜபக்சவினால், அடுத்த அதிபர் தேர்தல் முடிந்து மூன்று மாதங்களின் பின்னர் தான், அதிபர் வேட்பாளராகப் போட்டியிடும் தகைமையைப் பெற முடியும்.

இதனால், அவர் அடுத்த தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

19வது திருத்தச்சட்டத்தில், அதிபர் வேட்பாளரின் குறைந்தபட்ச வயதெல்லையை அதிகரித்தமைக்கு, நாமலைப் போட்டியிட முடியாமல் தடுப்பதே முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.

எனினும், நாட்டுக்குத் தலைமை தாங்கும் அதிபர், அதற்குரிய தகைமையுடையவராக இருக்க வேண்டும் என்பதற்காகவே, வயதெல்லை அதிகரிக்கப்பட்டதாக நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply